Thursday, April 7, 2016

தாம்பரம் டு பீச் - 18

பதினெட்டு    -    கடற்கரை

09 : 01

மேரி காலியாகிப் போயிருந்த பெட்டியைப் பார்த்தாள். ஆங்காங்கே சிலர் தென்பட்டார்கள். எல்லோருமே வேலைக்குப் போகும் அவசரத்தில் இருப்பது தெரிந்தது. அடிக்கடி கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், கைபேசியில் பேசிக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள்.
மேரி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். ரயிலின் வேகத்துக்குக் காட்சிகள் ஓடின. சிறு வயதில் முதன்முதலாக ரயிலில் செல்லும்போது அதைக் கண்டு தான் வீரிட்டு அழுததை எண்ணிப் பார்த்தாள். சிரிப்பு வந்தது.
தன் எதிர் இருக்கையின் கீழே தற்செயலாகப் பார்வை போனது.
ஒரு பொட்டலம் தென்பட்டது.
என்னவாயிருக்கும் என்ற ஆர்வம் மேலிட, சற்றே குனிந்து அதனை எடுத்தாள்.
பிரபல இனிப்பகத்தின் பெயர் அச்சிடப்பட்ட பை. உள்ளே என்னவோ இனிப்பு இருப்பதுபோல இருந்தது. என்னதானென்று பார்ப்போமே என்ற ஆவல் மேலிட அந்தப் பையைப் பிரித்தாள்.
அதிர்ந்தாள்.
உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள். எல்லாமே 500 ரூபாய் தாள்கள்.
இவ்வளவு பணத்தைப் பார்த்தறிந்திராத மேரிக்கு தலை சுற்றியது.
பிரமை பிடித்தவள்போல சில நேரம் இருந்தாள்.
ரயில் தன் போக்கிலே இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
தன் கஷ்டங்களுக்கெல்லாம் ஆண்டவனாகப் பார்த்து அனுப்பி வைத்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியது. கஷ்டத்தில் தத்தளிக்கும் தனது குடும்பத்தை நினைத்தாள். இந்தப் பணம் அவர்கள் கஷ்டத்தைக் குறைக்கும். அத்துடன் இது திருட்டல்ல. அடுத்தவர்களை ஏமாற்றி அடைந்ததல்ல. முக்கியமாக யாரும் தன்னைப் பார்க்கவில்லை.
உடனே தலையை உலுக்கிக் கொண்டாள்.
இது ஏதோ தப்பான பணம் என்று உள்ளுணர்வு சொல்லியது. இதுவரை நடந்து முடிந்திருந்த சம்பவங்கள் கண் முன்னே வந்து போயின. முக்கியமாக அந்த இரண்டு முதியவர்களின் பேச்சு திரும்பத் திரும்ப மனதில் எதிரொலித்தது. தான் இந்தப் பணத்தை எடுத்தால் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நிச்சயமாக ஏதோ கேடு விளையும் என்று மனம் சொல்லியது.
கண் மூடி அந்தோனியாரை நினைத்தாள். பிரார்த்தனையில் ஐக்கியமானாள்.
கண் திறந்தாள்.
வண்டி வேகம் குறைந்து ரயில் நிலையத்தின் வருகையை உணர்த்தியது.
மேரி எழுந்தாள்.
வண்டி நின்றது.
இரண்டடி எடுத்து வைத்தாள்.
ஏதோ நினைத்துக் கொண்டவள்போல மீண்டும் தனது இருக்கையருகே வந்தாள்.
குனிந்து அந்தப் பையை எடுத்தாள்.
மெதுவாக வண்டியை விட்டு இறங்கினாள்.
நடந்தாள்.
அவள் கண்கள் எதையோ மிகவும் ஆர்வமாகவும், அவசரமாகவும் தேடின.
திடீரென்று பிரகாசமாயின.
வேகமாக நடந்து சென்று அந்தப் பையை அந்தத் திசை நோக்கி வீசியெறிந்தாள்.
மனசு முழுக்க மகிழ்ச்சியுடன் அந்தோனியாரைத் தரிசிக்கக் கிளம்பினாள்.
உலகச் சரித்திரத்தில் முதல் முறையாகப் பணம் எனும் அரிய வஸ்து குப்பைத்தொட்டியைக் கண்டது. நொந்தது.


(முற்றும்)

Tuesday, April 5, 2016

தாம்பரம் டு பீச் - 17

பதினேழு      -     கோட்டை

08 : 53 

திராவிடன் முகத்தில் ரத்தம் உறைந்திருந்தது. கைக்குட்டையை வைத்து அழுத்தியதால் ரத்தப் போக்கு நின்றிருக்க வேண்டும். அசூசைப்பட்டு அழுத்தித் துடைத்திருந்தால் இன்னும் ஆழமான காயம் ஏற்பட்டிருக்கலாம். நல்ல வேளை அப்படி அவர் அழுத்தித் துடைக்கவில்லை. இருந்தாலும் பிளேடின் கூர்மை ரத்தப் போக்கை உண்டு பண்ணியிருந்தது.

திருடர்களின் பலமே அடுத்தவரின் சஞ்சலம். தன் உடமையை அடுத்தவன் காபந்து பண்ணுவதை உணர்ந்து திடுக்கிடும் தருணங்கள் திருடனை அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி நகர வைக்கும். பொதுவாக இருவர் அல்லது மூவர் சேர்ந்தே தொழிலை அரங்கேற்றுவர். சம்பவத்தை ஒருவன் உணர்ந்து குரல் எழுப்பும் வேளையில் அனேகமாகப் பொருள் கை மாறிப் போயிருக்கும். சந்தேகத்துடன் அருகில் இருப்பவனைப் பிடித்துச் சோதனை செய்வது எந்தப் பயனையும் தராது. மாறாக அவனிடமிருந்து பழி சொல்லையும், அருகிலிருப்பவர்களின் ‘ஐயோ, பாவம்’ கோஷங்களையுமே பெற்றுத் தரும். அனேகமாக அடுத்த நிறுத்தத்தில் அந்தத் திருடன் இறங்கித் தன் சகாக்களுடன் கை கோர்த்து, அடுத்த இரையைத் தேடிச் சென்று விடுவான்.

ஆனால், இன்றைய சம்பவம் தனியொருவனால் மேற்கொள்ளப்பட்டது. காரணம் அவன் தாக்கப்பட்ட வேளையிலோ, பொருளைக் காபந்து பண்ணிக் கொண்டு செல்லும் பொழுதிலோ யாரும் அவனுக்குக் கை கொடுத்து உதவ வரவில்லை. ரத்தத்தைக் கண்டு பீதியடைந்திருக்கக் கூடிய நொடிகளைத் திருடன் மிகவும் நம்பினான். அந்த நிமிடங்களைத் தான் தப்பிக்கப் பயன்படுத்த முயன்றான். திராவிடன் எனும் ராணுவ வீரரின் சமயோசிதமும், அன்வர், எட்வர்ட் ஆகியோரின் துணிச்சலும் அதைத் தடுத்து விட்டது.

ராணுவத்தில் தமக்கு அளிக்கப் பட்டிருந்த பயிற்சியை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து அன்றைய நாளில் செய்ய வேண்டியிருந்த பணிகளை மனம் அசை போட்டது. மேலதிகாரியைக் கண்டு பேச வேண்டிய விடயங்களைத் தனது கைபேசித் திரையில் இன்னொரு முறை பார்த்துக் கொண்டார்.

ரயில்ப்பெட்டிகளில் இப்பொழுது ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

மேரி ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள்.

தனது பிள்ளைகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

பெரியவன் படிக்கும் பள்ளியின் ஃபாதர் இவளைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

    ‘நல்லாப் படிக்கிறான் உன் புள்ள. கவனம் கலையாமப் பார்த்துக்கோ. ரொம்ப நல்லா      வருவான்’

இதைக் கேட்க மனசுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்துச்சு. எபனேசர் வீட்டுக்கு வந்தோன்னே அவனிடம் இது பற்றிச் சொல்லிச் சிலாகித்தாள்.

    ‘நமக்கு செல்வத்தக்குடுக்காட்டியும் நம்ம புள்ளைக்கு நல்ல படிப்பக் குடுத்திருக்காரு      ஆண்டவன்’

மற்றவன் அவனை விட ரெண்டு வயசு சின்னவன். அம்மா செல்லம். இன்னும் இவளையே சுத்தி, சுத்தி வருவான். எப்ப பாரு வெளையாட்டுதான். அண்ணன் மாதிரி நல்லாப் படிக்கணும்னு சொல்லுவா.

    ‘போம்மா, எப்ப பார்த்தாலும் படிக்கச் சொல்லியே உயிரெடுக்காத’

மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

வண்டி நின்றது.

திராவிடன் இறங்கினார்.



(தொடரும்)

Sunday, April 3, 2016

தாம்பரம் டு பீச் - 16

பதினாறு      -    பூங்கா

08 : 50

பொதுவாக எழும்பூரில் இறங்கி தாம்பரம் நோக்கிச் செல்லும் வண்டியில் ஏறி விடும் நசீர் வாப்பா இன்று இறங்கவில்லை. அவருக்கு கிச்சாவை விட்டுவிட்டு இறங்க மனசு வரவில்லை.

கிச்சா அமைதியா உட்கார்ந்திருந்தார். கீழே தள்ளப்பட்டதில் நிலைகுலைந்துபோயிருந்தார். வழக்கமாய்ப் பாடிக் கொண்டிருப்பவர் இன்று வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையாக இருந்தார்.

      ‘என்ன கிச்சாண்ணே, மனசு ஒடஞ்சு போய்ட்டீங்க?’

நிலைமையைச் சகஜமாக்க எண்ணி நசீர் வாப்பா கேள்வி கேட்டார்.

‘இல்ல பாய், கீழ விழுந்ததில கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். ஆனா, அடுத்தவன் பொருளைக் காபந்து பண்ணுறதுல இருந்த வேகமும், அது கெடைக்கல்லன்னோன்னே அதுக்குத் தடையா இருக்கவங்கள தாக்குற வெறி எல்லாம் என் சுபாவத்துக்குப் புதுசாயிருக்கு. அதப்பத்தித்தான் யோசன பண்ணிட்டு இருந்தேன்’

‘என்ன பண்றது அண்ணே, இப்பத்தைய சமுதாயம் சுயநலமாத்தான் வளருது, சிந்திக்குது. அவன் கத்திய எடுத்து குத்தப் போனோன்னே எனக்கு மனசு ஒரு நிமிஷம் அப்படியே ஸ்தம்பிச்சுருச்சு. நல்ல வேளை மத்தத் தம்பி ஒரு உதை விட்டதுல கை தவறிப் போச்சு’

‘நமக்குக் கெடைக்க வேண்டியது எதுவோ அது கண்டிப்பாக் கெடைக்கும். நமக்குக் கெடைக்கக் கூடாதது எதுவோ அது கடைசிவரை கெடைக்காது. இது ஒரு படத்துல சூப்பர் ஸ்டார் சொல்லுவாரு’

‘உண்மைதான். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்பட்டா அது அழிவுலதான் கொண்டு போய் விடும்’

இவையனைத்தும் மேரியின் காதில் மிகத் தெளிவாக விழுந்தன. அந்தோனியாரைப் பற்றிய சிந்தனையுடன் இருந்தவள் இந்த வார்த்தைகளை உள்வாங்கினாள். பணம் இருந்தால் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தீரும். ஆனால் அளவுக்கதிகமான பணம் நிம்மதியைக் குலைக்கும். அதிலும் அடுத்தவன் பணத்துக்கு ஆசைபட்டால் அது கண்டிப்பாக கேடு விளைவிக்காமல் விடாது. இதில் அவள் மனம் உறுதியாக இருந்தது.

எட்வர்ட் சிந்துஜா மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். காதல் வயப்பட்ட இருவர் எப்படியிருப்பார்களோ அவ்வாறு இருந்தது அவர்கள் நிலை. பேச்சு குறைந்து போய், பார்வையாலேயே பேசிக் கொண்டார்கள்.

எட்வர்ட் மனதில் இவ்வளவு நாட்களும் இவளுடன் விடு பட்டுப் போன பொழுதுகளை எப்படியெல்லாம் ஈடு கட்டலாமென்ற யோசனை ஓடியது.

சிந்துஜா மனதிலோ இவனைத் தன் வீட்டில் அறிமுகப் படுத்தி அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி எழுந்தது.

ரயில் வேகம் குறைந்து மேடையில் நின்றது.

இருவரும் இறங்கினார்கள்.

கூடவே நசீர் வாப்பாவும் கிச்சாவும்.


(தொடரும்)


Saturday, April 2, 2016

தாம்பரம் டு பீச் - 15

பதினைந்து    -    எழும்பூர்

08 : 47

நியாஸ் கண்ணில் ரயில் தென்பட்டது. என்றைக்குமில்லாது இன்று போலீஸ் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான்.

ராஜாபாதருக்குச் சொன்னதுபோல புத்தகக் கடையின் அருகில் போய் நின்றான்.

ரயில் நின்றது. குப்பையாக மக்கள் வந்து வெளியே விழுந்தார்கள். அதே அளவில் ஏறி உள்ளே போய் விழுந்தார்கள்.

அலுவலக நிறுத்தத்தில் அன்வர் மெதுவாக இறங்கினான்.

பொதியைச் சுமந்து கொண்டு ராஜாபாதரும் பிளாட்பாரத்தில் அடிவைத்தான். அவன் கண்கள் நியாஸைத் தேடின.

சொன்னது போலவே அந்தப் பிரபலமான புத்தகக் கடை வாசலில் அவன் தென்பட்டான்.

திடீரென்று அவனைப் போலீஸ் நாய் ஜெல்டா வழி மறித்தது.

பயந்தே போனான்.

அதன் கூடவிருந்த அதிகாரி அவனிடம் பையில் என்ன என்று கேட்டான். இவனுக்குப் பீதியில் வாய் வரண்டு போய் வார்தைகள் உளரல்களாக வெளியேறின.

இவன் ஒரங்கட்டப்பட்டான். பை ஒரு ஓரத்தில் வைத்து ஜெல்டாவால் முகரப்பட்டது. முகர்ந்து முடித்த அது கால்களால் எதையோ பற்றியிழுத்தது.

ஸ்பீக்கர் என்று கூறப்பட்டிருந்த, இவனும் நம்பியிருந்த அந்தக் கருவியின் உள்ளேயிருந்து சின்னச்சின்ன பிளாஸ்டிக் உறைகள் வெளிப்பட்டன. அதில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் வேறொரு அதிகாரி. லேசாக முகர்ந்து அருகில் நின்ற சகாவிடம் தலையை ஆட்டி என்னமோ சொன்னான்.

ராஜாபதரிடம் அந்த அதிகாரி நெருங்கி

‘ஆன்டி நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல உன்னைக் கைது செய்கிறோம். எங்ககூட ஸ்டேஷனுக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிட்டா உனக்கு நல்லது’

ராஜாபாதருக்குத் தலை சுற்றியது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. திடீரென்று நியாஸ் ஞாபகம் வந்தது.

‘சார் எனக்கொண்ணும் தெரியாது சார். அவன்தான் சார் இத எங்கிட்ட கொடுத்து பத்திரப்படுத்தச்சொன்னான்.’

அவன் கை காட்டிய திசையில் பலர் நின்றிருந்தார்கள். ஆனால் நியாஸ் எங்கோ மாயமாய் மறைந்திருந்தான்.

‘சார், அங்கதான் நின்னுக்கிட்டு இருந்தான் சார். வேணா நான் ஃபோன் போட்டு அவங்கிட்ட பேசுறேன்’

அவசரமாகத் தனது ஃபோனை எடுத்து நியாஸை அழைக்க விழைந்தான்.

      ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் பாவனையில் இல்லை’

மெதுவாகக் காவலர்களால் வெளியே அழைத்துச் செல்லப் பட்டான்.

அதனை அடுத்த பிளாட்பாரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நியாஸ் வேறு ஒரு ஃபோனில் யாரிடமோ சொல்லத் தொடங்கினான்.

ரயில் கிளம்பியிருந்தது.



(தொடரும்)