ஒவ்வொருவருக்கும் அவன் செய்யும் வினை வெவ்வேறு ரூபத்தில் வெளிவருமா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், எனக்கு அது இடது கை ஆள்காட்டி விரல் ரூபத்தில் ஆட்டம் காட்டி விட்டது. சாதாரணமாக ஒரு பாட்டிலை குளிரூட்டியில் இருந்து எடுக்கும் முயற்சியில், விரல் தொய்வுற, கடைசியில் அறுவை சிகிச்சை வரையில் கொண்டு போய் விட்டு விட்டது. சிகிச்சைக்காக இந்தியா சென்றதும், மறுநாளே அறுத்துப் பொருத்தி நேராக்கப்பட்டதும் சிறப்பாக நிகழ்ந்தன. என்ன மகளின் வருகை பொங்கல் தினங்களில் சின்ன ஆறுதல். அதன் பின் மகள் பணி நிமித்தம் மீண்டும் மைசூர் செல்ல, மனையாளும் (சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவத்த நெற்றியில் பொட்டு வைத்து) தேவையற்ற ஆணி பிடுங்கக் கிளம்பி போக, நான் தனிமையில். தேவர் மகனில் வடிவேலு சொல்வது போல ' தின்பதில் கழுவி, கழுவதில் தின்று ' கொடுமை தான். தாகத்துக்கு ஒரு டீ குடிக்கக் கூட வக்கில்லாமல் போனாயே (நாயே என்றும் படிக்கலாம்!) என்று கழிவிரக்கம் எள்ளி நகையாடுது. ஆனால், இந்த துன்பத்திலும் பல படிப்பினைகள். யாரும் யாருக்காகவும் தமது கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. சந்தர்ப்பவாதம் எல்லா உறவுகளிடமும் உள்ளது. சமயம் பார்த்து வெளியே வந்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளும். பிள்ளைகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விட, தமக்கு யார் தயவு தேவை என்பதைப் பொறுத்த நிலைப்பாட்டினை எடுக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தன் கையே தனக்குதவி, யாரையும் எதற்கும் நம்பாதீர்!