Tuesday, January 23, 2018

விளக்கு


விளக்குக்கு திரி முக்கியம். 

எரிபொருளும் முக்கியம். 

அதைவிட முக்கியம் பிராணவாயு. 

மூன்றும் அளவாகக் கிடைக்கும் விளக்கு பிரகாசமாக ஒளிவிடும். 

ஆனால் நடைமுறையில் அப்படி அமைவதில்லை. 

சில சமையங்களில் மூன்றும் இருந்தும் விளக்கு ஓட்டையாயிருந்தால் அவ்வளவும் பாழ். 

சில சுடர்கள் சுவாசிக்க முடியாமல் தள்ளாடித், திண்டாடிக் கடைசியில் உயிரை விடவும் செய்யும். 

அணையும் போது மட்டும் பிரகாசமாய் எரியும் சுடர்களும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. 

மொத்தத்தில் விளக்கின் நோக்கம் வெளிச்சமூட்டுவது என்பதை மறந்து போனால் அந்த விளக்கால் யாருக்கும் லாபமில்லை. 

Monday, December 11, 2017

நிலா


நிலவு விசித்திரமான. துணைக்கோள்;
சில துணைவியரைப் போன்று.
சுயசிந்தனையின்றி கொண்டோனின் எண்ணங்களை
மட்டும் பிரதிபலிப்பதால்.
அதனால்தான் ஆணாதிக்க சமூகம் நிலவை ஆராதிக்கிறது.
சூரியனாய் என்றாவது சுட்டெரித்தால்
பொறுக்க மாட்டாமல்
கடுஞ்சொல்லாலும், கைகலப்பாலும்
தம் கட்டுக்குள் வைக்கப் பிரயத்தனம் செய்யும்.
மீறினால் சமுதாயச் சீரழிவென்று கொக்கரித்து
தம் தோல்வியை தடம்மாற்றும்.
பெண் தெய்வம் சகலத்தையும் கல் மனதுடன்
தாங்கிக் கொள்ளப் படைக்கப்பட்ட ஜென்மமா?
ஓ, அதுதான் உண்மையான ஜென் நிலை போலும்.

    -    நிலா    - தோஹா – 9 டிசம்பர் 2017


Saturday, November 11, 2017

இங்கிதம்சம்பிரதாயமான நலன் விசாரிப்புகள்
கண்களால் உருவத்தையும் உடையையும்
எடை போடும் படலம்
இறுதியாக உங்களுக்கு எவ்வளவு சம்பளம்
மனதை அரிக்கும் கேள்வி.
பதில் என்னவாக இருந்தாலும்
எப்படி? கஷ்டமா இல்லையா?
என்று தன்னிலையை ஸ்திரப்படுத்த
ஒரு கேள்வியும் அத்தோடு ஒரு
இழிவான சிரிப்பு.
இங்கிதம் என்னும் வஸ்து
எவ்வளவு பணம் இருந்தாலும்
இந்தக் கூட்டத்துக்கு
மருந்துக்குக் கூட இல்லை என்பதை
எண்ணி நான் நகைப்பதை
தான் கேட்ட அறிவு பூர்வமான
கேள்வியால் நிலை குலைந்து
நான் சரணாகதியாகிய நிலை
என்று எண்ணும் அற்பப் பதர்கள்.
ஒரு போது ஆணிடம் வருவாயையும்
பெண்ணிடம் வயதையும் கேட்கக் கூடாதென்பது
அடிப்படை நாகரீகம்.
இது பள்ளி சென்றிருந்தால்தானே
படித்திருக்க முடியும்?

-          இங்கிதம்   - தோஹா  - 2 நவம்பர் 2017

Thursday, November 9, 2017

நாடற்றோர்


ஆரம்ப தொழில் - கொழும்பில் இந்தியாக்காரன் 
சொந்தம் - துறையூரில் சென்னைக்காரன்
சுற்றம் - சென்னையில் தஞ்சைக்காரன்
மேற்படிப்பு -  - தஞ்சையில் இலங்கைக்காரன்
ஆரம்பக் கல்வி - கண்டியில் மலைநாட்டான்
மணவாழ்க்கை - மலைநாட்டில் கொழும்புக்காரன்
புலம்பெயர்வு - இந்தியாவில் கத்தார்க்காரன்
பணிசார் வதிவிடம் - கத்தாரில் ஸ்ரீலங்காக்காரன்
போகுமிடமெல்லாம்  அந்நியமாய்
ஒதுங்க இடமின்றி, கூனிக் குறுகி
சகதியாய் அகதியாய் நிர்க்கதியாய்
நின்று நெகிழ்ந்து அரை நூற்றாண்டு கடந்து
எதிலுமே பட்டும் படாத ஒரு ஜென் நிலை
இதற்குத்தான் தாமரை இலையில்
தண்ணீர் என்ற சொலவடை!


-          நாடற்றோர் – தோஹா – 2 நவம்பர் 2017

Thursday, November 2, 2017

சாயங்காலச் சந்தியாராகம்

எனக்குத் தெரியும் ; உனக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது.
எனக்குக் கழுத்தை நீட்டவும் உனக்குப் பின்னால் இருந்த மூன்று தங்கைகளே காரணம்.
மணவாழ்க்கையில் ஆரம்பம்  முதலே கருத்து ஒவ்வாமை.
ஒரு வருடத்தில் முதல் குழந்தை, ஐந்து வருடத்தில் மற்றொன்று.
மணமுறிவைத் தவிர்க்க அந்தப் பிஞ்சுகளின் வளர்ச்சி மிகப்பெரிய நிவாரணி
பள்ளி செல்லவும் அதன்பின் கல்லூரி செல்லவும் நம் உழைப்பும் நேரமும் போச்சு.
ஒருவர் பின் ஒருவராக அவரவர் வாழ்க்கையைப் பார்த்துப் பிரிய
கடைசியில் மிஞ்சியது உனக்கு நானும் எனக்கு நீயும் மட்டுமே
என் மனதில் உனக்கு எவ்வளவு பிரியமென்று நான் சொல்லி நீ கேட்டதில்லை
அதற்கான சந்தர்ப்பங்களையும் உன் இளமையும் அழகும் என்றும் தந்ததில்லை
இன்றோ உடல் தளர்ந்த அந்திமக் காலம் நம்மை உற்றுப் பார்க்கையில்
ஒன்றை மட்டும் சொல்ல விழைவேன்
இறுதி மூச்சு வரையில் உன்னை என் கண்போலக் காப்பேன்
நம்பு கண்மணியே!


-          சாயங்காலச் சந்தியாராகம் – தோஹா – 30 ஏப்ரல் 2017


நடைபாதை வாழ்க்கைகள்

காலைக் கருக்கலில கடை தொறந்தா அந்தி சாயும் நேரம் வரைக்கும் வேலை சரியாயிருக்கும்.
கூட மாட ஒத்தாசைக்கு பொண்டாட்டிதான், தேய்ச்ச துணியக் குடுக்க பள்ளி விட்டு வர்ற பையனும் பொண்ணும்.
ஏதோ தெருவிளக்கு வெளிச்சத்தில சில மணி நேரம் கூடுதலாத் தேய்க்க முடியுது.
மழ வந்தாக் கஷ்டம், யாராச்சும் அவுங்க கார் ஷெட்டை குடுத்தா பொழப்பு ஓடும்.
அதுலையும் கரி போட்டு எரிக்குறதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.
கரண்டுல போட்டுத் தேய்க்கலாமேன்னு சொல்லுவாங்க.
வர்றது வாய்க்கும் வயுத்துக்குமே சரியா இருக்கையில கரண்டு அயர்ன் வாங்க நான் எங்க போக.
பேங்குல லோன் கேளுன்னு ஒருத்தர் சொன்னாரு.
ஐயா, நீங்க சொல்லி வாங்கிக் கொடுக்கிறீங்களான்னோன்னே, துணிய வாங்கிட்டு சத்தமில்லாமப் போய்ட்டாரு.
தேய்ச்சுக் கொடுக்கிற எங்களுக்குப் பழைய துணியெல்லாம் கொண்டாந்து கொடுத்து அழகு பார்க்கிற கூட்டமும் இருக்கு.
குடுக்கிற அஞ்சு, பத்துக்கு என்னென்னமோ கேக்க வேண்டியிருக்கு.
என்னோட இந்தப் பொழப்பு ஒழிஞ்சிடனும்.
புள்ளைங்களை கான்வென்ட்ல படிக்க வச்சிருக்கேன்.
துணி குடுக்கிற ஆளுக்கிட்ட இங்கிலீஷ்ல பேசுறப்ப எம் மனசு துள்ளிக் குதிக்குது.
கண்டிப்பா வாழ்க்கை இனிக்கத்தான் போகுது. பார்த்துக்கிட்டே இருங்க!


-          நடைபாதை வாழ்க்கைகள் - தோஹா - 8 ஏப்ரல் 2017

பசியின் தாக்கம்பசியென்னும் ஜந்துக்குக் கண்கள் உண்டா?
எல்லாம் இருப்பவனுக்குப் பசி உணர்வு அபூர்வம்
வறுமையில் தவிப்பவனுக்கோ அதுவே நிரந்தரம்
என்னே ஒரு விசித்திரப் போக்கு இந்தப் பசிக்கு?
செல்வர்கள் பசிக்க நடை பழக பூங்கா மத்தியில்
ஏழைகள் பசியைப் போக்க நெடுஞ்சாலை ஓரத்தில்
என்னதான் நடக்கிறது இந்தப் பரந்த உலகத்தில்?
பாவம் இந்தப் பையன், வேலைக்குப் போன அம்மா
வருவாளா மாட்டாளான்னு வீதியிலே வைத்த கண்ணு
உங்க மனசைக் கொஞ்சமும் கலங்க வைக்கல்லியா?
அவன் பசியாறவாச்சும் அவன் அம்மா சீக்கிரம் வரணும்
வயிறாற அவனுக்கு சுடு சோறும் கறியும் தரணும்
அதைத் தின்னுட்டு அவன் பாயில படுத்து 
அப்படியே தூங்கிடணும்
எனக்கு மட்டும்தான் இதெல்லாம் தோணுதா?
நீங்க கண்ணைத் தொடைச்சிட்டு தலையாட்டுவது 
எனக்கு தெரியுது……


-          பசியின் தாக்கம் - தோஹா - 10 மே 2017

மழலையின் பரோபகாரம்

அப்பாவையும் காணோம்
அம்மாவையும் காணோம்
பயத்துல அழுதிட்டேன்
யாரோ தொட்டில ஆட்டி விட்டாங்க
எனக்குப் பசிக்குது
சாப்பிடாம நான் எப்படித் தூங்கிறது?
எவ்வளவு நேரம்தான் அழுகிறதுன்னுட்டு
வெளிய எட்டிப் பார்த்தேன்
தூரத்தில அம்மா செங்கல் சுமந்திட்டுப் போகுது
அம்மான்னு கூப்பிட்டேன்
என்னா கண்ணுன்னு ஓடி வந்திச்சு
வந்து என்னத் தூக்கி
உச்சி மோர்ந்திச்சு
அம்மா பசிக்குதம்மான்னேன்
கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்
அடுப்புல உல கொதிக்குது
இன்னும் கொஞ்ச நேரத்துல
உனக்கு சுட சுட சோறு போடறேன்
அது வரைக்கும் இந்த மாங்காயைத் தின்னு
அப்படின்னுட்டுப் போய்ருச்சு
நான் மாங்கா சாப்பிடுறேன்
உங்களுக்கும் வேணுமா?


-          மழலையின் பரோபகாரம்  - தோஹா – 25 செப் 2017

பாதையோரப் பரிதாபங்கள்

கோவில் வாசலில் பூ விக்கும்
பலரில் கமலாவும் ஒருவர்
தினமும் காலையில் கோவிலுக்குப்
போவோர் இவரிடம் பூ வாங்காமல்
போவது அபூர்வம்
பூ மட்டுமில்லாமல் 
பேச்சும் கேட்க மலர்ச்சியாய்
இருப்பதே காரணம்
எப்பவும் ஒரு புன் சிரிப்பு
முகத்தில் தங்கியிருக்கும்

ஆனால் இன்று ஏனோ
அவ்வளவு சுரத்தில்லை
ஏன் என்று கேட்டேன்
ஒண்ணுமில்லப்பா  வீட்டுக்காரருக்கு
சுகம் பத்தல்லன்னு சொன்னாங்க
பொழைக்கிறது கஷ்டம்னு
டாக்டர் சொல்லிட்டாராம்
                                                                                                        
கண்ணு பாவம் கலங்கிடுச்சு
எவ்வளவோ பூ மாலை கட்டி
அந்தச் சாமிக்குக் குடுத்திருக்கேன்
இப்ப அது கண்டுக்காம இருக்கேன்னு
பரிதாபமாப் பார்த்துச்சு
எனக்கு என்ன சொல்றதுன்னு
தெரியல்ல, புரியல
மெய்யாலுமே சாமி இருக்கா?


-          பாதையோரப் பரிதாபங்கள் – தோஹா  - 25 செப் 2017

தாய்மனம்

சூடான இட்லி, கூடவே நாலு
வகை சட்னி, தேவைப்பட்டா பொடி
சரோஜாம்மா கடையில் எப்பவுமே
கூட்டம், வியாபாரம் ஜரூர்
தனியாளா எல்லாத்தையும் சமாளிக்கும்
பண விஷயத்துல ரொம்பத் தாராளம்
சாப்பிட்டுட்டு கடன் சொல்லி
தலையச் சொறிஞ்சா சரி, போன்னு
சொல்லிட்டு வேலையப் பார்க்கும்
அதுல குடுக்காம டிமிக்கி குடுத்து
ஓசில தின்னுட்டு ஓடுவனுங்க எத்தினியோ
ஆள் நடமாட்டம் கம்மியான வேளையில
இதை ஒரு நாள் கேட்கப் போக
திருவிழாவில தொலைஞ்சு போன
ஐந்து வயசுப் புள்ளையப் பத்தி
சொல்லி ஆயாசப்பட்டுச்சு.
அது என் புள்ளைக்குப் போட்டதா
நான் நெனச்சுக்கிறேன்னு சொல்லிட்டு

இட்லி இறக்கப் போயிடிச்சு.

- தாய்மனம் - தோஹா - 27 செப் 2017