Wednesday, December 31, 2014

நான் பார்த்து ரசித்த படங்கள் - 2014ரிடர்ன் ஆஃப் பசங்க


பார்வையில்லாக் காதல்


காரின்மேல் கொண்ட காதல்உதயநிதியின் காதல்


துப்பறியும் த்ரில்லர்ஜாலியான ஆள்கடத்தல்
ரௌடிகளின் ராஜ்ஜியம்முரட்டுக் காதல்சமையலால் மையல்
ஏமாற்றாதே ஏமாறாதே
மருந்து கடத்தல் மற்றும் காதல்
மூடநம்பிக்கைக் கிராமத்தில் காதல்
பேய் மாளிகையில் நடக்கும் வேடிக்கை வினோதங்கள்
வடசென்னையின் இன்னொரு பரிமாணம்
கலக்கல் கார்கடத்தல் + காதல்
நம் மனம் கவர் ஆட்டம்
கதையில்லாத படம்
கண்டதும் காதல்
பேயுடன் காதல்

Wednesday, December 24, 2014

கே பாலச்சந்தர் அவர்களுக்கு அஞ்சலி

அப்ப எனக்கு  ஒரு 7 வயசிருக்கும். புன்னகை என்று ஒரு படம் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. ஜெமினி கணேசன் - ஜெயந்தி ஜோடி. அதுவரை எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களையே பார்த்திருந்த எனக்கு இது ஒரு புது அனுபவம். ஆனா, படம் வித்தியாசமா இருந்துச்சு. அதே படத்த கொஞ்ச நாளைக்கு முன்னே யூ ட்யூபில் மறுபடியும் பார்க்கக் கிடைத்தது. அன்றைக்கு ஏற்பட்ட அதே பிரமிப்பு துளியும் மாறல்ல. உண்மையிலேயே காலத்தை வென்ற படைப்புன்னு சொல்லலாம். அதன் இயக்குனர் திரையுலகின் ஜாம்பவான் கே.பாலச்சந்தர்.  அந்தக் காலக்கட்டத்துல வந்த இரு கோடுகள், வெள்ளி விழா, காவியத்தலைவி, நூற்றுக்கு நூறு என்று எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து வந்த அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு என எல்லாப் படத்தையுமே நான் தவறாமல் பார்த்தேன். பிரமிப்பு கூடியது. கருப்பு வெள்ளைப் படங்களிலே காவியங்கள் படைத்திருந்தார். விடலைப்பருவத்தை எட்டிய தருணம் , எங்கே நம்மை உள்ளே விட மாட்டார்களோ என்ற பயத்துடன் படம் பார்க்கச் சென்று, உள்ளே நுழைந்தவுடன் பெருமூக்சு விட்ட படம் மன்மதலீலை! சில நாட்களுக்கு முன்னர் பார்த்தபோதும் கொஞ்சமும் அலுப்புத் தட்டல்ல. இதைத் தொடர்ந்து வந்த நினைத்தாலே இனிக்கும் பெயரைப்போலவே தித்திப்புக்கு பஞ்சமில்லாத் தேனிசை மழை. கல்லூரி நாட்களில் சிந்துபைரவி மற்றும் புன்னகை மன்னன், இன்றும் நண்பர்கள் கூடும்போது சிலாகிக்கப்படும் படைப்புகள்.  விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தில்லுமுல்லு காமெடிக்கு ஒரு மைல்கல். பிற்காலத்தில் வந்த புதுப்புது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி, அழகன், ஜாதிமல்லி என்று எல்லாமே சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு நல்ல மெசேஜ் சொல்லிச்சு. விரக்தியடைந்த வாலிபர்களை நல்வழிப்படுத்த வானமே எல்லை படத்தைக் காட்டினாப் போதும், வேறு எந்த கவுன்சிலிங்கும் தேவைப்படாது.  பார்த்தாலே பரவசம் படத்திலயும் அவர் டச் பளிச்சிட்டது. சின்னத்திரையிலும் அவர் சோடை போயிடல்ல. ரயில் சினேகமும், கையளவு மனசும் காலத்தால் அழியாப் படைப்புகள்.

நீர்க்குமிழி மறைந்தது.

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
  


Tuesday, November 25, 2014

"நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

இந்த நம்பிக்கைப் பெண்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாமே ?

Monday, November 24, 2014

கல்யாணமே வைபோகமே

இன்னைக்கு ராம்லிக்கும் ஹேமாவுக்கும் கண்ணாலமாகி 21 வருஷம் பூர்த்தியாகுது. காலேஜ்ல படிக்கும்போது ராம்லியின் பாட்டுக்குக் கிடைத்த ரசிகைதான் ஹேமா, எங்களுக்கு 3 வருடம் ஜூனியர். நாங்க ஏன் பாடல்லன்னு பேச்சு வரலாம். கதவு பூட்டியிருக்கு என்னும் ஒரே தைரியத்தில் பாத்ரூமில் மட்டுமே குரல் கொடுத்த சமூகம் எங்களது. பிரசாத் ட்ரம்ஸ் வாசிப்பான். சத்யா தபேலா வாசிப்பான். நாங்க நாலஞ்சு பேரு இவனுங்ககூட போய் உட்கார்ந்து பாட்டு மட்டும் கேட்போம். எங்கள் கல்லூரியின் ஆஸ்தான பாடகன் ராம்லி. ஆர்.ஈ.சீ ஃபெஸ்டெம்பர் மேடையில் அசத்தலாப் பாடினான், ஆனா, பரிசு ஏதோ ஒரு சென்னைக் கல்லூரிப் பையனுக்குப் போயிடிச்சு. அப்புறம் மூகாம்பிகை காலேஜ் மேடையில் அசத்தினான். அங்கேயும் பரிசு கை நழுவிப் போச்சு. எது எப்படியோ, அவன் குரல் ஒரு ரசிகையை அவனுக்குக் குடுத்துச்சு. பல போராட்டங்களுக்குப் பிறகு , திருப்பதியில் நண்பர்கள் புடைசூழ ஹேமாவைக் கைபிடித்தான். ஷ்ருதி எனும் அழகிய பெண் குழந்தை இப்பொழுது எங்கள் கல்லூரியிலேயே இரண்டாம் ஆண்டு பயில்கிறது. நட்புக்கு இலக்கணமான நல்ல நண்பனாக மட்டுமன்றி நல்ல மகனாகவும் இருக்கிறான் ; இருவர் பெற்றோரும் இவர்களுடனேயே வசிக்கிறார்கள்.  நீடூழி வாழ்க பல்லாண்டு. 

Sunday, November 9, 2014

மனம் போல் மாங்கல்யம்


இன்றோடு எனக்கும் இந்திராவுக்கும் திருமணம் நிகழ்ந்து 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.  மணநாள் நன்கு நினைவில் உள்ளது. அதிகாலையில் எழுந்து குளித்து சுற்றமும் நட்பும் புடை சூழத் திருமணம் நடக்கவிருந்த கோவிலுக்கு சென்றதும், அங்கே புகைப்பிடிப்பாளருக்கு இசைவாகச் சில போஸ்கள் கொடுத்ததும் நகைக்க வைக்கின்றது. மணப்பெண்ணுடன் முதல்நாள் இரவு தொலைபேசியில் பேசியிருந்தேன். பேசிவிட்டுப் படுத்த கொஞ்ச நேரத்தில் இனம் தெரியாத பூச்சியொன்று வலது கன்னத்தைக் கடித்து விட்டதாம். (அதுக்கு என்ன கோவமோ தெரியவில்லை!) ஒருபக்கம் வீங்கிய முகத்துடன் இருந்த மணப்பெண்ணை ஒப்பனை நிபுணர் ஒருவழி பண்ணி, இரு பக்கமும் சமநிலைப்படுத்தியிருந்தார். மணமேடையில் அமர்ந்து மணமகனின் சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்த பின் பெண்ணை அழைத்து வந்தார்கள். முகத்தைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஒருவேளை ஆள்மாறாட்டம் செய்திருப்பார்களோ என்று ஒரு ஐயம்.  மெதுவாக அருகில் அமர்ந்த பெண்ணிடம் கேட்டேன், ' இது இந்திராதானே?' ஆம் என்றது பரிச்சயமான குரல். அதுக்குள் ஐயருக்கு அவசரம். புகையின் அளவை அதிகரித்துக் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்' என்று கூக்குரலிட்டார். அதுவரை அவர் ஆணைக்குக் காத்திருந்தவர்கள்போல பக்கவாத்தியக்காரர்கள் பிளிரத் தொடங்கினார்கள். அட்சதை தூவியதுடன் தங்கள் வேலை முடிந்ததென்று எண்ணி (அதுவும் சரிதான்!) சபையோர் பந்திக்கு முந்தினார்கள். தாலிக்குப் பொட்டிட்டுக் கழுத்தில் படரவிடும் வேலையை சுற்றம் பார்த்துக் கொண்டது. மண்மகளின் கைபற்றி மூன்று முறை யாகமேடையைச் சுற்றி வந்து, பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாயிட்டு.  அம்மி மிதிக்கவைத்து, மெட்டி போட்டு , அருந்ததி பார்த்து, வாழ்த்துவோருடன் புகைப்படங்களுக்கு நின்று அவர்கள் அளித்த பரிசுப்பொருட்களைப் புன்சிரிப்புடன் வாங்கி, சுமார் 2 மணி நேரத்தின் பின் பசியாற அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே போயும் நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. நெருங்கிய சொந்தங்கள் வந்து கிச்சு கிச்சு மூட்டியபடி இருந்தார்கள். இருவரும் ஊட்டி விடுவதுபோல போஸ் கொடுக்க எங்களை விடச் சில முன்னாள் மணப்பெண்கள் அதீத வெட்கம் வெளிப்படுத்தினார்கள். அது முடிய முளைப்பாரி (ஒரு வாரம் வளர்ந்த தானியங்கள்) கரைக்கக் கட்ற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து மாப்பிள்ளை வீடு- பால் பழம்-பெண்வீடு -பால் பழம் ! இந்தத் தொல்லைகள் முடிய இருட்டி விட்டது. என்ன நினைத்தார்களோ, ஒரு வழியாக மணமக்களைக் கொண்டுபோய் 5 நட்சத்திர ஹோட்டலில் விட்டு விட்டு மீதிப்பேரெல்லாம் காணாமல் போனார்கள். நாங்கள் இருவரும் தனித்து விடப்பட்டோம், ஆனால் நன்கு களைத்துப் போயிருந்தோம். சும்மா பேருக்கு இரவு உணவை அருந்திவிட்டு, சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு உறங்கிப் போனோம். சுற்றமும் நட்பும் நடக்காத விஷயங்களைச் சிலாகித்துத் தத்தமது தூக்கம் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். 

Saturday, July 19, 2014

வெள்ளிவிழா ஆண்டு ஒன்றுகூடல்


பணி நிமித்தமாகச் சென்னையில் நடக்கும் மேற்படி விழாவில் என்னால் கலந்து கொள்ளமுடியாத சோக நிலை. சுமார் ஐம்பது பேர் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் இன்று கூடிக் களிக்கிறார்கள். அலைபேசியினூடே தொடர்ந்து செய்திகளும்,படங்களும் வந்த வண்ணம் உள்ளன. இன்று இரவு நானும் நண்பன் பாலி எனப்படும் பாலமோகனும் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்து கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. உடலால் இங்கு இருப்பினும் உள்ளமெல்லாம் என் நட்புக்களைச்சுற்றியே. 

* மேலேயுள்ள வால்பேப்பரில் கவிதை வரிகள் என் உபயம் என்பது உபரித்தகவல் !Tuesday, March 4, 2014

களையெடுப்பு

முகநூல் நமக்கு நண்பர்களை அள்ளி வழங்குகிறதோ இல்லையோ, நண்பர்களென்று எண்ணிக்கொண்டிருப்பவர்களின் முகத்திரையைக் கிழித்து, நிஜ முகத்தைக் காட்டுவதென்னவோ உண்மை. அண்மையில் ஒரு பதிவில் எப்படியான நண்பர்களை முகநூலில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரை கண்டேன். முன்பின் தெரியாதவர்களைத் தவிர்ப்பது நல்லதாம். ஏதோ ஒரு கால கட்டத்தில் நம்முடன் ஒரு முறை தொடர்பு கொண்டோரும் இதில் அடக்கம். சில நேரங்களில் பால பாடசாலையில் நம்முடன் இருந்து பிரிந்தவர்கள் நட்பு பாராட்டக்கூடும். இந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் அலப்பறையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லையாம். சிலர் எல்லாப் பதிவுகளுக்கும் உள்ள அனைத்து நண்பர்களையும் டாக் (Tag) செய்வார்கள். இதில் என்ன அசௌகர்யம் என்றால் அந்தப் பதிவுக்கு நமக்குச் சம்பந்தமே இல்லாத யார் விருப்பு,பின்னூட்டம் போட்டாலும் அலர்ட் வரும். இது வேலைத்தளத்தில் பெரும் இம்சை. இந்த மாதிரியான ஆர்வக்கோளாறுப் பேர்வழிகளும் கழட்டிவிடப்பட வேண்டியவர்களாம். அடுத்து கேம் (game) ரிக்வெஸ்ட் குடுத்து டார்ச்சர் பண்ற பார்டிகள். வேல பாக்கவே நேரம் பத்த மாட்டேங்கிது, இதுல எங்கடா நாங்க கேம் விளையாடுறது? இதுகளையும் தூக்கிடலாமாம். அடுத்து எல்லாத்துக்கும் ஒரு கருத்துரை சொல்லி அறுக்கும் பயபுள்ளைங்க. இன்னொரு ரகப் பயங்கரவாதிங்க இந்த தன்னிலை மேம்படுத்தல் (status update) க்ரூப். நான் பல் தேய்க்கிறேன், நான் குளிக்கிறேன்ல ஆரம்பிச்சு ஏதோ தங்களைப்பத்தி மட்டுமே இந்த உலகம் நெனச்சுக்கிட்டு இருக்கிற மாயைல விழுந்து அடுத்தவன உயிரோட கொல்றவனுங்க. அத்தோட ஓவரா உணர்ச்சிவசப்பட்டு சாமி படம், பாரிய நோயுள்ள குழந்தை படம்னு போட்டு சோகத்தப் பிளிஞ்செடுப்பாங்க. அவங்களுக்கும் ஒரு பெரிய கும்புடு. கில்மா மேட்டர் போடுற ஆளுங்க நெறைய பேரு இருக்காங்க, அதையும் கடந்திடுங்க. சிலர் நீங்க என்னதான் வாழ்த்து சொன்னாலும் அசைய மாட்டாங்க. அவங்களும் உங்களுக்கு ஒண்ணும் அனுப்ப மாட்டாங்க. இப்படியானவங்க நண்பரா இருந்தா என்ன இல்லாட்டி என்ன? ஆ, மிக முக்கியமான ஒண்ணை விட்டுட்டேன், மனைவியின் நண்பிகளைக் கண்டிப்பா சேர்த்துக்காதீங்க. இதையெல்லாம் கடைப்பிடிச்சு நானும் களையெடுப்பு வேலைல எறங்கினேன். இப்பதான் என் முகநூல் பக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கு. அப்பாடா…..!

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா - அஞ்சலி
1982ல் கண்டி வெம்பிளி திரையரங்கில் நானும்,மைனா மகேந்திரனும்,கிட்டு கிருஷ்ணகுமாரும், சித்தப்பா மற்றும் தம்பி மகேஸ்வரன்களும், சூ...ஸ்ரீதரனும், க...கா.... ஸ்ரீஸ்கந்தராஜாவும் இன்னும் எண்ணிலடங்காத் தமிழ் பேசும் மக்களும் படபடப்புடன் நுழைவுச் சீட்டுப் பெறக் காத்திருந்த வேளையது. உள்ளூறப் பயம், எங்கே வயது பத்தாதென்று திருப்பியனுப்பி விடுவார்களோவென்று. (அப்பல்லாம் எங்க முகத்தில் பால் வடியாத குறை) எப்படியோ நாங்க செய்த புண்ணியம் உள்ள போய்ட்டோம். அந்தப்படம் எங்களை இனம் புரியாத உணர்வுகளுக்கு ஆட்படுத்தியது. ஒரு ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்படும் சின்னச்சின்ன சலனங்கள் எங்கள் வயதுடன் ஒத்துப் போயின. இடைவேளையில் எங்கள் (பலராலும் விரும்பப்பட்ட) ஆசிரியையும் அந்த அரங்கிலேயே இருந்து படத்தைக் கண்டுகளித்த விபரம் எம்மை அடைய அது ஆனந்தத்தின் உச்சம். அப்படம் 'அழியாத கோலங்கள் ' (இன்னும் நெஞ்சைவிட்டு அழிய மறுக்கிறது) இயக்குனர் எங்கள் கிழக்கிலங்கையின் மைந்தர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் கவித்துவமான ஒளிப்பதிவின் முன்னோடி. 

பிற்காலத்தில் இந்தியாவில் வதியும் காலத்தில் இவரின் 'மூடுபனி ' மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊர்வசி ஷோபாவை மணந்து, மர்மமான முறையில் அப்பெண் மரணிக்க, சர்ச்சைகளில் சிக்கி, மீண்டும் பாலு சிலிர்த்தெழுந்த 'மூன்றாம் பிறை' தேசியவிருதுகளைத் தன்வசமாக்கியது. 'வீடு', 'சந்தியாராகம்' என மிக மெதுவாகப் படைப்புகள் தொடர்ந்தன. '92ல் இலங்கைக்குத் திரும்பிய பின் வெளிவந்த 'மறுபடியும்' நிறைய சிந்திக்க வைத்ததென்னவோ உண்மை. தனக்கொரு அடையாளத்தைத் தந்த தமிழ்த்திரையுலகிற்குத் தன்னாலான கைம்மாறென அவர் தொடங்கிய பயிற்சிப்பட்டறையில் பல திறனாளிகள் பட்டை தீட்டப்பட்டார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லப் படுபவர் பாலா. மேலும் சீமான், அமீர், வெற்றிமாறன்,சசிகுமார் எனப் பலரும் தங்கள் வாழ்வின் திருப்புமுனையாக இவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். கடைசியாக 'தலைமுறைகள்', மிகவும் கவித்துவமாக உள்ளதாகப் பாராட்டுகள் குவிந்தன. எவ்வளவோ முயன்றும் இணையத்தில் எங்கும் கிடைக்கவில்லை. சென்ற வாரம் நானும் என் இனிய நண்பன், புகைப்படவெறியன் பாலி எனப்படும் பாலமோகனும் இவரைப் பற்றியும்,இவர் படைப்புக்கள் பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். 

இன்று அவர் மறைவுச்செய்தி மனம் கனக்க வைக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் தொடங்கிய சீரிய பணியைச் சிஷ்யப் பிள்ளைகள் தொடர்வார்கள்.

அவர் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்.

Saturday, January 4, 2014

நான் பார்த்து ரசித்த படங்கள் - 2013

1.ஹரிதாஸ் 

ஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தை ஜெயிக்கும் கதை


2.சென்னையில் ஒரு நாள்

பரபரப்பான நகரப் பின்னணியில் உடலுறுப்புத் தானம் 


3.சூது கவ்வும்

ஆள் கடத்தலை ஜாலியாக்கிய படம்


4.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒரு குடும்பத்திற்கான மூன்றாம் மனிதனின் போராட்டம்


5.தங்க மீன்கள்

மகள்களைப் பெற்ற தந்தைகள் பார்க்க வேண்டிய படம்


6.மூடர் கூடம்

ஒரு மூடிய வீட்டினுள் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்


7. நேரம்

கடிகாரம்போல வேகமான, சிரிப்புமூட்டும் படம்


8.ராஜா ராணி

காதல் தோற்று மீண்டும் ஜெயிக்கும் கதை


9. 6 மெழுகுவர்த்திகள் 

தொலைந்துபோன மகனை மீட்கப் போராடும் தந்தையின் வலி


10. எதிர்நீச்சல்

தன் பேரை வெறுக்கும் ஒருவனின் அடையாளத்திற்கான போராட்டம்


11.பாண்டியநாடு

அநீதிக்கெதிரான ஒரு தந்தையின் எழுச்சி


12.விஸ்வரூபம்

தீவிரவாதத்தின் இன்னொரு பரிமாணம்


13. கல்யாண சமையல் சாதம்

சென்சிடிவ்வான பாலியல் பிரச்சினை!14. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

பாலா,குமார் இருவர் வாழ்வில் நிகழும் திடீர்த் திருப்பங்கள்

15. விடியும் முன் 

நிழல் மனிதர்களுடன் இரு பெண்களின் போராட்டம்