Tuesday, March 4, 2014

களையெடுப்பு

முகநூல் நமக்கு நண்பர்களை அள்ளி வழங்குகிறதோ இல்லையோ, நண்பர்களென்று எண்ணிக்கொண்டிருப்பவர்களின் முகத்திரையைக் கிழித்து, நிஜ முகத்தைக் காட்டுவதென்னவோ உண்மை. அண்மையில் ஒரு பதிவில் எப்படியான நண்பர்களை முகநூலில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரை கண்டேன். முன்பின் தெரியாதவர்களைத் தவிர்ப்பது நல்லதாம். ஏதோ ஒரு கால கட்டத்தில் நம்முடன் ஒரு முறை தொடர்பு கொண்டோரும் இதில் அடக்கம். சில நேரங்களில் பால பாடசாலையில் நம்முடன் இருந்து பிரிந்தவர்கள் நட்பு பாராட்டக்கூடும். இந்த ஒரே காரணத்திற்காக இவர்கள் அலப்பறையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லையாம். சிலர் எல்லாப் பதிவுகளுக்கும் உள்ள அனைத்து நண்பர்களையும் டாக் (Tag) செய்வார்கள். இதில் என்ன அசௌகர்யம் என்றால் அந்தப் பதிவுக்கு நமக்குச் சம்பந்தமே இல்லாத யார் விருப்பு,பின்னூட்டம் போட்டாலும் அலர்ட் வரும். இது வேலைத்தளத்தில் பெரும் இம்சை. இந்த மாதிரியான ஆர்வக்கோளாறுப் பேர்வழிகளும் கழட்டிவிடப்பட வேண்டியவர்களாம். அடுத்து கேம் (game) ரிக்வெஸ்ட் குடுத்து டார்ச்சர் பண்ற பார்டிகள். வேல பாக்கவே நேரம் பத்த மாட்டேங்கிது, இதுல எங்கடா நாங்க கேம் விளையாடுறது? இதுகளையும் தூக்கிடலாமாம். அடுத்து எல்லாத்துக்கும் ஒரு கருத்துரை சொல்லி அறுக்கும் பயபுள்ளைங்க. இன்னொரு ரகப் பயங்கரவாதிங்க இந்த தன்னிலை மேம்படுத்தல் (status update) க்ரூப். நான் பல் தேய்க்கிறேன், நான் குளிக்கிறேன்ல ஆரம்பிச்சு ஏதோ தங்களைப்பத்தி மட்டுமே இந்த உலகம் நெனச்சுக்கிட்டு இருக்கிற மாயைல விழுந்து அடுத்தவன உயிரோட கொல்றவனுங்க. அத்தோட ஓவரா உணர்ச்சிவசப்பட்டு சாமி படம், பாரிய நோயுள்ள குழந்தை படம்னு போட்டு சோகத்தப் பிளிஞ்செடுப்பாங்க. அவங்களுக்கும் ஒரு பெரிய கும்புடு. கில்மா மேட்டர் போடுற ஆளுங்க நெறைய பேரு இருக்காங்க, அதையும் கடந்திடுங்க. சிலர் நீங்க என்னதான் வாழ்த்து சொன்னாலும் அசைய மாட்டாங்க. அவங்களும் உங்களுக்கு ஒண்ணும் அனுப்ப மாட்டாங்க. இப்படியானவங்க நண்பரா இருந்தா என்ன இல்லாட்டி என்ன? ஆ, மிக முக்கியமான ஒண்ணை விட்டுட்டேன், மனைவியின் நண்பிகளைக் கண்டிப்பா சேர்த்துக்காதீங்க. இதையெல்லாம் கடைப்பிடிச்சு நானும் களையெடுப்பு வேலைல எறங்கினேன். இப்பதான் என் முகநூல் பக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கு. அப்பாடா…..!