Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - அஞ்சலி




1982ல் கண்டி வெம்பிளி திரையரங்கில் நானும்,மைனா மகேந்திரனும்,கிட்டு கிருஷ்ணகுமாரும், சித்தப்பா மற்றும் தம்பி மகேஸ்வரன்களும், சூ...ஸ்ரீதரனும், க...கா.... ஸ்ரீஸ்கந்தராஜாவும் இன்னும் எண்ணிலடங்காத் தமிழ் பேசும் மக்களும் படபடப்புடன் நுழைவுச் சீட்டுப் பெறக் காத்திருந்த வேளையது. உள்ளூறப் பயம், எங்கே வயது பத்தாதென்று திருப்பியனுப்பி விடுவார்களோவென்று. (அப்பல்லாம் எங்க முகத்தில் பால் வடியாத குறை) எப்படியோ நாங்க செய்த புண்ணியம் உள்ள போய்ட்டோம். அந்தப்படம் எங்களை இனம் புரியாத உணர்வுகளுக்கு ஆட்படுத்தியது. ஒரு ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்படும் சின்னச்சின்ன சலனங்கள் எங்கள் வயதுடன் ஒத்துப் போயின. இடைவேளையில் எங்கள் (பலராலும் விரும்பப்பட்ட) ஆசிரியையும் அந்த அரங்கிலேயே இருந்து படத்தைக் கண்டுகளித்த விபரம் எம்மை அடைய அது ஆனந்தத்தின் உச்சம். அப்படம் 'அழியாத கோலங்கள் ' (இன்னும் நெஞ்சைவிட்டு அழிய மறுக்கிறது) இயக்குனர் எங்கள் கிழக்கிலங்கையின் மைந்தர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் கவித்துவமான ஒளிப்பதிவின் முன்னோடி. 

பிற்காலத்தில் இந்தியாவில் வதியும் காலத்தில் இவரின் 'மூடுபனி ' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊர்வசி ஷோபாவை மணந்து, மர்மமான முறையில் அப்பெண் மரணிக்க, சர்ச்சைகளில் சிக்கி, மீண்டும் பாலு சிலிர்த்தெழுந்த 'மூன்றாம் பிறை' தேசியவிருதுகளைத் தன்வசமாக்கியது. 'வீடு', 'சந்தியாராகம்' என மிக மெதுவாகப் படைப்புகள் தொடர்ந்தன. '92ல் இலங்கைக்குத் திரும்பிய பின் வெளிவந்த 'மறுபடியும்' நிறைய சிந்திக்க வைத்ததென்னவோ உண்மை. தனக்கொரு அடையாளத்தைத் தந்த தமிழ்த்திரையுலகிற்குத் தன்னாலான கைம்மாறென அவர் தொடங்கிய பயிற்சிப்பட்டறையில் பல திறனாளிகள் பட்டை தீட்டப்பட்டார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப் படுபவர் பாலா. மேலும் சீமான், அமீர், வெற்றிமாறன்,சசிகுமார் எனப் பலரும் தங்கள் வாழ்வின் திருப்புமுனையாக இவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். கடைசியாக 'தலைமுறைகள்', மிகவும் கவித்துவமாக உள்ளதாகப் பாராட்டுகள் குவிந்தன. எவ்வளவோ முயன்றும் இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை. சென்ற வாரம் நானும் என் இனிய நண்பன், புகைப்படவெறியன் பாலி எனப்படும் பாலமோகனும் இவரைப் பற்றியும்,இவர் படைப்புக்கள் பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். 

இன்று அவர் மறைவுச்செய்தி மனம் கனக்க வைக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் தொடங்கிய சீரிய பணியைச் சிஷ்யப் பிள்ளைகள் தொடர்வார்கள்.

அவர் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்.