Saturday, December 12, 2015

ஏன்?

மழைவெள்ளம் தலைநகர் சென்னையைத் திக்கு முக்காடச் செய்த வேளை. சிறியவர் முதல் பெரியவர்வரை தம்மால் முயன்றதைக் கொடுத்து அடுத்தவருக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களில் உண்டியல் ஏந்தி அந்தத் தொகையையும் சென்னைக்கும், கடலூருக்கும் அனுப்பியவர்களும் ஏராளம். நடிகர்களில் சித்தார்த் மற்றும் பிக் எஃப்.எம் பாலாஜி போன்றோர் சமூக வலைத்தளங்களின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து பல உதவிகளைச் செய்தவாறு களப்பணியிலும் நேரடியாக இறங்கினர். சத்தமில்லாமல் மயில்சாமி, இமான் போன்ற காமெடி நடிகர்களும் தம்மாலான உதவிகளைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின்பால் பேரன்பு கொண்ட, ஒவ்வொரு படத்திலும் தமிழகத்துக்கும், தமிழனுக்கும் வண்டி வண்டியாக நன்றி சொல்லும் உச்ச நட்சத்திரம் வெறும் பத்து லட்சம் கொடுத்தார் என்று அவரின் பக்த கோடிகளில் யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு வெள்ளம் புகுந்த தெருக்கோடியிலிருந்து முகநூலில் பகிர்ந்தார். நடிகரின் தரப்பிலிருந்தோ மௌனம். தன்னுடன் 'கபாலி' படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தேயுடன் நெருங்கி நிற்கும் புகைப்படப் பதிவொன்று சமகாலத்தில் வெளியானது. முணு முணுப்புக்கள் அதிகரிக்கவே, தமிழக முதல்வரிடம் 10 கோடி அளித்தார் என்று மற்றுமொரு பதிவு புகைப்படத்துடன் வெளியானது. பணம் கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம். ஒரு வேளை அவர் சம்பாதித்த சொத்து மொத்தத்தையும் தன் வாரிசுக்கள் வீண் விரயம் செய்திருக்கலாம். மேலும் படத்தில் நடிப்பதில் கிடைக்கும் ஆதாயத்தில் இத்தனை சதவிகிதம் நான் என் ரசிகர்களின் நலனுக்காகச் செலவு செய்கிறேன் என்று எந்தவொரு ஒப்பந்தத்திலோ இவர் கையெழுத்திடவும் இல்லைதான். ஆனால், உடலுக்கு முடியாமல் உயிருக்குப் போராடிய நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற வேளைகளில் இந்த தமிழ் மக்கள்தானே மனமுருகப் பிரார்த்தனை செய்தார்கள். அந்த நன்றிக்கடனுக்காக நலம் விசாரிக்கக்கூடவா முடியாமல் போயிற்று? தமிழகத்திலேயே அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகரால் தனது ரசிகர்களை வெள்ளத்தில் சிக்கி ஆறாத்துயரங்களுக்கு உள்ளான மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்யச் சொல்லி ஒரு சிறு வேண்டுகோள் விடுக்க முடியவில்லையா? தலைவனின் குரலைக் கேட்டு ரசிகர் பட்டாளங்கள் புயலெனக் கிளம்பியிருக்காதா? மழை ஓய்ந்து, ஊரைச் சுத்தம் செய்யும் பணியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய வேளையில் இந்த மௌனம் தொடர்வது எதனை உணர்த்துகிறது? ஒருவேளை போயஸ் தோட்டத்துக்கு இந்த மழை செய்திகள் சென்று சேர்வதில்லையோ? இல்லை மனிதாபிமானம் அங்கே தடை செய்யப்பட்டு விட்டதோ? எது ஆனால் என்ன, அப்பாவி ரசிகர்கள் இன்று ஊரெங்கும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தலைவன் மேல் அளவு கடந்த பாசம். அதில் நூற்றிலொரு பங்குகூட அவருக்கு இல்லாமல் போனதுதான் பெருஞ்சோகம். பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழிய உங்கள் தமிழ்ப்பற்று. 

Tuesday, November 24, 2015

சென்னையும் மழையும்

மழைன்னா மழை, அப்படியொரு கனமழை. சாதாரணமா அரைமணி நேரம் பெய்தாலே ரோட்டெல்லாம் தண்ணி தேங்கி விடுகிற சிங்காரச் சென்னையின் சாலைகள் இந்த மழையால் சின்னா பின்னமாகி விட்டன. பள்ளிகளுக்கெல்லாம் தொடர் விடுமுறை அறிவிச்சுட்டாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருக்காங்க. இதுவரையில் மழைக்கு கிட்டத்தட்ட நூறு உயிர்கள் பலியாகியிருக்கு. கடலூர் மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள் முற்றிலுமாக நீரால் சூழப்பட்டிருக்கு, அங்கே எத்தனை உயிர் இழப்புக்கள் என்பது இன்னும் கணக்கெடுக்கப்படவில்லையென்பது இந்த இன்டர்னெட் யுகத்தின் பெருஞ்சோகம். சென்னையைச் சுற்றியும் பல இடங்களில் மக்களைப் படகுகளில் சென்று மீட்க வேண்டியிருந்தது. தெருக்களில் ஆளுயரத்துக்கும் மேலாக நீர் நிறைந்ததால் பலரால் வெளியே நடமாட முடியவில்லை. ஒரு வேளை உணவுக்காக, மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களில் சிலர் பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல பதவி வகிப்பவர்கள். அதிகாரிகளும், பணியாளர்களும் தம்மால் இயன்ற அளவு மக்களின் துயர்துடைக்க இயங்கினாலும், அவர்களால் தொடர் மழைக்கு ஈடு கொடுப்பதென்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாகக் காவல்துறை, தீயணைப்புப்படை, மின்வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் போன்ற அரச நிறுவனங்கள் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய நெருக்கடி நிலை. இதுவரையில் அவர்கள் செய்த பல நல்ல பணிகளை விடுத்து செய்ய மறந்த, இன்னும் முயன்று கொண்டிருக்கும் பணிகளை மட்டுமே மேற்கோள் காட்டி ஊடகங்கள் குற்றம் சாட்டுவது எவ்விதத்திலும் நியாயமாகத் தோன்றவில்லை. இதையே சாக்காக வைத்து சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுவதும் வெட்கக்கேடு. ஊரே வெள்ளக்காடாக மாற யார் காரணம்? பேரிடர் மேலாண்மை என்பது என்னவென்று இதுநாள்வரை அறியாமல், தெரியாமல் மெத்தனமாக இருந்தமைக்குத் தரும் விலை என்றே இதை எடுத்துக் கொண்டாலும், அந்தப் பழியை யார் ஏற்பது? ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் அடுத்த வருடம் தேர்தலை எதிர் கொள்ள இருக்கிறது. இந்நிலையில் நீர்ப்பாதைகளின் தூர்வாரும் நடவடிக்கைகளை மழைக்கு முன்னர் கோடை காலத்தில் செய்திருந்தால் பாதிப்புகளை ஒரளவாவது குறைத்திருக்கலாம். செய்தார்களா? இல்லை. செய்ததாகக் கணக்கு மட்டும் காட்டினார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் சென்னையில் மழையால் எந்தப் பாதிப்புமே இல்லையென்று சிலர் கற்பூரத்தை அணைக்காத குறையாகச் சத்தியம் செய்வது அறியாமை + ஆணவத்தின்  உச்சம். எதிர்க் கட்சிகளும் தத்தமது ஆட்சிக்காலத்தில் இதையேதான் செய்தார்கள். இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த மெத்தனம் மட்டுமே. இன்று பிரபல கல்வித் தந்தைகளாகத் தம்மைப் பிரகடணப்படுத்திக் கொண்டுள்ள முன்னாள் அரசியவாதிகளின் கல்லூரிகளும், பள்ளிகளும் இன்று தண்ணீரில் மிதப்பது ஏன்? நீராதாரங்களையெல்லாம் வளைத்துப் போட்டு காசு, பணம் , துட்டு, மணி பார்த்தீர்கள். ஆனால், உங்களால் அந்த இயற்கையுடன் பேரம் பேச முடியவில்லையே? உங்களுக்கு இப்பவாச்சும் புரிகிறதா, அற்ப மானுடப் பதர்களே ! மழைக்குத் தன் அன்னை ஏரியைத்தான் தெரியும். காணாமல்போன தன் அன்னையைக் களிப்புடன் கட்டிகொண்டது குழந்தை. திருந்துவீர்களா? # எது நடந்தாலும் இணையத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வாழ்க தமிழ்நாடு !

Tuesday, July 28, 2015

அஞ்சலி - ஐயா அப்துல் கலாம்

இனம், மதம், மொழி கடந்த மாமனிதர் ராக்கெட் விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் இவ்வுலை விட்டு மறைந்தார். ஒரு எளிமையான நல்ல மனிதரை இவ்வுலகம் இழந்தது. அவர் கனவுகளை முன்னெடுத்துச் செல்லுதலே இளைஞர் சமூகம் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். 

Wednesday, July 15, 2015

மெல்லிசை மன்னர் மறைந்தார்ஐயா எம்.எஸ்.விஸ்வநாதன் 
1928 - 2015

'உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் - 
நிலை உயரும்போது பணிவுகொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'-

Wednesday, April 15, 2015

இரு வார விடுமுறை - இந்தியா/இலங்கை


ஒரே பரபரப்பாக உள்ளது. இன்று இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம்  கொழும்பு சென்று, ஒரு மணி நேரத்தில் மாற்று விமானம் ஏறி நாளை காலை சென்னையைச் சென்றடைவேன். ஏப்ரல் 16 என் மனங்கவர் மங்கையின் பிறந்தநாள் என்பதுதான் இன்று பயணிப்பதற்கான முக்கிய காரணம், வயது... இன்னும் இருபத்தைந்துதான், கல்யாணமான நாள் முதல் அதுமட்டும் மாறவே இல்லை. இனியும் மாறுமென்றும் தோணவில்லை. இன்று வீடு மாறுகிறார்கள். பிள்ளைகளின் பள்ளிக்கருகில் குடியிருப்பதில் உள்ள அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. ஏற்கனவே இருந்த வீட்டிலிருந்து பள்ளிக்குத் தனியார் வாகனத்தில் செல்ல வேண்டும். இது சில நேரங்களில் பெரும் மன உளைச்சலைத் தரும் விடயம் என்பது பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பெற்றோருக்கு நன்கு தெரியும். மேலும் தற்போதைய (உபயோகமாக ஒன்றுமே செய்வதற்கில்லாத) வீட்டு உரிமையாளரின் பிக்கல்,பிடுங்கல்கள் சகிப்புத்தன்மைக்கே சவால் விடும் நிலைக்குச் சகதர்மிணியைத் தள்ளி விட்டன. சுயமாக நமக்கென ஒரு வீடு என்பது பல மத்தியதர வர்க்க மக்களின் ஒரு அங்கமான எமக்கும் இன்றுவரை வெறும் கனவே. அந்த வேலைகள் முடிந்த கையோடு இலங்கைப் பயணம். மகள் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதி ஓய்வாக இருக்கும் தருணமிது. மகனாரும் ஒரு சில தினங்களில் தனது ஆண்டிறுதிப் பரீட்சைகளை முடித்து விடுவார். மனைவியாரின் (பெருங்) குடும்பம் அங்கு குடியிருப்பதாலும், அங்கு சென்று வந்து 3 வருடங்கள் ஆகி விட்டமையாலும், முக்கியமாகச் சென்னை வெய்யிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஒரு மாத காலம் அங்கே களிக்க உத்தேசித்துள்ளோம். என்ன, பணி நிமித்தம் நான் மாத இறுதியில் இங்கு வந்து விடவேண்டும். அதற்குள் பிள்ளைகளுடன் சில இடங்களைப் பார்த்து, என் பள்ளித் தோழர்களைக் கண்டு மலரும் நினைவுகளையும் மீட்டிவிட்டு வரலாமென்ற எண்ணம். இதில் முக்கியமாகச் சமூக வலைத்தளங்களிலிருந்து கட்டாய ஓய்வெடுத்துக் குடும்பம், மற்றும் நிஜ நண்பர்களுடன் பொழுதுகளைப் போக்குவது என்பது எனக்கு நானே விதித்துக்கொள்ளும் சுயகட்டுப்பாடு. இரண்டு வார ஒய்வின்பின் மீண்டும் சந்திப்போம். வாழ்க வளமுடன். 

Monday, March 2, 2015

சென்று வா நண்பா

படத்தில் இடமிருந்து வலமாக, சத்யவிஜயன், ஸ்ரீகாந்தன், ராஜேந்திரன், பாலமோகன் மற்றும் தங்கள் உண்மையுள்ள. நண்பன் ராஜேந்திரன் வளைகுடாவில் சுமார் 15 ஆண்டு காலம் பணி புரிந்த அனுபவஸ்தர். இங்கே கத்தார் வந்து ஏறக்குறைய சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும். குடும்பப் பொறுப்புகள் காரணமாகத் தாயகம் திரும்ப வேண்டிய சூழல். சென்ற வாரம் தோகாவிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் கத்தார் பெட்ரோலியத்தில் பணி புரியும் நண்பர் சத்யவிஜயன் சமூகமளிக்க, பிரியாவிடை  மேற்குக் குடாப் பகுதியிலுள்ள  (West Bay) வட இந்தியப் பாரம்பரிய உணவகத்தில்  சிறப்பாக நடந்தேறியது. நேற்று இரவு விமானநிலையத்தில் கனத்த இதயங்களுடன் நானும், பாலமோகனும் நண்பனை வழியனுப்பினோம். சென்று வா நண்பா. நீ தொட்டதெல்லாம் துலங்கட்டும். 

* இந்த ஐவர் அணி தஞ்சை ஷண்முகா பொறியியல் கல்லூரியின் (தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்) 1985-89 பருவகாலத்தினர் என்பது கூடுதல் தகவல்.