Saturday, December 28, 2013

கேக் - செய்முறை விளக்கம் அல்ல !


அவன் இல்லாமல் (எவன் அவனுன்னு கேட்கப்படாது, அது ஓவன் என்று தப்பாக தமிழில் சொல்லப்படும் ஒரு மின்னுபகரணம்) கேக் செய்வது எப்படியென்று ஒரு பதிவு படித்தேன். அம்மா நன்றாகக் கேக் செய்வார்கள்.செய்து எங்கள் விடுதிக்கு அனுப்புவார்கள். அனேகமாக எல்லாப் பிறந்த நாளுக்கும் அம்மாவின் கேக்தான். அப்போதும் சில பேக்கறிகள் இருந்தாலும் அங்கெல்லாம் வாங்குவதில்லை. அனேகமான எல்லாத் தின்பண்டங்களுமே வீட்டிலேயே செய்யப்படும்.

 பள்ளியில் நாங்கள் ஒரு 3-4 பேர் ஒரு கணக்கு டீச்சரிடம்  டியூஷன் போவோம். டியூஷன் அனேகமாக அவர் வீட்டிலேயே இருக்கும். எங்களுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு அடிக்கடி உள்ளே போய் ஏதாவது கொறித்துக் கொண்டு வருவார்.  அவரும் அவர் மகளும் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். நாங்களும் நமட்டுச்சிரிப்புடன் கணக்குப் போடுவோம். ஒரு நாள் அத்தி பூத்தது போல எங்களுக்கு (அன்று 2 பேர்தான்) ஒவ்வொரு துண்டு கேக் கொடுத்தார். கொடுத்து விட்டு எப்படி இருக்கு,எப்படி இருக்கென்று அவர் பெண் கேட்டுக் கொண்டேயிருந்தாள். சூது வாது தெரியாத நாமும் (?) சாப்பிட்டு விட்டு நன்றாக இருப்பதாகத் தலையாட்டினோம். அதற்கு அந்த டீச்சர் ' ஒன்றுமில்லை, நாலு முட்டையில் ஒன்று கொஞ்சம் கெட்டமாதிரி இருந்தது. அதுதான் உங்களுக்குக் கொடுத்து டேஸ்ட் பார்க்கச் சொன்னோம்' என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் ! எங்களுக்கு எப்பொழுது வெளியில் வந்து வாந்தியெடுக்கலாமென்று இருந்தது. இப்படியும் சில ஜென்மங்கள் ???

என் வீட்டிலும் கேக் செய்யவென்று ( நான் குக்கரி கிளாஸ் போய் நிறைய விஷயம் படித்திருக்கிறேனாக்கும் !) ஒரு அவன் வாங்கினார் சகதர்மினி. வாங்கி சில முறை கேக் செய்யப் பயன்பட்டது. பின்னர் பீட்சா சுடவும் உதவியது. இலங்கையிலிருந்து இங்கே இடம்பெயர்கையில் அதையும் கட்டியிழுத்துக் கொண்டு வந்தாயிற்று. இப்பொழுது அது கம்பீரமாகச் சமையல் அறையில் உட்கார்ந்து இருக்கிறது. அதில் பிஸ்கட் பாக்கட்டுக்களை சேமிக்கப் பயன்படுத்துகிறோம். செல்லமாக அதை நான் பிஸ்கட் ஸ்டாண்ட் என்று அழைப்பேன். அப்பொழுது ஒரு ஜோடிக் கண்கள் என்மேல் அனலைப் பாய்ச்சும் !



Sunday, December 22, 2013

சுவாரஸ்யமான புகைப்படங்கள்


இந்தப் புகைப்படம் நான் பிறக்க முன் எடுக்கப்பட்டது. எங்க வீட்டுப் பழைய ஆல்பத்திலிருந்து கிடைத்தது. இது ராஜரத்தினம் மாமாவின் குடும்பப் படம். அவர் கொழும்பில் பிரபலமான வக்கீல்.சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சட்டம் படிக்கும்போது காதல் வயப்பட்டுச் சிங்களப்பெண்ணை மணமுடித்தார். அந்தத் திருமண பந்தத்தின்மூலம் 7 குழந்தைகளைப் பெற்ற அவர் மனைவி இறுதிப்பிரசவத்தில் இரண்டை ஈன்று இறையடி சேர்ந்தார். பாவம் குழந்தைகள் ! குழந்தைகளுக்குத் தாய் வேண்டுமென்று வருந்திய தந்தையார், இரண்டாந்தாரமாக மேற்படி படத்தில் இருக்கும் பெண்மணியைக் கை பிடித்தார். அவரும் சில நாட்களிலேயே இறந்து போக மனம் வெதும்பினார். அவ்வேளையில் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவியொருவர் தாமாக முன்வந்து அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகும் பெரும்பொறுப்பை ஏற்றார். இதற்காக அவர் தனக்கென்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாதது இங்கே குறிப்பிடத்தக்கது. 

பிள்ளைகள் வளர்ந்தனர். தந்தையின் தொழிலையே மாக்களில் நால்வர் விரும்பி ஏற்றனர். தந்தையின் தொழில் சிறப்பாக நடந்தது. அருகில் வசித்த பெண்களையே மூத்த சகோதரர்கள் காதலித்து மணந்தனர். இவர்கள் வழியிலேயே இளைய பெண்ணும் பேனா நண்பரான ஜெர்மனிய நாட்டவரை காதல் மணம் புரிந்தார். இவ்வேளையில் வாசஸ்தலத்தை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற்றினர். அதற்கு வங்கிகளின் உதவியை நாடினார் மாமா. சொந்த வீட்டுக் கனவு நனவானது. ஆனால் வாங்கிய கடன் நெருக்கியது. தினம் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர், மனவழுத்தம் தந்த கவனப்பிசகால் ரயில் தண்டவாளத்தைக் கடக்கையில் துர்மரணமடைந்தார். பெரிய விருச்சம் வீழ்ந்தது. இது என் தந்தைக்குப் பேரிழப்பென்றால் மிகையாகாது. பிள்ளைகள் வங்கிக்கடனை ஒருவாறு ஒழித்தனர். மற்றவர்களுக்கும் திருமணம் நடந்தேறியது. அவர்களுக்கும் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் வளர்ந்து பெரியவராயினர். அந்த அத்தை இன்னும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அவர் தியாகத்தை பற்றி பேச யாரும் இல்லாது போனதுதான் சோகம். 

Saturday, December 21, 2013

நினைவலைகள்


அப்பொழுது எனக்கு 5 வயதிருக்கும். காலை 6 : 30 மணிக்கு 'நெஞ்சில் நிறைந்தவை' கேட்டுக்கொண்டே படுத்திருப்பேன். 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும், வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்' எனும் பாடல் அடிக்கடி ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகும். அக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இதைத் தொடர்ந்து 7 மணிக்கு 'பொங்கும் பூம்புனல்' ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் இடம்பெறும்.  அதைத் தொகுத்தளிக்கும் அறிவிப்பாளர்கள் கவித்துவமான இரு வரிகளை ஒவ்வொரு பாடலுக்கும் முன்னர் சொல்வது தனி அழகு. மதியம் 12 : 05 க்கு 'சித்திரகானம்' ஒலிக்கும். செய்திகளின் பின்னர் 'இந்திப்பாடல்கள்' ஒலிக்கும். மொழி புரியாவிட்டாலும் முகமது ராஃபி முதல் மூகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என பல வடநாட்டுப் பாடகர்கள் அறிமுகமானது இவ்வண்ணமே. பின்னர் 'ஒரு படப்பாடல்' மற்றும் 'மலர்ந்த்தும் மலராதவை' தொடரும். 2 : 30 க்கு 'மகளிர் விருப்பமும்' அதைத் தொடர்ந்து 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி' ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் கணீர்க்குரலில் ஒலித்ததும் இன்றும் இனிக்கிறது. 'மலையாளப் பாடல்கள்' மூலம் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் பல பெண் பாடகிகள் அறிமுகம். 5 மணிக்கு 'இன்றைய நேயர்' அதைத் தொடர்ந்து 'பிறந்தநாள் வாழ்த்து' என 5 : 30 க்கு 'நீங்கள் கேட்டவையுடன்' வர்த்தக நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். பிற்காலத்தில் இரவு ஒலிபரப்பு தொடங்கிய வேளைகளில் 'இரவின் மடியில்' தாலாட்டுப் பாடித் துயில வைக்கும். இதுபோக 'தேன்கிண்ணம்', கதம்பமாலை','மலர்ந்தும் மலராதவை' எனப் பல நிகழ்ச்சிகள், சிந்தனையைத் தூண்டும் அதேவேளை மனதை மயக்கும்.

விடுமுறை நாட்களை கே.எஸ்.ராஜா ஆக்கிரமிப்பார். 'திரைவிருந்து' மற்றும் 'இசையணித்தேர்வு' மிகவும் எதிர்பார்க்கப்படும்.'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் இடம்பெற்ற 'என்னடி மீனாட்சி' பாடல் பல வாரங்கள் நிலைத்து நின்றது மறக்க முடியாதது.  'ஒலிச்சித்திரம்' (திரைப் படங்களின் கதை,வசனம்) ஒருமணி நேரம் ஒலித்தாலும் சுவாரஸ்யம் குறையாது. பி.எச்.அப்துல் ஹமீத் 'பாட்டுக்குப் பாட்டு' மூலம் மனதுகளைக் கொள்ளை கொள்வார். 'புதுவெள்ளம்' புதிய பாடல்களை அறிமுகம் செய்யும். 'விடுமுறை விருப்பம்' நேயர் விரும்பிய பாடல்களை வாரி வழங்கும். இதற்கிடையில் நாடகங்கள் தமது ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும். ராமதாஸின் 'கோமாளிகள்' நாடகத்தைக் கேட்க ஒரு கூட்டமே இருந்தது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சிகள் ஒலிக்கும். புது ராகங்களை இசைக்கும். அவற்றை ஒலிநாடாவில் பதிவு பண்ணப் பெரிய போட்டியே நடக்கும். 

இன்று போல் அன்று விளம்பரதாரர்கள் இடையில் இடியூறு செய்யாது இருந்த காலமது. அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளின் ஊடே பல விடயங்களைப் பகிர்ந்தார்கள். வெறும் அரட்டைக் கச்சேரியைக் கேட்டு சலிப்புறும் நிலை அன்றில்லை. வானொலி கேட்டல் ஒரு உபயோகமான பொழுது போக்காக இருந்த காலமது. அதற்கு இலங்கை வானொலி முன்னோடியாக இருந்ததென்பது பெருமைக்குரிய விடயம்.

Thursday, December 19, 2013

யதார்த்தம்


நேற்று கத்தார் தேசியதினம். லீவு விட்டுட்டாங்க. எப்பவும்போல நண்பன் ஸ்ரீகாந்தன் அறைக்கு ராஜேந்திரனுடன் போனேன். அங்கு சோமபானம் பருகி. மதிய உணவை முடித்து விட்டுக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். மாலை 5 : 15 மணிக்காட்சிக்கு ஆனந்த மற்றும் ஜோன்ஸ் அழைப்பு விடுத்துப் போயிருந்தார்கள். படம் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் போனோம். வழக்கமாக முதல் படத்தில் காட்டும் அக்கறை,உழைப்பு எதையுமே அடுத்த படத்தில் காட்டுவதில்லை தமிழ் இயக்குனர்கள். சிற்சில விதிவிலக்குகள் இருந்தாலும், அனேகமானவர்கள் படங்களில் ஒருவித சலிப்புத் தெரியும். இந்தப் படம் பார்க்கலாம் ரகம். ஏனோ ஹீரோ மனதில் ஒட்டவில்லை. என்னதான் நடிகர் திலகத்தின் பேரனென்றாலும் தமிழ் நாயகர்களுக்கான முகவெட்டு இவரிடம் இல்லவேயில்லை. அது எப்படியோ போகட்டும். இந்தப் பதிவும் ஒரு சினிமா விமர்சனம் அல்ல. அதையும் தாண்டி ஒரு தனி மனிதனின் உண்மை நிலை பற்றிய விளக்கம் மட்டுமே.

படத்தில் ஒரு காட்சியில் நாயகனும்,நாயகியும் ஒரு ஆட்டோவில் பயணிப்பார்கள். அந்த ஆட்டோக்காரர் சில வசனங்கள் பேசுவார். கூர்ந்து நோக்கினால் அவர் முகம் ரொம்பவும் பரிச்சயமாகப் பட்டது. ஸ்ரீகாந்தனும் அதை ஆமோதிக்க, பார்த்தால் அது எங்களுடன் பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்ற நண்பன் இளங்கோ ! அனேகமானோர் இவன் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அல்லவா சொல்லியிருந்தார்கள் ? 25 வருடங்கள் அந்த மாயச் சூழலில் சிக்கி அவன் அடைந்திருந்த 'இடம்' சில நிமிடங்களே திரையில் இடம்பெற்றதென்றால், இந்த நிலையடைய எவ்வளவு பாடு பட்டிருக்க வேண்டும். வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் ஒரு நல்ல (?) நிலைக்கு வந்திருக்க முடியும். ஏனிப்படி? அதீத திறமை இருந்தும் அதிர்ஷ்டக் காற்று தம் பக்கம் வீசாமையால் கடைசிவரை திரைமறைவிலேயே வாழ்ந்து, வீழ்ந்த எண்ணிலடங்காரைப் பற்றிப் படித்தும், பேசியும் இருக்கிறோம். ஆனால், எம்மில் ஒருவனின் நிலை மனதைத் தைத்ததென்னவோ உண்மை. 

அதன்பின் வந்த காட்சிகளிலெல்லாம் துணை நடிகர்களின் முகங்களை மட்டுமே, என்னை அறியாமல், கண்கள் கூர்ந்து நோக்கின. எத்தனை கனவுகளும், ஏக்கங்களும் அந்தக் கண்களில் தேங்கி நின்றன. அவற்றிலெல்லாம் என்பன் நண்பன் தெரிந்தான் என்பதே உண்மை.

Wednesday, December 11, 2013

என் நண்பனின் இல்லம்


தனதில்லத்தின் முகப்பில் நான் என்றோ அளித்த யாழி பொம்மையை மாட்டி எனக்குப் பெருமை சேர்த்த என் நண்பன் சத்யமூர்த்தி

பாவம் அத்தை !


அப்பாவின் தங்கை, அப்பாவித் தங்கை

அவங்க பேரு தங்கம், உள்ளம் சொக்கத் தங்கம்

நாங்கன்னா அதுக்கு அம்புட்டு உசுரு

அறியாத வயசில அத்தைக்குக் கண்ணாலம்

ரெண்டாந்தாரமா வாய்ச்ச வயசான மாப்பிள்ளை

அஞ்சு புள்ளைங்க கொடுத்த மாமா கெளம்பிட்டாரு பரலோகம்

கஷ்டம்னாக் கஷ்டம் கஞ்சிக்கு மட்டுமல்ல

ஆனா தனியாளாப் புள்ளைகள கரையேத்தி

கடைசிவரை சுகமின்னா என்னான்னு தெரியாமலே

அத்தையும் படுக்கைல விழுந்து மாமா போலவே

40 நாள்ள மெதுவாக மேல போயிருச்சு

ஊருக்கு கௌரதையா போட்ட 4 பவுன் சங்கிலிய

பாடைல போகையில யாரோ பாவிப்பய உருவிட்டானே

அம்மாவ மறந்திட்டு புள்ளைங்க பொருளத் தேடி

வெட்டியான அவுத்துப்பாத்து, வசை பாடி, இருட்டில் தேடி

கடைசிவரை கெடைக்கலியே மருமக சங்கிலி

மண்ணுக்குப் போகும் முன்னே

பொன்னுக்கு சர்ச்சையாச்சு

பொன்னை விரும்பும் பூமியிலே

பொன்னான அத்தைக்கு எங்கய்யா மதிப்பு ?






Tuesday, December 10, 2013

வாழ்வின் விளிம்பில் - நூலாய்வு

16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. நூலாசிரியர் எனது நண்பன் பிரசாத்தின் தந்தை என்பது சிறப்பு. இவரின் ஆக்கங்கள் வலைப்பதிவுகளில் எனக்கு முன்னரே நன்கு பரிச்சயம்.

சுஜாதா,பாலகுமாரன் என மிகச்சில பிரபலங்களின் எழுத்துகளையே விரும்பிப் படித்தது ஒரு காலம். பின்னர் அந்தப் பட்டியலில் கி.ராஜநாராயணன் அய்யாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் இடம் பிடித்தார்கள். இவை தவிர விகடன்,குமுதத்தில் வரும் சிறு மற்றும் நெடுங்கதைகளையும் விடாமல் படிக்கும் வழக்கம் இருந்தது. இணையம் வந்தபிறகு படிக்க நிறைய விடயங்கள் கிடைக்கின்றன ; சில ஆச்சர்யப்பட வைத்தாலும் பல முகம் சுழிக்க வைக்கின்றன. ஆனால் நூலாசிரியரின் வலைப்பக்கம் எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும். தனது பழுத்த அனுபவங்களைப் படிப்பவரின் மனதுக்குப் பிடித்தவாறு எழுதுவதில் வல்லவர். ஏறக்குறைய 70 களின் எழுத்துச்சாயல் அவர் நடையில் இருக்கும். இந்த நூலிலுள்ள சில கதைகள் (அவை உண்மையில் அனுபவக்கோர்வைகள்) ஏற்கனவே வலைப்பதிவு செய்யப்பட்டவை. ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :

1. வாழ்வின் விளிம்பில் மற்றும் 14. விளிம்புகளில் தொடரும் கதை 
இந்தக்கதையின் நாயகன் ரங்கசாமிக்கு உடல்நலம் மிகவும் மோசமாகும்போது அவனுடைய மனவோட்டத்தை பிரதிபலிக்கிறது கதை. இறுதியில் அவனும் மனைவியும், ஈருடல் ஓருயிரென்று வாழ்ந்து, ஒன்றாக இறப்பதாக முடிகிறது கதை. இந்த எண்ண ஓட்டங்கள் (முடிவு தவிர்த்து) ஆசிரியரின் வாழ்வில் நடந்திருக்குமோவென நம்மைச் சிந்திக்க வைப்பது என்னமோ உண்மை. 

2. கேள்விகளே பதிலாய் 
குழந்தையின்மை ஒரு இளம் தம்பதியின் நிம்மதியை எப்படிக்குலைக்கின்றதென்பதையும் அதற்காக அவர்கள் தவறாக போலிச்சாமியாரிணியின் பின்னால் போவதையும் நன்கு விளக்குகிறது. இறுதியில் அந்நாளைய பாலச்சந்தர் படங்கள்போலக் கேள்வியுடன் முடிகிறது கதை. 

3. ஏறி வந்த ஏணி
இந்த உலகில் எல்லோருமே சுயநலமிகளாக இருப்பதை இந்த அனுபவப் பதிவு தெரிவிக்கிறது. பாவம்சேகரன்,கடைசியில் சோகரனாகி விட்டார். அவர் மனைவி நாய்க்குச் சோறூட்டுவதை நிறுத்தவில்லை என்பது காமெடி பன்ச்.

4. மனசாட்சி
மேல்மட்ட மக்களின் வாழ்வில் நடப்பதாக் கூறப்படும் இக்கதை ( இப்படிக்கூட நடக்குமா என பிரமிக்க வைத்து) இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதன் மகிமையை உணர்த்துகிறது. 

5. அனுபவி ராஜா அனுபவி
சதாவின் பாத்திரப் படைப்பு ( உண்மையாயிருக்குமோ?) பழைய படமொன்றில் என்னத்தே கன்னையாவை நினைவு படுத்தியது. நாய் தானும் தின்னாது, தின்னுற மாட்டையும் விடாது என்பது இதற்குச் சாலப்பொருத்தம்.

6.வாழ்க்கை ஒரு சக்கரம் 
தலைப்புக்கேற்ற ஒரு கதை, (புது) மனைவி அருகில் வேற்றாள் அமர்வதில் வரும் கோபம் இயல்பாக இருக்கிறது.(நான் ஆண் என்பதால் அப்படித்தோறுகிறதோ என்னமோ?) இதன் சாயல் மீண்டும்  (15) 'கண்டவனெல்லாம்' கதையில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.  அடுத்தவர் நிலை உயர்வதைப் பொறுக்காத சித்தியின் விசும்பல் யதார்த்தம். 

7.இப்படியும் ஒரு கதை
இந்தத் தொகுப்பில் சிறந்தது இதுதான். மலையாள மைந்தரின் வாழ்க்கை முறை விவரமாகக் கூறப்படுகிறது. (தமிழ்நாட்டிலும் இப்படியான பழக்க வழக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு) முடிவு புல்லரிக்க வைத்ததென்னமோ உண்மை.

8. எங்கே ஒரு தவறு?
ஜயந்தியின் கதையில் அவள் மேல் பச்சாதாபம் தோன்றுகிறது. அவள் (உடல்) இச்சைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடிப்போன கணவன் குற்றவாளியா, அல்லது அவளுடன் சல்லாபித்து அவளை மற்றவரின் கோபத்துக்கு ஆளாக்கிய சிவகுமாரன் குற்றவாளியா? மணவாழ்க்கையில் ஒவ்வாமையைக் கண்டறிந்து, பின் மணமுடிக்க  இதுவொன்றும் மேற்குலகமில்லையே.

9. விபரீத உறவுகள்
ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றிய கதை, அனேகமாக இப்பொழுது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' சாயலில் பயணிக்கிறது. முகத்தைப் பார்த்து ஏமாறாதே என எச்சரிக்கை விடுக்கிறது. கடைசியில் வைத்தியர் எஸ் ஆவது பன்ச்.

10. சௌத்வி கா சாந்த் ஹோ
மூட நம்பிக்கைகளை விவரிக்கும் கதை, குருவி உட்காரப் பழம் விழுந்த கதையாய் முடிகிறது. (தலைப்புக்கு அர்த்தம் என்ன?)

11.லட்சுமி கல்யாண வைபோகம்
இதுவும் அனுபவப்பகிர்வு போலும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்று மணப்பெண்ணுக்கு ஆதரவாக வாதாடிய நல்லுள்ளங்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

12. அரண்டவன் கண்ணுக்கு 
இந்தத்தொகுப்பில் இது தேவைதானா? 

13. பார்வையும் மௌனமும்
மற்றொரு சிறந்த படைப்பு. பால்ய விவாகத்தால் விதவையான சிறுமியரின் வாழ்க்கை மிகக் கொடியது. இது அதைவிடக் கொடுமை. காமு பாவம், உணர்ச்சிப்பெருக்கை அவள் எப்படித் தடுப்பாள்? மனசை ரொம்பவே சங்கடப்படுத்திய படைப்பு இது.

14. நதிமூலம் ரிஷிமூலம்
இதுவும் முதல் மூன்றில் வரும் படைப்பு. காதலுக்குக் கண் மட்டுமில்லை, அறிவும் கிடையாதென்பதை வலியுறுத்தும் கதை. பிறப்பின் சஸ்பென்ஸ் உடைபடும் இடம் (மனதளவில்)கை தட்ட வைத்தது.

மொத்தத்தில் முதல் நூல் நன்றாகவே உள்ளது. கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Monday, September 9, 2013

பிள்ளையார்

வாழ்வில் சில தருணங்கள் நம்மை நேருக்கு நேர் உற்று நோக்கி இனி என்ன செய்யப் போகிறாய் என வினவும். அது பள்ளிப் படிப்பை முடித்த தினம், கல்லூரியில் பட்டம் வாங்கிய ஒரு மாலை, மனையாள் தேர்வுக்கு அளிக்கப்பட்ட 5 நிமிடங்கள், பெற்றோரின் பிரிவையறிந்த வேளை, குழந்தைகளின் ஜனன பொழுதுகள் என நீளும். சமீப காலத்தில், சுமார் 1 1/2 வருடத்திற்கு முன் தொழில் பறிக்கப்பட்டபோது அந்தச் சூழல் சற்றுப் பயமுறுத்தியது என்னமோ உண்மை. வயதானாலே வாய்ப்புகளும் குறைந்துவிடும் எனும் நிதர்சனம் வீட்டிலிருக்கும்போது நன்கு விளங்கியது. மனைவிக்கு என்றும் என்னை விட தெய்வ நம்பிக்கை அதிகம். நாம் யாருக்கும் கெடுதல் செய்யாவிடில் நமக்குக் கெடுதல் நிகழாதென்பது எனக்கு என்றும் தாரக மந்திரம். இருந்தும் சில நல்லுள்ளங்களின் ஆலோசனைப்படி பிள்ளையாரப்பனைத் தரிசித்து வந்தால் நல்லது நடக்கும் என்று அருகிலுள்ள வரசித்தி வினாயகர் கோவிலுக்குச் செல்லத்தொடங்கினேன். மனைவி ஒரு படி மேலே போய் சங்கடசதுர்த்தியன்று அவர் தரிசனம் பெற என்னை ஒரு முறை அழைத்துப் போனாள். நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறைத்தீர்ப்பு. விரைவில் வெளியூரில் தொழில் புரியப் பணியாணை என்னைத்தேடி வந்தது. கணேசனார் கை விடவில்லை. இன்று அவரை நன்றியுடன் நினைவுகூருகிறேன். வணக்கம் தல.

விநாயகனே வினை தீர்த்தவனே


எல்லாரையும் காப்பாத்துப்பா கணேசா !


Monday, August 19, 2013

ஆனந்தவிகடன் - இணையப்பதிப்பு


சிறுவயதில் தமிழ்த்துணுக்குகள் படிக்கக் கற்றுக்கொடுத்ததே ஆனந்தவிகடன் சஞ்சிகைதான். இதில் வரும் நகைச்சுவைத் துணுக்குகள் படித்துத்தான் பிற்காலத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது சுஜாதாவும்,பாலகுமாரனும் தொடர்கதைகள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்கள். கல்லூரியில் படிக்கையில் என் மிஸ்டர் எக்ஸ் ஜோக் ஒரு இதழில் பிரசுரமாகி எனக்கு 50 ரூபா சன்மானம் கிடைத்தபோது உலகமே கைக்குள் வந்ததுபோலிருந்தது. பின்னர் நாடுகள் கடந்து சென்றாலும் விகடன் குழும இதழ்களைக் காண்கையில் குடும்பத்தின் மூத்த உறவினரைக் காணும் உவகை ஏற்பட்டது என்னமோ உண்மை. காலத்திற்கேற்றவாறு புதுப்பொலிவு பெற்று பல புதிய பகுதிகளை உள்ளடக்கியபோதும் கண்ணியம் காத்தது மிகவும் மனதைக்கவர்ந்தது. இணையத்தில் இவ்விதழைப் படிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் என் அறை நண்பர்மூலம் கைகூடியது. ஆனால்,எப்படித் தபாலில் வந்த கடிதங்களைப் படிக்கையில் ஏற்படும் பரபரப்பு மின்னஞ்சல்மூலம் வரும் மடலைப் படிக்கையில் வரவில்லையோ, அதே நிலைதான் இதற்கும் என்பது கண்கூடாகக் காணும் சோகம். புதுச்சட்டையை எப்படி அதற்கேயுரிய பிரத்தியேக மணத்துடன் விரும்பிப் பல முறை அணிவோமோ அதே உணர்வைப் புதிய சஞ்சிகைகளும் நமக்களித்தன.திரைப்படங்களைக் கூட்டமாக,கைதட்டி,விசிலடித்து,சிரித்து,அழுது,பயந்து திரையரங்குகளில் கண்ட அனுபவம் வீட்டில் மடிக்கணினியில் காணும்போது ஏனோ கிடைக்கவில்லை. இணையம் அனைத்தையும் கைக்குள்ளே அடக்கிவிட்டது உண்மைதான், ஆனால் பீஸா ஹட்டிலிருந்து வீட்டுக்கு வரும் பண்டம், அம்மா கை மணக்கும் பதார்த்தம் போல ஏனோ இல்லவே இல்லை. # எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சுகமானது என்று நண்பன் சத்யா என்றோ சொன்ன ஞாபகம்.                                               

Sunday, August 18, 2013

அம்மா

நான் உச்சரித்த முதல் வார்த்தை, என் முதல் உறவு, என் முதல் ஆசான், என் மிகச் சிறந்த தோழி, என் வெறித்தனமான ரசிகை, முக்கியமாகக் கடைசிவரை என்மேல் முழு நம்பிக்கை வைத்த ஒரு ஜீவன்.

திருமணபந்தம் எல்லாத் தாய், பிள்ளைகளைப்போல எங்கள் இருவருக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளியைக் கொடுத்தது. என் பொழுதுகளைப் புது மனைவி பெரிதும் ஆக்கிரமித்தாள். எல்லா மாமியார்களும்,மருமகள்களும்போலக் கருத்து வேறுபாடு தலைதூக்கியது. தனிக்குடித்தனம் காலத்தின் கட்டாயமானது. முதுமையில் தனிமை மிகவும் கொடுமை. என் தந்தையின் தொழில்பக்தி நிலைமையை மேலும் மோசமாக்கியது. தொழில் நிமித்தம் தொலைவில் குடியிருந்தாலும், மாதமொருமுறை எங்களுடன் சில நாட்கள் தங்கிச்செல்ல அந்தத் தாயுள்ளம் ஏங்கியது. மரணிக்க ஒரு மாதம் முன்னர் எங்களுடன் தங்கிச் செல்கையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்ட துயரம் இன்னும் கண்ணில் நிற்கிறது. அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், ரத்தக்குழாய் வெடித்துச் சுயநினைவு இழப்பதற்கு ஒரு நாள் முன்னதாக எனக்கும்,என் கர்ப்பவதி மனைவிக்கும் அருமையான அருசுவை விருந்து படைத்து, நாங்கள் உண்டு மகிழ்வதைக் கண்டு உவகையடைந்த என் தாய் பின்னர் இவ்வுலகில் சுயநினைவுடன் இருந்தது சில மணித்துளிகளே. மறுநாட்காலை தனது மாணவியின் திருமணத்திற்குச் செல்லத் தயாராகும் நிலையில் விதி விளையாடியது. மிகவும் கொடுமையான 10 நாட்களின்பின், எங்கள் திருமண நாளின் மறுநாள் அந்த உயிர் நிரந்தரமாகப் பிரிந்தது.

15 ஆண்டுகள். பிரமிப்பாக இருக்கிறது. அம்மா என்னும் ஒரு உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது என் மகள் இவ்வுலகைக் காணவில்லை. அன்னையின் பிரிவு என்னை நிலை குலையச் செய்தது. இனிதாய் சென்று கொண்டிருந்த காலன் விளையாடி, சில நாட்களில் எல்லாமே முடிய, கட்டுப்படுத்தமுடியாத சோகம் என்னை நிதம் கண்ணீர் சிந்த வைத்தது. எதற்கும் கலங்காத என் தந்தை வாய் விட்டு அழுததை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. இருக்கும்வரை என்றும்,எப்பொழுதும் அவரைக் குறை கூறுவதையே தன் கொள்கையாகக் கொண்டிருந்த மனையாளின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை. பெண் குழந்தையின் வரவால் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. இந்தப் பெண் என் வாழ்வில் இவ்வளவு சினேகமாக வலம் வர என் அன்னை என்னுடன் பழகிய விதம் அபாரமாகக் கை கொடுக்கிறது. பெண்களில்லாப் பள்ளிகளில் படித்ததனால் இன்றும் அறியாப் பெண்களுடன் பேச நாக்கு வரண்டு போகும்.ஆனால், அதைக்கடந்து நண்பிகளான பலருடன் ஆரோக்கியமான நட்புப் பாராட்ட என் அன்னையுடனான பந்தம்தான் முழுமுதற்காரணம்.

வாழ்வில் நான் கண்ட வெற்றிகள், செய்யப்போகும் சாதனைகள் அனைத்தும் எனக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தரலாம். ஆனால் என்றும் என் முதல் ரசிகை, எனை ஈன்ற அன் அன்புத்தாய் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.


இன்று அம்மாவின் 83வது ஜனனதினம். 

Wednesday, August 14, 2013

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்


நாமும் நமது சந்ததியினரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தத்தமது வாழ்க்கையைப் பணயம் வைத்த எண்ணற்ற சுயநலமற்ற தியாகச் செம்மல்களை இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

பாரதத்தாய் வாழிய பல்லாண்டு !

Saturday, July 27, 2013

உதவி உபத்திரவமான கதை


என் கல்லூரித் தோழன் தொலைபேசியில் அழைத்தான். அவன் பணியிட நண்பரொருவருக்கு ஓட்டுனர் தேவையிருந்தது. நான் என்னைத் தினமும் அலுவலகம் கொண்டு வரும் சகாவிடம் இதுபற்றிக்கூற, அவன் தனது கூட்டாளியொருவனை இதற்குப் பரிந்துரைத்தான். ஒருவழியாக நேர்முகத்தேர்வு முடிந்து பணியும் உறுதியானது. சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துவிடுவதனால் நண்பர் தோழனை அழைக்க, அவர் என்னைத் தொடர்பு கொள்ள, நான் சகாவின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு போக, அது அவர் கூட்டாளிக்குச் சென்று, பின்னர் மறுபடியும் சென்ற வழியே திரும்பிப் பயணிக்கிறது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் சம்பந்தமேயில்லாமல் நாங்கள் மூன்றுபேர் கிடந்து அல்லாடுகிறோம். உதவி எப்படி உபத்திரவமாவதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இல்லை. 

Tuesday, July 16, 2013

நண்பர்கள் சந்திப்பு

அமெரிக்காவில் வசிக்கும் நண்பன் ரவிஷங்கரின் குடும்பத்தை குவேய்த்தில் பணிபுரியும் அருள்செல்வன் குடும்பசகிதமாகச் சென்று  கண்டு மகிழ்ந்தார்.

சில நிழற்படங்கள் :


 KFC நிறுவனர் கேர்னல் சான்டர்ஸ் + அருள்


அருளும் ரவியும்


இரு குடும்பங்கள் 

**இந்த நட்பு அடுத்த தலைமுறையிலும் தொடரணும். 

அஞ்சலி – T M சௌந்தர்ராஜன்


எனக்கு அப்பொழுது 10 வயதிருக்கும். அவன்தான் மனிதன் என்றொரு சிவாஜி கணேசன் படம். வாழ்வில் சக மனிதர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் மகிழ்ச்சியடையும் கதாபாத்திரத்தை மிகவும் பிடிக்க ஒரு காரணம் அதில் இடம்பெற்ற பாடல்கள். குறிப்பாக அதைப் பாடிய பாடகரின் குரலினிமை. அந்த மதிப்புக்குரிய மாமேதை மறைந்த T M S அவர்கள். 60/70 களில் அனைத்து முன்னணி நாயகர்களும் இவர் குரலில்தான் திரையில் பாடினார்கள். எல்லோருக்கும் அந்தக் குரல் அற்புதமாக இயைந்தது. தத்துவப்பாடல்கள், பக்திப்பாடல்கள், சோகப்பாடல்கள், காதல்பாடல்கள் என அனைத்து கானங்களும் இனித்தன. பிற்கால இசையமைப்பளர்கள் புதுக்குரல்களை அறிமுகப் படுத்திப் பல நூறு பாடல்களைப் பதிவு பண்ணினாலும் இவர் குரலுக்கு ரசிகர்கள் கூடினார்களேயன்றிக் குறைந்தபாடில்லை. இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் குரல் அற்புதமான சோக கீதம் பாடியது. பின்னர் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்ப்புகளும் குறைந்தன. இருந்தாலும் அரசியல் மேடைகளிலும், திருமண வரவேற்புகளிலும் இவர் பாடல்கள் விடாமல் ஒலித்தன. இறுதிக்காலத்தில் தான் பெற்ற செல்வங்களால் சொல்லொனா மனத்துயரம் கொண்டு தம்முயிரை மாய்க்க முயன்ற செய்தி தற்கால இளைஞர் சமுதாயத்தின் சுயநலப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இறுதியாகத் தனது 93வது வயதில் இயற்கை எய்திய இந்த வெண்கலக்குரலோன் தமது பாடல்கள்மூலம் என்றும் வாழ்வார். அவர் ஆதமா சாந்தியடையட்டும்.

Thursday, April 18, 2013

P B ஸ்ரீனிவாஸ் – அஞ்சலி




தனது கம்பீரக்குரலாலே சில பல தலைமுறைகளை தன் பக்கம் ஈர்த்த இன்னுமொரு ஜாம்பவான் தவறிட்டாரு.இவர் பாட்டுகள் எனக்கு ஏன் பிடிக்கும்னு தெரியல, ஆனா பிடிக்கும். இத்தனைக்கும் இவர் பல பாடல்கள் பாடியது நான் பிறக்க முன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் படங்களுக்கு. ஒருவேள (அப்பா) பெயர் கூடக் காரணமா இருந்திருக்கலாம். எங்கப்பாவுக்கு இவர் பாட்டுப் புடிக்குமான்னு தெரியல. அப்பா தன்னோட எந்த ஆசைகளையும் வெளியே சொன்னது கிடையாது. அம்மா அவர் பற்றிய எல்லாத்தையும் குற சொல்லிட்டே இருந்தனால அப்படியான்னும் தெரியல. கடைசிவரை தனக்குப் பிடிச்ச எந்த விஷயமும் எங்களுக்குத் தெரியப் படுத்தவே இல்ல.
ஜெமினி கணேசனின் சில படங்களைச் சிறுவயதில் பார்த்திருந்தாலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் என்னை ஈர்த்தது 90 களில் தொழில் சார்பாக ஊர் ஊராக இடம்பெயர்கையில்தான். அக்காலகட்டங்களில் தனிமைக்குத் துணை டேப் ரெக்கார்டர்தான். இரவின் நிசப்தத்தில் பழைய பாடல்கள் கேட்பது ரொம்பவும் ரம்யமான அனுபவம். அதிலும் PBS பாட்டுக்கள் சோர்ந்த உள்ளத்தை ஒத்தடம் கொடுத்து தூங்க வைக்கவல்லவை. பிற்காலத்தில் தொழில்நுட்பம் முன்னேற எல்லாப்பாடல்களையுமே DVD களில் சேமிக்கும் வாய்ப்பு அமைந்தது. மடிக்கணினியில் சேமிக்கப்பட்டு சலித்த வேளைகளில் இன்றும் தமது பணியைத் தொடர்வது இவற்றின் சிறப்பு. ஆனா ஏனோ இவர ராஜாவும் ரகுமானும் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமேன்ற வருத்தம் எனக்கு இருக்கு. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு நீங்கா வல்லமை உடையவை. உதாரணத்துக்கு

“ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

Saturday, March 2, 2013

ஏக்கம்




அண்ணாந்து பாத்துப் பாத்து கழுத்து வலியெடுத்துப் போச்சு.

சே, வருண பகவான் இந்த முறையும் கை விரிச்சிட்ட மாதிரி தெரியுது.

காப்பித்தண்ணி கேட்டா கெழவி வையறா.

பாவம், அவளும் என்னதான் செய்வா,

கையில, காதுல, கழுத்துலன்னு உள்ளதெல்லாம் போச்சு,

வேளாமையும் கை விட்டுருச்சி.

பெத்த புள்ளைங்களும் படிச்சு வெளியூருன்னு போய்ட்டாய்ங்க.

இனி இங்க வரவா போராய்ங்க.

இன்னைக்கிண்ணு பாத்து இந்தப் பய புள்ளய இன்னும் காணோம்,

சவரம் பண்ணி நாளாச்சு.

நண்பேன்டா !




எப்படி இருக்கீங்க?

எங்க இருக்கீங்க?

என்ன செய்யிறீங்க?

கூட யாரு,யாரெல்லாம் இருக்காங்க?

டுட்டி எப்படியிருக்காங்க? அவங்க அம்மா ? அவங்க அப்பாவோட அம்மா?

விஸ்வரூபம் பாத்தாச்சா? 

வீ ஜீ எங்க இருக்காரு? இன்னும் கொச்சினா?

பாண்டியன் சார் யாரோட இருக்காரு?

ஞானமும், வேலுவும் என்ன பண்ணுது?

அம்மா ஆட்சி நல்லாருக்கா?

பொட்டு சுரேஷ ஏன் போட்டு தள்ளிட்டாங்க?

'அட்டாக்' பாண்டி நம்ம பாண்டியன் சாருக்கு வேண்டப்பட்டவரா?

பவர் ஸ்டாரப் பாத்திங்களா? 



பி.கு : இத்தன கேள்விகளுக்கும் பதில் சொன்னா பரிசு கூப்பன் கொடுக்க சிபாரிசு பண்ணலாம்.

பி.கு 2 : இது என் தூத்துக்குடி(யில் பழகிய) சென்னை வாழ் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய மடலின் பிரதி. வழக்கம்போல பதில் வரல.


Thursday, February 28, 2013

ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ( நமக்கு !)



+2 படிக்கும் காலங்களில் ராதா,அம்பிகா திரையுலகில்  கோலோச்சினார்கள். எந்தப் பெரிய நடிகரின் படங்களாயினும் இவர்கள்தான் நாயகிகள். ஆரம்பத்தில் ராதாமீது பிரேமம்  கொண்டு நாளாக, 
நாளாக அது மங்கிப்போய் விட்டது. ரேவதி,நதியா,அமலான்னு எல்லாரையும் பிடித்த காலம் ஒன்று.
(ஒருத்தர விட்டுட்டு இன்னொருத்தர மட்டும் விரும்பிறது ஏனோ மனசுக்கு சரியாய்ப் படல !) அவங்க சீசன் முடிஞ்சதும் குஷ்பு,மீனான்னு அரியாசனம் ஏறினாங்க. மக்களும் (நானும் அதில அடக்கம்) எத்தனை நாயகிகள் வந்தாலும் எல்லோருக்கும் ஆதரவ வாரி,வாரி வழங்கினாங்க. அப்புறம் சிம்ரன், கொடியிடையக் காட்டி தமிழகத்தையே (ஆந்திரா,கர்னாடகம் உட்பட) தனது கொசுவத்தில சொருகிக்கிட்டாங்க. ஜோதிகா, ஸ்னேகான்னு குடும்பக் குத்துவிளக்குகளும் (விளம்பரப்படங்களில் செம சில்லறை) நமிதா,மும்தாஜ், மாளவிகா போன்ற கவர்ச்சி வெடி(குண்டு)களும் அவரவர் ரேஞ்சுக்குத் தக்கமாதிரி விரும்பப்பட்டார்கள். (ஆனா, வெளியுலகத்துக்கு இப்படி அரையும் குறையுமா திரியிறாளுகன்னு (பொய்) சமுதாய நோக்கு வேறு) 

அடுத்த அலை த்ரிஷா,நயன்தாரா,அசின் ரூபத்தில் வர, ரசிகர்களுக்கு ஆனந்தக் கொண்டாட்டம் ! இது இப்ப தமன்னா,அனுஷ்கா,அமலா பால்னு சமந்தாவில வந்து நிக்குது. ஆனா, இதுவும் கடந்து போகும். சரி, தலைப்புக்கு வருவோம். நமக்கு ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ஒண்ணப் பாத்தோன்னே பிடிக்கணும்னு ஒண்ணும் கட்டாயமில்ல. பாக்கப்பாக்கப் புடிக்கும். இந்த ஃபார்முலாதான் இங்க வொர்க் அவுட் ஆவுது. 

எந்தப் பத்திரிக்கையப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்கதான் தென்படுது. அதிலவேற நம்ம சமுதாய அமைப்பு ஆணையும் பெண்ணையும் பிரிச்சே வக்கிறதனால இதுகமேல ஒரு ஈடுபாடு தன்னாலயே வந்திடுது. ஒருத்தனுக்குப் புடிச்சது இன்னொருவனுக்குப் புடிக்கணும்னு ஒண்ணும் அவசியமே இல்ல. அதனால அவனவன் டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி ஒண்ண மனசுல பதிச்சிக்கிறானுங்க. கல்யாணம்,காட்சி எல்லாமே இப்ப இருபதுகளின் கடைசியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் வருவதால், அதுவரை இந்த நடிகைகள்தான் கனவில் ஆடி,ஓடி,டூயட் பாடி பாச்சுலர் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறார்கள். (விதிவிலக்குகள் கண்டிப்பா உண்டு) 

கல்யாணம் முடிஞ்சு நமக்கின்னு ஒருத்தி வந்தபின்னர் இந்தப் பிரேமை குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் பழைய நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும். சிலருக்கு கனவுகளில் தொடரும், (தொந்தியைத் தூக்கிக்கொண்டு, மூச்சு வாங்கி ஆடிப்பாடுவதுபோல் யாருக்கும் கனவு வருவதுண்டா?) 

எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல சரோஜாதேவி பாட்டுப் போகையில அந்த வூட்டுக்காரர் வச்ச கண் வாங்காம அவங்களையே முழுங்கிற மாதிரிப் பார்க்கிரதையும், அந்த வெறுப்ப அவர் வூட்டம்மா சமையல் பாத்திரங்கள்கிட்ட காட்டுறதையும் பல முறை பாத்திருக்கேன். ஆக, இது பல தல முறை கண்ட நமது பண்பாடுபோல.


பின்குறிப்பு :
ரேவதிப்பிரியன்னு ஒருத்தர். நடிகை ரேவதியோட ரசிகரா இருப்பாருன்னு நெனைக்கிறேன். ரேவதிக்கு கல்யாணம் நடந்தப்ப எங்க ரூம் போட்டு, எத்தன நாள் அழுதாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? இல்ல அந்தப் பேருக்காகவே அதே பேருள்ள வேற பொண்ணத் தேடிப் புடிச்சுக் கட்டிக்கிட்டாரான்னும் தெரியல. ஒரு வேள அவர் பொண்டாட்டி பேரு வேற ஏதுமா இருந்திருந்தா கண்டிப்பா அந்தம்மா இந்தப் பேர மாத்தச் சொல்லி அழுது,அடம் பண்ணியிருக்கும். ஆமா, உண்மையிலேயே பொண்டாட்டி பேரப்போட்டு பின்னாடி பிரியன்னு சேத்துக்கிட்ட யாராச்சும் இருக்காங்களா?




Monday, February 25, 2013

சமையல் - ஜாலியா இருக்கு !


முதல்ல மாப்பிள்ள ஸ்ரீகாந்தனுக்கு ஒரு பெரிய நன்றி. ஏன்னா சமையல்மேல ஒரு பிடிப்பு வருவதற்கு அவன் வாங்கிக் கொடுத்த ப்ரஷர் குக்கர் ஒரு காரணம். அதுக்கு மேல அவன் சமையல் பண்ற ஸ்டைல். ரொம்ப அனுபவிச்சிப் பண்ணுவான். இங்க கத்தார் வந்த பிறகு அனேகமா ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்லதான் மதிய சாப்பாடு. இன்னொரு நண்பர் கௌரிஷங்கரும் கூட சேர்ந்து நளபாகத்தில கலக்குவாங்க. வெளியில சாப்பிட்டு, நாக்கு செத்துப் போய் இருப்பவனுக்கு வீட்டு சமையல் தேவாமிர்தமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாள்தான் இந்த குக்கர் வாங்கின நன்னாள். மறுநாள் தைரியமா சாதமும் பருப்பும் வச்சு வெள்ளோட்டம் பார்த்தேன். மனசுல கொஞ்சம் பயம், எங்கடா வெய்ட்டு பிச்சுக்கிட்டு போயுடுமோ இல்ல தண்ணி பத்தாம சாதம் கருகிப் போயிடுமோன்னெல்லாம் மனக்கிலேசம். ஒரு மாதிரி 6 விசில் வந்தோன்னே ஸ்டவ்வ நிறுத்தி, அரை மணி ஆற விட்டுத் திறந்து பாத்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எந்த சேதாரமும் இல்லாம பருப்பும் சாதமும் வெந்திருந்துச்சு. என்ன சாதத்தில கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியாயிருந்துச்சு. பரவாயில்ல, திருஷ்டிக்குன்னு எடுத்துக்கிட்டேன். தக்காளி,வெங்காயம், பூண்டு,பச்ச மொளகா எல்லாத்தையும் வெட்டியெடுத்து அதோட சிக்கன் சாசேஜயும் சேத்து, வானலியில் எண்ணை விட்டு, அதுக்கும் கொஞ்சம் பயந்து, பின்னர் ஒரு மாதிரி சைட் டிஷ்ஷும் ரெடி பண்ணியாச்சு. என்னடா ஒரு வாசனையும் வரலியேன்னு வெள்ளேந்தியா யோசிச்சேன். (பிறகுதான் தெரியும், அது வர மசாலா ஐட்டமெல்லாம் சேக்கணுமாம்) ஏதோ அன்னைய பொழப்பு ஓடிருச்சு. மனசுல ஏகப்பட்ட குஷி. நானும் ரௌடிதான்,நானும் ரௌடிதான்னு வடிவேலு ஜெயிலுக்குப் போன கதையா, சமையல் எனக்கும் வருமில்லன்னு நிரூபிச்சாச்சு. இதெல்லாம் விடப் பெரிய தொல்ல, பண்றத அப்படியே ஊர்ல இருக்கிற சீனியர் சமையல்காரருக்கு ( பொண்டாட்டிங்க) வெளங்கப் படுத்தணும். கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து, மானே தேனே பொன்மானேல்லாம் போட்டுச் சொன்னாலும் ஏதாச்சும் குறை கண்டிப்பா இருக்கும் ! பரவால்ல, இப்ப நாளுக்கு நாள் எதாச்சும் புதுசு புதுசா ட்ரை பண்றேன்.

பி.கு : மீட் பால் கறி இங்க ஹிட்டாச்சு. நண்பர் ஒருவர் ரெசிப்பி கேட்டாருன்னா பாத்துக்கோங்க....!

Tuesday, February 19, 2013

(டின்)மீன் குழம்பு


செய்முறை விளக்கம்

புளி கொஞ்சம் எடுத்து நல்லா கரைக்கோணும். தக்காளி,வெங்காயம்,பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் ஐட்டங்கள அளவா வெட்டி ரெடி பண்ணிக்கோங்க. மஞ்சள் தூள், மிளகாத்தூள்,  மீன் மசாலாத்தூள்,உப்பு எல்லாத்தையும் ரெடியா வச்சுக்கோங்க. முக்கியமா கடுகு, உளுத்தம்பருப்பு. 

அடுப்ப பத்த வச்சு கடாயை அதில சூடு பண்ணுங்க. எண்ண அளவா விட்டு, கொதி லைட்டாக் கிளம்பினோன்னே கடுகு/உளுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க. அப்படியே வெட்டி வச்ச ஐட்டத்தயெல்லாம் உள்ள தள்ளுங்க.

இப்ப டின்ல உள்ள மீன லாவகமா அந்த கொதிக்குற மிக்ஸ்ல போடுங்க. கவனம், மீன் ஒடஞ்சிடாம.

இப்ப அந்த புளி கரைசல எடுத்து அதில ஊத்துங்க. கொஞ்சம் கொதிக்க விடுங்க.

மிளகாத்தூள், மஞ்சள் தூள், மசாலா,உப்பு எல்லாம் அளவா சேத்துக்கோங்க.

இப்ப மூடி வச்சுட்டு, அடுப்ப ஸிம்மில வையுங்க.

கொஞ்ச நேரத்தில ரெடியாயிடும்.

ரொட்டி, சாதம் எதுக்கு வேணும்னாலும் தொட்டுக்கலாம்.

பின் குறிப்பு : 

இந்த ஷ்ரேயா கோஷல் பாட்டக் கேளுங்க. மொழி புரிஞ்சாலும், புரியாட்டியும் உள்ள என்னமோ பண்ணும்…..






கோழிக்கறி உருண்டை பிரட்டல்


முன்னுரை

போன வாரம் நம்ம ரெசிப்பிக்கு மிகப் பெரிய ஆதரவளித்த அனைவர்க்கும் ரொம்ப நன்றி.

எப்படிச் செய்வது?

இன்னைக்கு கோழிக்கறி உருண்டைப் பிரட்டல். இதுக்கு கடைகளில் கிடைக்கும் சிக்கன் 

மீட் பால்ஸ் வாங்கி நல்லா குளிர் போகும்வரை ஆறவிடுங்க. வழக்கம் போல தக்காளி, 

வெங்காயம், பச்ச மொளகா, பூண்டு, கறிவேப்பிலை ஐட்டங்களை எடுத்து ஒழுங்கு 

மரியாதையா கழுவி,அளவா வெட்டிக்கோங்க. அந்த மீட் பால்ஸ் பெருசாயிருந்தா துண்டு 

துண்டா வெட்டிக்கலாம். அடுப்ப பத்த வச்சு கடாய அதில வையுங்க. கொஞ்சமா எண்ணை 

ஊத்தி இதமான சூடு வரும்போது கடுகு, உழுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க. இதில 

தக்காளி இத்யாதி ஐட்டங்களைப் போடுங்க. அப்படியே அந்த கோழி உருண்டைகளையும் 

சேத்துக்கோங்க. தண்ணி அளவா காட்டோணும். இத கொஞ்சம் கொதிக்க வுடுங்க. கொஞ்ச 

நேரம் போனதும் சிக்கன் மசாலத்தூள் மற்றும் சிக்கன் சூப் க்யூப் தூள் இத்துடன் 

சேர்த்துடுங்க. பதமாப் பாத்து இறக்கிடுங்க.


கண்டுபிடிப்பு :

சமைக்கும்போது பாட்டுக் கேட்பது சுவாரசியம். 5 பாட்டு கேட்பதுக்குள்ள சமையல் முடிஞ்சிடும். 

நான் சிபாரிசு பண்ணும் 5 பாட்டு (ராஜா ஹிட்ஸ் 1982) :


1.    ஓ நெஞ்சமே - எனக்காகக் காத்திரு - ஜானகி/தீபன் சக்கரவர்த்தி


2. இளம் பனித்துளி விழும் - ஆராதனை - ஜென்சி



3. பூ வாடைக்காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை - ஜானகி/கிருஷ்ணசந்தர்



4. காலங்கள் மழைக்காலங்கள் - இதயத்தில் ஓர் இடம் - ஜானகி/மலேசியா வாசுதேவன்



5. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட்- சைலஜா/தீபன் சக்கரவர்த்தி



பின் குறிப்பு

போன வாரம் பின் குறிப்பப் பாத்து வீட்டுக்காரம்மா சண்டை போடாத குறை, என்ன இருந்தாலும் அவங்க அளவுக்கு நம்ம சமையல் வராது. ஆனா, சீக்கிரம் வரும். நம்பிக்கைதாங்க வாழ்க்க…… 

Sunday, February 10, 2013

எதிர்பார்ப்பு




சொன்னா நம்ப மாட்ட
எங்கூட இருந்தவங்க நான் பண்றதப் பாத்து சந்தோஷமா தலை ஆட்டினாங்க
தப்பா இருந்திருந்தா நிச்சயமா ஏதாச்சும் சொல்லியிருப்பாங்க
ஒண்ணுமே சொல்லாம கடைசிவரை புன்சிரிப்போடயே இருந்தாங்க
இதுல என்ன கூடுதல் சிறப்புண்ணா அவங்க ஒங்க ஊர்க்காரங்க
இதக் கேட்டோன்னே எனக்கு அவங்கள
இப்பவே பாக்கணும்னு தோணிச்சு
சைக்கிள ஒரே மிதி கூடவே இந்தப் பய
வேர்த்து விறுவிறுத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
போய் பாத்தா….