Thursday, January 24, 2013

காத்திருத்தல்

கொடியில் ஆடும் மென்துண்டு

மீந்துபோன புளிசாதம்

எழுதி முடிந்த குமிழ்பேனா

செல்லாத பழைய நாணயம்

இவையெல்லாம் காத்திருந்தன

சரித்திரமாகிப் போன பாட்டி

பத்திரப்படுத்த வருவாளென......

மாநகரப் பேரூந்து


எத்தனையோ வசவுகளும்

எண்ணற்ற சிணுங்கல்களும்

குபீர்ச் சிரிப்புகளும்

குழந்தைகளின் கும்மாளமும்

இளசுகளின் கண்ணீரும்

பெருசுகளின் பெருமூச்சும்

எல்லாத்தையும் (தன்)னுள் வாங்கி

அமைதியாய் நிற்கிறது ஒரு ஓரமாய்

மக்கள் அழுக்காக்கிப்போன

மாநகரப் பேரூந்து !

Monday, January 7, 2013

புளிச்ச கொய்யா


சின்ன வயது, வீட்டுத் தோட்டம்
அதில் சிவப்பாய், அழகாய் புளிச்ச கொய்யா
அம்மாவின் எச்சரிக்கை
மகன், தின்றால் காய்ச்சல் வரும் !
அப்ப அதை யார் கேட்டா?
நல்ல புளிப்பும் இனிப்புமாய்
தின்னத்தின்ன இன்பம்,ஆனா
வரும் மறுநாள் அம்மா சொல்போல
கடுமையா காய்ச்சல்
அம்மா இருக்க அதுவும் சுகம்தான்
இப்ப அம்மாவும் போயாச்சு
புளிச்ச கொய்யாவும் மறந்தாச்சு
கவனிக்க ஆளில்லாம
காய்ச்சலையும் காணலையே ?