Thursday, March 31, 2016

தாம்பரம் டு பீச் - 14

பதினான்கு    -    சேத்துப்பட்டு

08 : 43

கூட்டம் அலைமோதி இறங்கியது. மீண்டும் வேறு முகங்கள் உள்ளே ஏறின. இடங்களைப் பிடிப்பதில் அக்கறை காட்டின. தத்தமது வேலைகளில் மூழ்கின.

சிந்துஜா எட்வர்ட் அருகில் சென்றாள். அவன் இவளைக் கண்டு புன்னகைத்தான்.

      ‘எப்படி இருக்க சிந்து?’

      ‘நல்லா இருக்கேன், நீ?’

      ‘அதுதான் பார்த்தியே, இன்னும் கொஞ்ச நேரத்துல பரலோகம் போயிருப்பேன்’

அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்காமல் போகவே இரண்டு கைகளாலும் தனது வாயை பொத்தி, தலையை ஆட்டி அப்படிச் சொல்ல வேண்டாமென்று அவனைப் பணித்தாள்.

அவன் அவள் கைகளைப் பிடித்து மெதுவாக கீழே இறக்கி விட்டான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் அவர்களிருவருக்கும் தங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதே மறந்து போனது.

மேரி இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. திடீர்னு இப்படி நடக்க என்ன காரணம் என்று யோசித்தாள். நல்ல நேரம் அந்தப் பையனுக்கு ஒண்ணும் ஆகல்ல. அதுக்கு மானசீகமாக இறைவனிடம் நன்றி கூறினாள். அடுத்தவங்க பொருள்மேல ஆசைப் படுவது எந்த விதத்தில நியாயம்னு அவளுக்குத் தெரியல்ல. அதிலயும் திருடறது பெரிய பாவம். கொலைசெய்வது அதைவிடப் பாவம். மனம் முழுக்க அந்தத் திருடனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டது.

திராவிடன் சற்று நிலைகுலைந்து போயிருந்தார். இருப்பினும் ராணுவப் பயிற்சி அவரை சகஜமாக இருக்க வைத்தது. முகத்தில் ரத்தப்போக்கை நிறுத்தக் கைக்குட்டையை வைத்து அழுத்தியிருந்தார்.

அன்வருக்கு களைப்பாக இருந்தது. கைகலப்பில் ஈடுபட்டதனால் சட்டையும், பேன்டும் கசங்கிப் போயிருந்தன. இந்தக் கோலத்தில் எப்படி அலுவலகம் போவது என்று யோசித்தான்.

ராஜாபாதருக்கு ஃபோன் வந்தது. அதை எடுத்துப் பார்க்கவே பயந்துபோயிருந்தான். அருகில் இருந்தவர் இவனை உலுக்கியவுடன்தான் சுதாகரித்துப் பேசினான்.

      ‘வந்திட்டிருக்கேன்’

      “----------“

      ‘இப்ப வந்திரும், நீ ரெடியா இரு’

      ‘-----------‘

மறுமுனையில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

வெறுப்பாக இருந்தது. ஏதோ வேண்டாத வேலையில் தான் மாட்டிக்கொண்டதாக மனசு கெடந்து அடித்துக் கொண்டது. ஒரு தம் பிடித்தால் தேவலாமென்று தோன்றியது. எழுந்து போக முடியாதபடி பொதி தடுத்தது. தன்னைத்தானே சபித்து கொண்டான்.

காத்திருந்தான்.



(தொடரும்)

Wednesday, March 30, 2016

தாம்பரம் டு பீச் - 13

பதின்மூன்று     -     நுங்கம்பாக்கம்

08 : 40


கீழே விழுந்திருந்த கிச்சாவைக் கைத்தாங்கலாக அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப் படுத்தி கொண்டிருந்தார் நசீர் வாப்பா.

பையை வாங்கி உள்ளே வைத்ததில் கை வலித்தது மேரிக்கு. அத்துடன் படபடப்பு வேறு. அந்தோனியாரை நினைத்து அப்படியே இருக்கையில் சாய்ந்து இளைப்பாறினாள்.

எட்வர்ட்டும் அன்வரும் அந்தப்பையை எடுத்து பத்திரப் படுத்தினார்கள்.

அப்பொழுதுதான் எட்வர்ட் ஒன்றைக் கவனித்தான்.

இதுவரையில் அவனைக் கொஞ்சமும் சட்டை செய்யாதிருந்த சிந்துஜா அவனை நேசப்பார்வை பார்த்தாள்.

இது போதாதா அவனுக்கு? மிகவும் உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தான்.

கன்னத்தில் பிளேட் கிழித்து ரத்தம் சொட்டியபடியிருந்த திராவிடனை அணுகி அவருக்கு முதலுதவி செய்தான். அப்படியே எட்டி மேரியிடம் நன்றி சொன்னான். பரபரவென்று நசீர் பாய் அருகில் சென்று கிச்சாவை சமாதானப்படுத்தினான்.

இது அனைத்தும் அந்தப் பெட்டியின் வேறொரு முனையிலிருந்து ஸ்தலத்துக்கு குணா வருமுன் மின்னல் வேகத்தில் நடந்திருந்தது.

அவன் கோலத்தைக் கண்டு அவன் காவல்துறையைச் சார்ந்தவன் என்று அன்வருக்குப் புரிந்தது. நடந்ததை தெளிவாக அவருக்கு விளக்கினான்.

சகஜ நிலைக்குத் திரும்பியிருந்த திராவிடன் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்தப் பையில் என்ன இருக்கும் என்று எல்லோருக்கும் ஆவல் இருந்தாலும் குணா எச்சரிக்கையாகச் செயல்பட்டார்.

தனது அலைபேசியில் முதலில் கோடம்பாக்கத்து ரயில் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு சுப்புவின் அங்க அடையாளங்களை விவரித்தார். பின்னர் சந்தோஷைத் தொடர்பு கொண்டு ஸ்ரீகுமார் பற்றியும் அவன் தவற விட்ட பை பற்றியும் தகவல் பெற்றார்.

பொதுமக்கள் இவை எதிலும் பட்டும் படாமல் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்ப்பதிலும், அதைப் பற்றி தங்கள் அறிவுக்கெட்டியபடி விமர்சிப்பதிலும் நேரம் கடத்தினார்கள். கிச்சாவின் நிலை கண்டு பரிதாபப்பட்ட சிலர் எட்வர்டையும், அன்வரையும் பாராட்டினார்கள். பொதுவாக எல்லோரையுமே குணா சமயத்தில் உதாவாமைக்காகக் கடிந்து கொண்டார்.

இத்தனையும் நடக்கையில் ராஜாபாதர் மட்டும் பயந்து போய் உட்கார்ந்திருந்தான். தன்னிடம் இருக்கும் பொருளுக்கும் இப்படி ஏதாவது நடந்து விடுமோ என்ற எண்ணம் அவனை வியர்க்க வைத்தது. அதைவிட நிசாருக்குப் ஃபோன் பேசவும் அச்சப்பட்டான். தான் ஒன்று பேச வேற ஏதாவது நடந்து விடுமோ என்றபடி ஜன்னல் வெளியே வேடிக்கை பார்க்கலானான்.

சிந்துஜாவுக்கு எட்வர்டின் மேலிருந்த கோவம் பறந்து போயிருந்தது. அவன் இப்படி ஒரு வீரச் செயலில் ஈடுபடுவானென்று கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கத்தியால் குத்தப் போவதைப் பார்த்து அப்படியே ஆவென்று கத்திவிட்டாள். நல்ல வேளையாக அன்வர் மின்னல் வேகத் தாக்குதலால் அதைத் தடுத்து விட்டான். எப்படியாவது எட்வர்டிடம் பேச வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்தது.

ரயில் நிலையம் வந்துவிட்டதை மக்களின் பரபரப்பு உணர்த்திற்று.



(தொடரும்)


Tuesday, March 29, 2016

தாம்பரம் டு பீச் - 12

பன்னிரண்டு    -    கோடம்பாக்கம்

08 : 38

தன்னை முறைத்துப் பார்த்தவன் சம்பந்தமில்லாமல் வேறொருத்தனை அறைந்ததையும், அதைத் தொடர்ந்து அவனை இழுத்துக் கொண்டு போனதையும் பீதியுடன் பார்த்தான் ராஜாபாதர்.

மடியில் கனம் இருந்தால்தான் மனதில் பயம் இருக்கும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்கள், ஏன் தனக்கு இந்தப் பழமொழி ஞாபகம் வந்து தொலைக்கிறதென்று அவனுக்குள் குழப்பம்.

ரயில் மீண்டும் வேகமெடுத்து வேகம் குறைத்து மீண்டுமொரு ரயில் நிலையத்தின் வரவைப் பிரதிபலித்தது.

மீண்டும் ஒரு சலசலப்பு.

ரயில் நிற்கும் முன்னரே இருக்கையின் அடியில் இருக்கும் பையை எடுக்க முனைந்தான் சுப்பு. இறுக்கமாக ஒரு பிடி அவன் கைமீது விழுந்தது. உதறிவிடப் பார்த்தான். இறுக்கம் அதிகமானது. உடனே தனக்குப் பழக்கமான தற்காப்பு முறையைக் கையாண்டான்.

திடீரென்று திராவிடனின் முகத்தில் நாக்குக்கடியில் பதுக்கியிருந்த பிளேடை உமிழ்ந்தான். அருவருப்பில் சடாரென்று கை அந்த எச்சிலைத் துடைக்க முனைய முகத்தில் ரத்தம் பீரிட்டது.

அந்தத் தருணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய சுப்பு பையை இழுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேற முனைந்தான். அந்தக் களேபரத்தில் கைக்குட்டை விற்றுக் கொண்டிருந்த நசீர் பாய்மீது மோதினான். அவர் அல்லாவே என்று கீழே விழுந்தார். திராவிடன் சுதாரித்து அவனைப் பிடிக்க முனைகையில் அவன் இரண்டடி முன்னேறியிருந்தான்.

வாசலை அடைந்து விட்டான். நசீர் பாய் கண்ணில் அங்கிருந்த கிச்சா தென்பட்டார்.

      ‘அவனை மடக்குங்க கிச்சாண்ணே!’

கிச்சா முன்னால் சென்று கொண்டிருந்த சுப்புவை அப்படியே கட்டிக் கொண்டார். சுப்பு இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் முட்டியை இறுக்கி பின்னோக்கி ஒரு குத்து விட்டான்.

      ‘அம்மா’

அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார் கிச்சா.

ஒரு பார்வையற்ற வயதானவரைத் தாக்கியத்தைக் கண்டதும் அதுவரையில் சிந்துஜாவை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு நின்ற எட்வர்ட்டுக்கு கோவம் தலைக்கேறியது. பாய்ந்து போய் ரயிலை விட்டு வெளியேறியிருந்த சுப்புவை பின்னாலிருந்து தாக்கினான். அந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத சுப்பு கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்தான். சரக்கென்று தன் பையிலிருந்து கத்தியை உருவினான். அதற்குள் அன்வர் கொடுத்த உதையில் கத்தி கீழே விழுந்தது. எட்வர்ட், அன்வர் என இருவர் தன்னைக் குறி வைப்பதைக் கண்ட சுப்பு, அவர்களை விட்டு விட்டுப் பையுடன் கம்பி நீட்ட மெதுவாக நகர்ந்தான். உடனே எட்வர்ட் பையை நோக்கிப் பாய, அன்வர் சுப்புவின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

ரயில் நகரத் தொடங்க எட்வர்ட் பையை எடுத்து ரயிலின் ஜன்னலில் வைத்து

‘யாராச்சும் பிடிச்சுக்கோங்க!’  என்று கத்தினான்.

இந்தக் களேபரத்தைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மேரி உடனே அதனை உள்ளே இழுத்தாள்.

அன்வரிடம் உதை வாங்கிய சுப்பு கீழே விழுந்து, எழுந்து சுதாகரிப்பதற்குள் அன்வரும், எட்வர்டும் வண்டிக்குள் ஏறினர்.

ரயில் வேகமெடுத்தது.

கூட சபித்துக் கொண்டே ஓடி வந்த சுப்பு விரைவில் ஒரு புள்ளியாகி மறைந்தான்.



(தொடரும்)

Monday, March 28, 2016

தாம்பரம் டு பீச் - 11

பதினொன்று    -   மாம்பலம்

08 : 36

செபஸ்டின் வண்டியிலிருந்து சட்டென்று இறங்கினான். அதே வேகத்துடன் ஓடிச் சென்று சந்தோஷ் குறிப்பிட்ட பெட்டியில் ஏறினான்.

இவனைக் கண்டதும் சந்தோஷ் வேகமாக ஸ்ரீகுமாரின் அருகில் சென்றான்.

      ‘ஹலோ மிஸ்டர், உங்க பைய கொஞ்சம் செக் பண்ணனும்’

ஸ்ரீகுமார் மிரண்டான். ஆனாலும், தைரியமாக எதிர்க் கேள்வி கேட்டான்.

      ‘ஞிங்கள் ஆராக்கும், எண்டே சாமான சோதிக்க?’

சந்தோஷ் ஆங்கிலத்துக்கு மாறி, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.

தன்னை ஒரு தமிழன் அப்படிச் செய்வதை ஸ்ரீகுமார் விரும்பவில்லை. தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னமோ உளறினான். அதற்குள் சந்தோஷ் நெருங்கி பையில் கையை வை…க்…க முயல……..

      ‘நகருடா பட்டி’

ஸ்ரீகுமாரிடமிருந்து வந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று சந்தோஷுக்குத் தெரிந்திருந்தது அவன் தூரதிர்ஷ்டம். பளாரென்று ஒரு அறை விழுந்ததில் அவன் பொறி கலங்கிப் போனான். எழுந்தவன் ஒரே அமுக்காக அமுக்கப்பட்டான். அதற்குள் செபஸ்டியனும் வந்து விட இருவரும் சேர்ந்து அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்கள். கூடவே அந்தப் பையையும் எடுத்துக் கொண்டார்கள்.

அருகில் இருந்த ஒருத்தனை எதுக்கு இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று பெட்டியில் இருந்த எல்லோரும் சலசலத்தார்கள். அந்த இடத்தைப் பிடிக்க முண்டியடித்தார்கள். இடம் கிடைத்தவர் அருகில் இருந்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார். என்னங்க பிரச்சினன்னு கேட்டு, நமக்கேன் பொல்லாப்பு என்று கையை விரித்தார்.

எதிர் சீட்டில் இருந்த திராவிடன் சீட்டுக்கு அடியில் என்னமோ இருப்பதைக் கண்டார். இழுத்துக் கொண்டு செல்லப்பட்டவன் ஏதோ சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டவன் போலும், அதுதான் மஃப்டியில் உள்ள காவலர்கள் அவனை வசமாகப் பிடித்து விட்டார்கள் என்று தோன்றியது. அது என்ன பொருளாக இருக்கும் என்று யோசிக்கலானார்.

அதையே அருகிலிருந்த ஒருவனும் கவனிப்பது அவருக்குத் தெரியவில்லை. அவன் இவரைப் போலல்லாமல் பொருளைக் கபளீகரம் செய்யும் நோக்கிலேயே அதனைப் பார்த்தான். அந்த சீட்டில் உள்ளவர் எழுந்தவுடன் தானும் நகர்ந்து அந்த இருக்கையைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டான் சுப்பு. அது தோல்வியில் முடியவே தனது பார்வை அந்தப் பொதிமேல் படும் தூரத்தில் நின்று கொண்டான். அடுத்து நம்ம ஏரியா, அங்க இதை எப்படியும் லவட்டிடலாம்னு அவன் மனதில் பட்டது.

சந்தோஷும், செபஸ்டீனும் ஸ்ரீகுமாரை முறையாகக் கவனிக்கக் கொண்டு போகுமுன் மற்ற மூவருக்கும் தகவல் அனுப்பி விட்டார்கள். குணா உடனே ஓடி வந்து அந்தப் பெட்டியில் ஏறிக் கொண்டான்.

ரயில் கிளம்பியது.



(தொடரும்)

Sunday, March 27, 2016

தாம்பரம் டு பீச் - 10

பத்து     -    சைதாப்பேட்டை

08 : 33

இறங்குவோர் நெருக்கியடித்துக் கொண்டு இறங்கினார்கள். அதேயளவு கூட்டம் திரும்பவும் ஏறியது.

ரயிலில் கூட்டம் குறைந்தபாடில்லை.

ராஜாபாதருக்கு ஏன் ரயிலில் வந்தோமென்று இருந்தது. பேசாமல் வண்டியிலேயே போயிருக்கலாமென்று தோன்றியது.

நியாசுக்கு ஃபோன் போட்டான்.

      ‘நீ சொன்னேன்னு ரயில்ல வர்றேன் பாரு, என் புத்தியச் சொல்லணும்’

      ‘------‘

      ‘என்ன, ஒரு மாதிரியாப் பேசுற? ஒடம்புக்கு ஏதும் சரியில்லையா?’

      ‘-------‘

      ‘பொருள் எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு. நான் கவனமாத்தான் இருக்கேன்’

      ‘------‘

      ‘’சரி,சரி நான் இன்னும் பத்து, பதினஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்’

நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிஷம் அதிர்ந்து போனான். யாரோ ஒருவன் இவனையே முறைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தோரணையில் போலீஸ் வாடை அடித்தது. என்னமோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரியவர் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.

      ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே’

சந்தோஷ் திறந்து மூடிய ஸ்ரீகுமாரின் அந்தப் பையினுள்ளே ஒரு பிரபலமான இனிப்பகத்தின் இலச்சினை பொருந்திய உறைகளைக் கண்டார். இவ்வளவு உறைகளை இவன் ஏன் மெனக்கெட்டு இந்த ரயிலில் எடுத்துச் செல்கிறான் என்ற கேள்வி எழுந்தது. அந்த இனிப்பகத்துக்குச் சென்னைப் பெருநகரிலேயே பதினைந்து கிளைகள் இருந்தன. அப்படியிருக்கையில் எதற்கு இதனை ரயிலில் சுமக்கிறான் என்ற ஐயம் எழுந்தது. ஒருவேளை இவன் அந்த உறைகளை சப்ளை செய்பவனாக இருக்கலாம் என்று எண்ணினான். மீண்டும் அவனை நன்கு நோட்டம் விட்டான். ஆள் பார்க்க நன்றாகவே இருந்தான். ரேபான் கண்ணாடி, கேசியோ ஸ்போர்ட்ஸ் வாட்ச், தங்க பிரேஸ்லட், நைக்கி ஷூ, ஐ ஃபோன் எல்லாம் அவனை மேல்மட்டத்து ஆளென்று பறைசாற்றியது. என்னமோ ஒன்று சரியில்லையென்று மனதுக்குப் பட்டது. உடனே மனதில் அம்மாவை நினைத்தார். எப்போதெல்லாம் மனதில் கலக்கம் ஏற்படுமோ அப்போதெல்லாம் இவ்வாறு செய்வது இவன் வழக்கம். அவ்வேளைகளில் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். இன்றும் அவ்வாறான தெளிவு பிறந்தது.

தனது அலைபேசியில் ஒரு குறுந்தகவலை அனுப்பினார்.

பதில் வந்தது.

மீண்டும் ஒரு தகவலை அனுப்பி விட்டுக் காத்திருந்தார்.

ரயில் வேகமாக ரயில் நிலையத்தில் நுழைந்தது


(தொடரும்)

Saturday, March 26, 2016

தாம்பரம் டு பீச் - 9

ஒன்பது       -     கிண்டி

08 : 30

தமிழ்நாடு காவல்துறைசார் உத்தியோகத்தஸ்தர்கள் நால்வர் ரயிலில் ஏறினார்கள். அவர்கள் பெயர்கள் அவசியமில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணி மிகவும் முக்கியமானது. தலைமைக் காரியாலயத்திலிருந்து அதி ரகசியமான தகவல் ஒன்று அவர்கள் சார்ந்த காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்திருந்தது.

காலையில் அவசரமான ஒரு கூட்டம் நடந்து முடிந்திருந்தது. சென்னை ரயில்களில் வெடிகுண்டு வைக்கும் ஒரு சதித்திட்டம் பற்றி அலசி ஆராயப்பட்டது. உடனடியாக ஒவ்வொரு காவல்நிலையத்திலிருந்தும் தனிப்படைகள் ரயில் மற்றும் ரயில் நிலையப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டன. வெடிகுண்டைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் குழு இவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் என்று கூறப்பட்டது. மிக முக்கியமாக இந்தத் தகவலைப் பொதுமக்களிடம் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தார்கள்.

எந்த ரயிலில், எந்தப் பெட்டியில் யாரால் என்ற மேலதிக விபரங்கள் கிடைக்கும் பொழுது பகிரப்படும் எனும் உத்தரவாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்ட நால்வரும் ஒவ்வொரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுடன் வந்த இன்னொரு குழு ரயில் நிலையப் பாதுகாப்பைப் பலப்படுத்த ஆயத்தமானது.

மாற்றுடை தரித்திருந்த காரணத்தால் இவர்களை அடையாளம் காணுதல் சிரமமாய் இருந்தாலும், பரிச்சயப்பட்டவர்களுக்குச் சட்டெனப் புரிந்தது.

ஒவ்வொரு காவல்நிலையத்திலிருந்தும் இவ்வாறு காவலர்கள் எல்லா ரயில்களிலும் ரோந்து வருவதும், சந்தேகத்துக்கிடமானவர்களை வளைத்துப் பிடிப்பதும் சுலபமான காரியமில்லை. ஒரு வேளை தகவல் தவறாய்க்கூட இருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அப்படி ஏதாவது துப்பு துலங்கினால் அதன்மூலம் பல உயிர்கள் காக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

கூட்டமாக இருந்த பெட்டிகளில் தம்மைப் பொருத்திக் கொண்டார்கள். உன்னிப்பாக சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டார்கள். தடயத்திற்காகக் காத்திருக்கலானார்கள்.

சந்தோஷ் ஏறிய பெட்டியில் பல தரப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். கண் தெரியாத ஒருவர் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். கைக்குட்டைகளை ஒருவர் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தார். பெண்ணொருத்தி ஜன்னலோரமாக அமர்ந்து தனது அலைபேசியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். சற்றே தள்ளி நின்றிருந்த ஒருவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். மிகவும் மிடுக்கான தோற்றத்துடன் ஒருவன் அமர்ந்திருந்து சிந்தனை வயப்பட்டிருந்தான். கண்ணை மூடி ஜெபத்திலீடுபட்டிருந்தாள் ஒரு மாது. இன்னொருவன் பெரிய மீசையுடன் அமர்ந்திருந்தான். கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலி மின்னியது. ராணுவ வீரன் போன்ற ஒருவன் தன் அலைபேசியில் ஏதோ தகவல் தேடிக்கொண்டிருந்தான். ஒருத்தன் முன்னாள் தமிழக முதல்வரின் உருவம் பதித்த மோதிரம் அணிந்திருந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித்தனர். இதில் எங்கே போய்த் துப்புத் துலக்குவதென்று ஒரே மலைப்பாக இருந்தது.

சிந்தனை வயப்பட்டிருந்தவரை வினோதமான ரிங்டோன் ஈர்த்தது.

      ‘ஹல்லோ’

      ‘----‘
      ‘இன்னும் கிட்டியில்லா. இவட கிண்டி’

      ‘----‘

      ‘யான் அறியும்’

      ‘----‘

      ‘ஞான் பின்னே விளிக்கும்’

சென்னையில் தமிழ் தவிர மற்ற அனைத்து மொழிகளும் நன்கு பேசப் படுகின்றன என்று எண்ணிக் கொண்டார். அலைபேசி அழைப்பைத் துண்டித்த ஸ்ரீகுமார் தனது காலடியில் இருந்த பையைத் திறந்து பார்த்தான். அவ்வேளை உள்ளேயிருந்த பொட்டலங்கள் காவலர் சந்தோஷ் கண்ணுக்குத் தென்பட்டன.

அவர் போலீஸ் மூளைக்கு ஏதோ ஒன்று சரியாய்ப் படவில்லை.



(தொடரும்)

Thursday, March 24, 2016

தாம்பரம் டு பீச் - 8

எட்டு      -      பரங்கிமலை

08 : 27

ராஜாபாதருக்குக் கட்டடத்தொழில்தான் கை கொடுத்தது. படிப்பு பெருசா ஏறல்ல. எம்.ஜி.ஆர் படமுன்னா உசிரு. வீட்டுல பள்ளிக்கு மட்டம் போட்டுட்டு பல சினிமா பார்த்துருக்கான். பத்தாவது பரீட்சை எழுத வுடல்ல. பக்கத்து வீட்டுல ஒரு கொத்தனார் குடியிருந்தாரு. அவருகூட இவன் நைட் ஷோவுக்குப் போய்ப் பழக்கம். வீட்டுல அம்மாவும் அப்பாவும் வையிறதக் கேட்டுட்டு அவர்தான் தன்கூட வேலைத்தளத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு.கொண்டு போய் நேரா அந்த கட்டட ஓனர் முன்னாடி நிறுத்தினாரு.

      ‘யாருய்யா இவன், உனக்கு உறவா?’

      ‘ஆமாங்கய்யா, உறவுதான். படிப்பு வரல்லன்னு இங்க கூட்டிட்டு வந்தேன்’

‘ஏன்யா, நானே படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போயிருக்கலாமேன்னு வேற வழியில்லாம இந்தத் தொழில்ல இருக்கேன். நீ வேற படிக்கிற பையனக் கொண்டாந்து நிறுத்திற’

‘உன் பேரென்ன?’

‘ராஜாபாதருங்கய்யா’

‘என்ன தெரியும் உனக்கு?’

‘உலகம் தெரியுங்கையா’

நிமிர்ந்து பார்த்தார். ஏனோ அவனை முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.

      ‘எதுவரைக்கும் படிச்சிருக்க?’

      ‘பத்தாவது முடிக்கல்லைங்கய்யா’

      ‘டேய், எங்களுக்கு அது பெரிய படிப்புடா மவனே’

அதற்குக் கொத்தனாரும் கெக்கேபிக்கேயென்று சிரித்தார்.

அவனிடம் கணக்கு வழக்கு பார்க்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. படிப்பறிவு இருந்தபடியால் அதனை ஒழுங்காகப் பார்த்தான். அத்துடன் கட்டட வேலைகளிலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தெரியாததைக் கேட்டும், செய்து பார்த்தும் கற்றுக் கொண்டான். நாலு வருடங்களில் அந்த முதலாளிக்கு இவன் வலது கையானான். இன்னும் நாலு வருடங்களில் அவரே சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டிக் கொடுத்தார். அவன் பாவனைக்கு ஒரு பைக்கும், அவன் பொண்டாட்டி பேரில் புறநகர்ப்பக்கம் ஒரு கிரவுண்ட் நிலமும் அன்பளிப்பாக வழங்கினார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

நியாஸ் இவன் வழியில் வரும்வரையில்.

கட்டடத் தொழிலில் உள்ள அனேகமானவர்கள் அலுப்புத்தீர சோமபானம் அருந்துவதை யாவரும் அறிவீர்கள். இவனுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அளவாகச் சாப்பிட்டுவிட்டு ரெண்டு பரோட்டாவும் டபுள் முட்டை ஆம்லேட்டும் சாப்பிடுவது இவனுக்கு வாடிக்கையானது. அப்படி ஒரு பாரில்தான் நியாஸ் பரிச்சயமானான். பீர் கூலிங் இல்லையென்று கடைக்காரனை முறைக்க அங்கு பதட்ட சூழல் நிலவியது. நம்ம ராஜாபாதர்தான் சமரசம் பண்ணி வச்சாப்ல. அன்று முதல் தினமும் நியாஸைப் பார்ப்பான். புன்னகையில் ஆரம்பித்த நட்பு, பின்னர் ஒன்றாய்ச் சேர்ந்து குடிக்கும் அளவுக்கு முன்னேறியது. நியாஸிடம் நிறையப் பணம் புழங்கியது அவன் நடை,உடை, பாவனைகளிலேயே நன்கு தெரிந்தது. பெரிய இடத்துப் பையன் என்பதைவிட அவன் நல்ல சரளமாக ஆங்கிலமும், ஹிந்தியும் பேசுவது ராஜாபாதருக்கு வியப்பாக இருந்தது.

ஒரு நாள் நியாஸ் இவனிடம் பேசினான்.

      ‘பாஸு, நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனுமே?’

‘என்னன்னு சொல்லு தல, உனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன்?’

‘ஒரு பொருளு, அத கொஞ்சம் உங்க வீட்ல வச்சுக்கணும். தேவைப் படும்போது நான் வாங்கிக்கிறேன்'

‘என்னப்பா அப்படியொரு அபூர்வப் பொருளு?'

‘எலெக்ட்ரானிக் ஸ்பீக்கர் செட்டு. வெளியூர்ல இருக்கிற மச்சான் அனுப்பியிருக்காரு. இப்ப இத வூட்டுக்கு எடுத்திட்டுப் போனா பிரச்சின பண்ணுவாங்க, அதான்’

ராஜாபாதரின் மிகப்பெரிய பலவீனம் யாரையும் எளிதில் நம்பி விடுவது. நியாஸ் சொன்னதையும் நம்பினான்.

பொருள் கொடுக்கப்பட்டது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இவன் மனைவி கேள்வி கேட்டாள்.

      ‘எதுக்கு இந்தப் பொட்டிய உங்க தலையில கட்டினாரு உங்க ஃப்ரெண்டு?’

‘ஏய், அவன் பெரிய எடத்துப் புள்ளைடி. நான் அவனுக்கு உதவுனா, அவன் எனக்கு உதவ மாட்டானா? உனக்கு இதெல்லாம் புரியாதுடி, சோத்தப் போடு பசி உயிர் போவுது’

நேற்றிரவு நியாஸ் ஃபோன் போட்டு பொருளை எழும்பூருக்கு ரயிலில் எடுத்துவரச் சொல்லியிருந்தான். இவனும் மேலே ஒன்றும் கேட்காமல் ஆட்டோவில் வந்திறங்கி இப்போ ரயிலேற நிற்கிறான்.

ரயில் வந்தது.



(தொடரும்)

Wednesday, March 23, 2016

தாம்பரம் டு பீச் - 7

ஏழு     -    பழவந்தாங்கல்

08 : 24

கூட்டமான ரயிலில் ஆண்கள் பெட்டியில் ஏறி விட்டிருந்தாள் மேரி.

நல்ல வேளை அவளுக்கு ஒரு இளைஞன் எழுந்து இடம் தந்தான். பெண்கள் பெட்டியில் கடைசிவரை நின்று கொண்டே போன அனுபவங்கள் கண்முன் வந்து போயின.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள அந்தோனியார் கோவிலுக்குப் போய் மனமுருகப் பிரார்த்தனை பண்ணுவது அவள் வழக்கம். அதுக்கு வலுவான காரணம் இருந்தது.

அவளுக்கு ரெண்டு புள்ளைங்க.  ஆனா பாவம், ரெண்டுமே பொறந்த நாள் முதலா ஆஸ்துமா நோயால வாடி வதங்குச்சுங்க. பார்க்காத வைத்தியமில்ல. அப்பத்தான் பக்கத்து வீட்டு லிசி அக்கா அந்தோனியார் மகிமை பத்திப் பேசினாங்க. ஒரு நாள் மேரியவும் கூடவே கூட்டிக்கிட்டுப் போனாங்க.  அன்னைக்கு நல்ல கூட்டம். மேரி மனமுருகி வேண்டினா. அவளுக்கு ரெண்டு கண்ணுலேயும் கண்ணீர் அருவியாப் பெருகிச்சு. பிரார்த்தன முடிஞ்சு வெளியே வந்ததும் மனசு லேசான மாதிரி இருந்திச்சு.

வீட்டுக்கு வந்து பார்த்தா பசங்க ரெண்டும் வெளியில விளையாடிட்டு இருந்திச்சுங்க. அந்த மாதிரி அதுகள இவ பார்த்ததேயில்ல. ரெண்டு அடி எடுத்து வச்சாலே மூச்சு வாங்கிற பசங்க அவ்வளவு ஆர்வமா ஓடிப் புடிச்சு விளையாடுனாங்க.

      ‘அந்தோனியாரே’ னு அப்பிடியே உட்கார்ந்துட்டா.

மேரிக்கு சொந்த ஊர் நாகர்கோயில் பக்கம். சென்னையில எபனேசருக்கு வாழ்க்கப்பட்டு வந்து பல வருசம் ஆச்சு. சின்ன வயசிலேயே சொந்தத்தில முடிச்சிக் குடுத்திட்டாங்க. அவருக்கு அவங்க சொந்தக்காரர் கடையில வேல. பொறந்த இடமும் செழிப்பில்லாம, புகுந்த இடமும் செழிப்பில்லாம மேரி வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு. கஷ்ட ஜீவனம் ஆனாலும் கட்டுக்கோப்பான குடும்பம்.

அந்தோனியார் மகிமையால பசங்க குணமான நாள்ள இருந்து மேரிக்கு அப்படி ஒரு நம்பிக்கை பொறந்துடிச்சு.

இவ சொல்லி நெறையப் பேருக்குப் பல கஷ்டங்கள் தீர்ந்ததக் கண்ணால பார்த்தா. எது எது எப்படியிருந்தாலும் வாரம் ஒவ்வொரு முறை அந்த அந்தோனியாரைப் போய்ப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தா. தனக்கென்றில்லாமல் பிறர்க்கும் சேர்த்து வணங்கும் நல்ல உள்ளத்தைக் கண்டு எபனேசரும் இதற்குச் சம்மதம் கொடுத்திருந்தான்.

இன்று பக்கத்துத் தெரு வாணியம்மாவுக்காக வேண்டிக்க கெளம்பி வந்திட்டா. வாணி நல்ல பொண்ணு. மேரி பசங்களுக்கு அவதான் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பா. அப்படியே வீட்டு வேலைகளுக்கும் ஒத்தாசை பண்ணுவா. அப்பா இல்லாத பொண்ணு. அம்மாதான் வீட்டு வேல செஞ்சு அதைப் பார்த்துக்கிட்டா. கஷ்டப்பட்டு பத்தாவதுவரைக்கும் படிச்சா. அதுக்குமேல பக்கத்துல இருந்த பிரிண்டிங் பிரெஸ்ல வேலை கெடச்சுச்சு. அங்க சேர்ந்து ரெண்டு மாசம்கூட ஆகல்ல, அவங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. கடுமையான ஜுரம் வந்திருச்சு. எல்லாருமா சேர்ந்து பக்கத்தில இருக்கிற மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்க இருந்த டாக்டர் அவங்கள பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போகச் சொல்லிட்டாரு. அங்க போய் சேர்ந்து பெரிய பாடாய்ப் போச்சு. ஆட்டோக்கார மைக்கல் அண்ணனும், எதிர் வூட்டு செண்பகமும், மேரியும் வாணி கூடவேயிருந்தாங்க. ரெண்டு நாள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இருந்து ஒரு வழியாத் தேத்தி வூட்டுக்குக் கூட்டியாந்தாங்க. வாணியம்மா மேரி கையப்புடிச்சிட்டு ஓன்னு அழுதாங்க. நீ தெய்வம் மேரி அப்படின்னு கட்டிக்கிட்டாங்க.

அவங்க சார்பாத்தான் இன்னைக்கு கோவிலுக்குப் போறா.

நல்லது நடக்கும்ன நம்பிக்கையோட.



(தொடரும்)

Tuesday, March 22, 2016

தாம்பரம் டு பீச் - 6

ஆறு      -     மீனம்பாக்கம்

08 : 21

திராவிடனின் சொந்த ஊர் திண்டிவனத்துக்குப் பக்கம். செஞ்சிச் கோட்டை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே? அதுதான் அவர் ஊரு. விவசாயக் குடும்பம். அதே நேரம் நாட்டுப்பற்று நெறைய. இவங்க தாத்தா காந்தியோட தண்டி யாத்திரையில கலந்துக்க வட இந்தியா வரைக்கும் போனவரு. இவங்க சித்தப்பா பாகிஸ்தான் போருல வீரமரணம் அடைஞ்சவரு. இந்த தலைமுறைக்கு ராணுவத்தில பெருமையாச் சேர்ந்தவர் திராவிடன். எல்லையில 10 வருஷம் வேல பாத்திட்டு இப்ப ரெண்டு மாசமாத்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கார்.

கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க. ரெண்டு, மூணு பொண்ணுங்க ஜாதகமெல்லாம் வந்திருக்கு. வீட்டுல இவனோட அம்மாவும், கல்யாணமான அக்காவும் எப்படியும் சித்திரைக்குள்ள முடிக்கணும்னு தீவிரமா இருக்காங்க.

வேலைத் தளத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல். வாரம் ஒருமுறை வீட்டுக்குப் போய் வருவது மனதுக்கு இதம்.

இன்று கோட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு பணி நிமித்தமாகச் செல்ல வேண்டியதாயிற்று.

காலையில் ஊரிலிருந்து நண்பன் விமலநாதன் பேசினான்.

‘மாப்பிள்ள, எப்பிடிடா இருக்க? இங்க ஊர்ல திருவிழாவுக்கு வருவ இல்ல? நம்ம பசங்க எல்லாம் உன்னைப் பார்க்க ஆசையா இருக்காய்ங்க. கண்டிப்பா இந்த வாட்டி வந்துரு மாப்பிள்ள’

விமலநாதன் இவர் பால்ய சினேகிதன். சிறு வயது முதல் ஒன்றாகவே பள்ளிக்கூடத்தில் படித்தவன். கிராமத்துப் பள்ளியில் படித்ததுடன் அங்குள்ள அனைத்து இன்பங்களையும் பகிர்ந்தவன்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளியில் கூடப் படித்த பரிமளாமீது முழு வகுப்புமே ஆசைப்பட்டுக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. ஆனா, அந்தப் புள்ளையோ குனிஞ்ச தல நிமிராம வரும் ; போகும். விமலநாதன் அந்தப் புள்ளைக்குக் காதல் கடிதம் கொடுத்தது பெரிய கதை. இன்று நினைச்சாலும் சிரிப்பு வரும்.

விமலநாதனுக்குப் படிப்பு சுமாராகவே வந்தது. பார்ப்பதற்கும் அவன் ரொம்ப சுமாராகவே இருப்பான். ஆனால், அவனுக்குக் காதல் வந்தது. மற்றவர்களிடம் சொன்னால் கேலி பண்ணுவார்கள் என்ற பயம். அதைவிட நடுவில் பூந்து கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தான் அதிகம். தானே உட்கார்ந்து யோசிச்சி ஒரு கடிதம் எழுதினான். அதை யாருக்கும் தெரியாமல் கொடுக்க, மற்றப் பசங்களுடன் சேர்ந்து வீட்டுக்குப் போகாமல், பரிமளா வரும் வழியில் காத்திருந்தான். என்றும் அந்தப் பெண் தனியாகவே வரும். அதை தனக்குச் சாதகமாக எண்ணினான்.

பரிமளா வரும் சத்தம் கேட்டது. மறைவிலிருந்து வெளிப்பட்டு அவள் முன்னே போய் நின்றான். அவள் அரண்டு போனாள். நல்ல வேளை, வீரிட்டுக் கத்தவில்லை. தன் பள்ளியில் படிக்கும் பையன் என்று அவன் சீருடை சொன்னது.

திடீரென்று நாலாய் மடிக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை அவள் கையில் திணித்து விட்டு ஓடியே போனான்.

அவளுக்கு சிரிப்பு, சிரிப்பாய் வந்தது.

வீட்டுக்குப் போனதும் அதில் என்னதான் எழுதியிருக்கிறான் என்று படிக்க ஆவலாயிருந்தது.

படித்தாள். சிரித்தாள். தொடர்ந்து படித்தாள்.

மறுநாள் விமலநாதனிடம் அதே கடிதம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தன்னை ஒரு ஹீரோபோல மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள நண்பர்கள் மத்தியில் அந்த கடிதத்தைப் பிரித்தான் விமலநாதன்.

அவனைத் தவிர எல்லோரும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.

சிவப்புப்பேனாவால் வரிக்கு வரி அடித்துத் திருத்தப்பட்டிருந்தது.

கடைசியில் 0/100 என்று மதிப்பெண் வேறு.

அதனடியில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தது

      ‘முதல்ல தப்பில்லாம ஒழுங்கா எழுதப் பழகு, அப்புறம் காதலிச்சுக்கலாம்’

ரயில் வர பழைய நினைவுகளைக் களைந்து விட்டு ரயிரேறத் தயாரானார்.



(தொடரும்)

Monday, March 21, 2016

தாம்பரம் டு பீச் - 5

ஐந்து     -      திரிசூலம்

08 : 19

ஸ்ரீகுமார் கேரளாவில் கொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தான். மிகவும் வறிய குடும்பம். அம்மாவும் அப்பாவும் கூலி வேலை செய்து வந்தார்கள். அவனையும் சேர்த்து 5 பிள்ளைகள். தினமும் அரைவயிறு கஞ்சிதான். பள்ளிப் படிப்பு வறுமையால் பாதியில் நின்றது. நல்ல வேளை, அக்காக்கள் அழகாக இருந்ததால் வரன்கள் தாமாகவே முன் வந்து திருமணம் செய்தார்கள். அதில் ஒரு மைத்துனர் டுபாயில் இருந்தார். இவனுக்கும் விசா ஏற்பாடு பண்ணிக் கூடவே கூட்டிக் கொண்டு போனார்.

டுபாய் இவனுக்கு பிரமிப்பாய் இருந்தது. ஆனால், வேலை பெண்டு நிமிர்ந்தது. மச்சான் வேலை செய்த வோர்க் ஷாப்பில் வேலை பழகினான். கடும் உழைப்பால் முன்னேறினான். பணம் சேர்ந்தது. கூடவே ஊரில் செல்வாக்கும் கூடியது. திருமணமும் காலாகாலத்தில் நடைபெற்றது. குடும்பத்தை ஊரில் விட்டு விட்டு மீண்டும் வளைகுடா வாழ்க்கை. பேயாய் உழைத்தான். துணிந்து அனைத்துத் தொழில்களிலும் இறங்கினான். தர்மம், நியாயம் எல்லாம் வேலைக்காகாது என்று முழுசாக நம்பினான். படித்தவர்களைக் கண்டாலே உள்ளே கறுவினான். தனக்குக் கிடைக்காத படிப்பு அவர்களுக்கு அமைந்தது வசம்பாய்க் கசந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவதை வழக்கமாகக் கொண்டான்.

இவனுக்கு பெனோ நண்பனானான்.

ஒரு நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியான இவன் ஸ்ரீகுமாரின் கட்டுப்பாட்டில் இருந்த வீட்டில் சில காலம் தங்கினான். ஊர்ப்பாசம் இருவரையும் இணைத்தது. பணம் பற்றிய சிந்தனை அந்த நட்பை மேலும் பலப்படுத்தியது.

எவ்வளவு நாள் இப்படியே இருந்து கஷ்டப்படுவது என்று ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டார்கள்.

      ‘ஏட்டா, எனக்கு ஒரு பெரிய ஜோலி கெடச்சிருக்கு, அதைப் பண்ணினா பெரிய            அமவுன்ட் கெடைக்கும். நாட்டில போய் செட்டில் ஆகிடலாம்’

பெரிய தொகை என்றதும் ஸ்ரீகுமாரின் மூக்கு வேர்த்தது.

      ‘என்னையும் பிஸ்னஸ் பார்ட்னராய் சேர்த்துக் கொள்ளேன்.'

      ‘அதுக்கு சம்பந்தப்பட்டவங்களைக் கேட்கணும்’

      ‘என்னப்பா இப்படிச் சொல்ற?’

‘ஏட்டா, பெரிய பார்ட்டி அவங்க ஒத்துக்கிட்டா நீயும் எங்க கூட வந்திடலாம், மனசிலாயோ?’

இந்த சம்பாஷணை முடிந்து ரெண்டு நாளில் ஸ்ரீகுமாரிடம் ஒப்புதல் வழங்கப் பட்டது. ஒரு குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைக்கப் பட்டான். அங்கே பல பேர் இருந்தார்கள். எல்லோரும் வடமொழியில் பேசினார்கள்.

முடிவில் இவனிடம் ஒருவன் ஆங்கிலத்தில் பேசினான்.

‘உனக்கு இன்றிரவு சென்னை செல்ல விமானப் பயணச் சீட்டு ஏற்பாடாகியுள்ளது. அங்கே விமானநிலையப் பணியாளர் ஒருவர் உன்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உனக்கு ஒரு பொதி தருவார். ரயிலில் எழும்பூர் சென்று ஒரு நண்பரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். அவர் தொலைபேசி எண் உனக்கு இன்று கிடைக்கும். உனக்கான சன்மானம் உனது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது’

தனது தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்த சமிக்ஷை.

எடுத்துப் பார்த்தான். பெருந்தொகை இருப்புக் கணக்கில் ஏறியிருந்தது.

ஆச்சர்யப்பட்டான்.

இது சரியா தவறா என்று யோசிக்க பணத்தாசை தடுத்தது.

இப்பொழுது தனக்குச் சொல்லப்பட்ட அறிவுரையின்படி திரிசூலம் ரயில் நிலையத்தில் தன்னை சரியாக அடையாளம் கண்டு கொண்ட, ஆனால் தான் யாரென்று அறிந்திடாத யாராலோ கொடுக்கப்பட்ட இரு பெரும் பைகளுடன் ரயில் ஏறினான்.



(தொடரும்)