Monday, March 30, 2020

நூதனமான நுண்ணுயிர்

Amul's new ad on coronavirus outbreak divides Twitter ...
இப்படியான ஒரு நுண்ணுயிர் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மற்ற நோய்க்கிருமிகள் போன்று தடுப்பு மருந்து கொடுத்து குணமாக்கிவிடலாம் என்று அசட்டையாக இருந்தார்கள். சீனாவில் நிலமை கட்டுக்கடங்காமல் போனதுமே அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த, அடிக்கடி அங்கே பயணித்துக் கொண்டிருந்த மக்கள் வசித்த நாடுகள் சுதாகரித்திருக்க வேண்டும்.  அப்போதும் அவர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கவில்லை. கூடிக் களிந்து கும்மாளமிட்டுப் பொழுதுகளைக் கழித்தார்கள். ஊரெல்லாம் நோய் பரவி மரணங்கள் தொடர்கதை  ஆனதும் தான் அந்த நாடுகளுக்கு நிலமையின் தீவிரம் புரிந்தது. இந்தியா போன்ற நாடுகளில் இது பரவினால் தடுப்பது மிகவும் கடினம். அதற்கு முதலில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் முனைப்பாக இறங்கியிருந்தால் இவ்வளவு பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்காது. திடுதிப்பென்று ஊரடங்கு உத்தரவை அறிவித்து, அதனால் பல மக்கள் கால்நடையாகத் தமது ஊருக்குப் பயணப்பட்டது எல்லாம் பார்க்க மிகவும் வேதனையான நிகழ்வுகள். மக்களைக் கட்டுப்படுத்தி வீட்டுக்குள் இருக்க வைப்பது எவ்வளவு பெரிய சவால் என்று காவல்துறை உணரும் நேரம் இது. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், துப்புரவுத்துறைப் பணியாளர்களுக்கும் ஒரு பெரிய சலூட். அவர்களெல்லாம் நேர காலம் பார்க்காமல் உழைப்பதால்தான் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பாமல் இருக்கலாம்.  இந்தச் செய்திகளை நம்பிப் பல பேர் மாற்று மருந்தெல்லாம் குடித்து, தேவையில்லாத உடலுபாதைக்கு ஆளாவார்கள். எவ்வளவோ பிரபலங்கள் எடுத்துச் சொல்லியும், வெளியே சுற்றும் கும்பல் அடங்கி வீட்டில் இருக்க மாட்டோம் என்ற அடம் பிடிக்கிறது. ஊரில் யார் யாருக்கெல்லாம் நோய் தொற்றி இருக்கிறதென்று தெரியாத நிலையில வெளியே போனால், கிருமிகளை நாமாகவே வீட்டுக்குக் காவிக் கொண்டு வரும் அபாயம் இருக்கிறது. அதிலும் வீட்டில் வயதானவர்களும், குழந்தைகளும் இருந்தால் அவர்கள் விரைவில் நோய்க்கிருமிகளின் தாக்கத்துக்கு உள்ளாகலாம். இது வரைக்கும் தடுப்பு மருந்து எதுவுமே உத்தியோகபூர்வமாக் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை அனைவரும் உணற வேண்டும். அப்படி நோய் பீடித்தால் அதற்காகச் சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட பிரத்தியேக மருத்துவமனைக்கு அழைத்துப் சென்று சிறப்பு  சிகிச்சையளிக்கப்படும். குடும்பத்திலிருந்து வேறு யாரும் கூட செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. நோயாளி இறந்தால் உடல் தகனம் செய்யப்படும். அந்தத் தகவல் மட்டுமே குடும்பத்திற்குச் சொல்லப்படும். குணமானால், மீண்டும் திருப்பி அனுப்பப்படலாம். ஆனா, உளவியல் ரீதியான பல சிக்கல்களை அந்தக் குடும்பம் எதிர்நோக்க வேண்டி வரலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு வீட்டில் இருப்பது நல்லது. முழு அடைப்பு நீங்க நோய்த் தொற்று முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.  பொது நலன் கருதி முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்போம்!