Monday, August 19, 2013

ஆனந்தவிகடன் - இணையப்பதிப்பு


சிறுவயதில் தமிழ்த்துணுக்குகள் படிக்கக் கற்றுக்கொடுத்ததே ஆனந்தவிகடன் சஞ்சிகைதான். இதில் வரும் நகைச்சுவைத் துணுக்குகள் படித்துத்தான் பிற்காலத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது சுஜாதாவும்,பாலகுமாரனும் தொடர்கதைகள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்கள். கல்லூரியில் படிக்கையில் என் மிஸ்டர் எக்ஸ் ஜோக் ஒரு இதழில் பிரசுரமாகி எனக்கு 50 ரூபா சன்மானம் கிடைத்தபோது உலகமே கைக்குள் வந்ததுபோலிருந்தது. பின்னர் நாடுகள் கடந்து சென்றாலும் விகடன் குழும இதழ்களைக் காண்கையில் குடும்பத்தின் மூத்த உறவினரைக் காணும் உவகை ஏற்பட்டது என்னமோ உண்மை. காலத்திற்கேற்றவாறு புதுப்பொலிவு பெற்று பல புதிய பகுதிகளை உள்ளடக்கியபோதும் கண்ணியம் காத்தது மிகவும் மனதைக்கவர்ந்தது. இணையத்தில் இவ்விதழைப் படிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் என் அறை நண்பர்மூலம் கைகூடியது. ஆனால்,எப்படித் தபாலில் வந்த கடிதங்களைப் படிக்கையில் ஏற்படும் பரபரப்பு மின்னஞ்சல்மூலம் வரும் மடலைப் படிக்கையில் வரவில்லையோ, அதே நிலைதான் இதற்கும் என்பது கண்கூடாகக் காணும் சோகம். புதுச்சட்டையை எப்படி அதற்கேயுரிய பிரத்தியேக மணத்துடன் விரும்பிப் பல முறை அணிவோமோ அதே உணர்வைப் புதிய சஞ்சிகைகளும் நமக்களித்தன.திரைப்படங்களைக் கூட்டமாக,கைதட்டி,விசிலடித்து,சிரித்து,அழுது,பயந்து திரையரங்குகளில் கண்ட அனுபவம் வீட்டில் மடிக்கணினியில் காணும்போது ஏனோ கிடைக்கவில்லை. இணையம் அனைத்தையும் கைக்குள்ளே அடக்கிவிட்டது உண்மைதான், ஆனால் பீஸா ஹட்டிலிருந்து வீட்டுக்கு வரும் பண்டம், அம்மா கை மணக்கும் பதார்த்தம் போல ஏனோ இல்லவே இல்லை. # எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சுகமானது என்று நண்பன் சத்யா என்றோ சொன்ன ஞாபகம்.                                               

Sunday, August 18, 2013

அம்மா

நான் உச்சரித்த முதல் வார்த்தை, என் முதல் உறவு, என் முதல் ஆசான், என் மிகச் சிறந்த தோழி, என் வெறித்தனமான ரசிகை, முக்கியமாகக் கடைசிவரை என்மேல் முழு நம்பிக்கை வைத்த ஒரு ஜீவன்.

திருமணபந்தம் எல்லாத் தாய், பிள்ளைகளைப்போல எங்கள் இருவருக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளியைக் கொடுத்தது. என் பொழுதுகளைப் புது மனைவி பெரிதும் ஆக்கிரமித்தாள். எல்லா மாமியார்களும்,மருமகள்களும்போலக் கருத்து வேறுபாடு தலைதூக்கியது. தனிக்குடித்தனம் காலத்தின் கட்டாயமானது. முதுமையில் தனிமை மிகவும் கொடுமை. என் தந்தையின் தொழில்பக்தி நிலைமையை மேலும் மோசமாக்கியது. தொழில் நிமித்தம் தொலைவில் குடியிருந்தாலும், மாதமொருமுறை எங்களுடன் சில நாட்கள் தங்கிச்செல்ல அந்தத் தாயுள்ளம் ஏங்கியது. மரணிக்க ஒரு மாதம் முன்னர் எங்களுடன் தங்கிச் செல்கையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்ட துயரம் இன்னும் கண்ணில் நிற்கிறது. அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், ரத்தக்குழாய் வெடித்துச் சுயநினைவு இழப்பதற்கு ஒரு நாள் முன்னதாக எனக்கும்,என் கர்ப்பவதி மனைவிக்கும் அருமையான அருசுவை விருந்து படைத்து, நாங்கள் உண்டு மகிழ்வதைக் கண்டு உவகையடைந்த என் தாய் பின்னர் இவ்வுலகில் சுயநினைவுடன் இருந்தது சில மணித்துளிகளே. மறுநாட்காலை தனது மாணவியின் திருமணத்திற்குச் செல்லத் தயாராகும் நிலையில் விதி விளையாடியது. மிகவும் கொடுமையான 10 நாட்களின்பின், எங்கள் திருமண நாளின் மறுநாள் அந்த உயிர் நிரந்தரமாகப் பிரிந்தது.

15 ஆண்டுகள். பிரமிப்பாக இருக்கிறது. அம்மா என்னும் ஒரு உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது என் மகள் இவ்வுலகைக் காணவில்லை. அன்னையின் பிரிவு என்னை நிலை குலையச் செய்தது. இனிதாய் சென்று கொண்டிருந்த காலன் விளையாடி, சில நாட்களில் எல்லாமே முடிய, கட்டுப்படுத்தமுடியாத சோகம் என்னை நிதம் கண்ணீர் சிந்த வைத்தது. எதற்கும் கலங்காத என் தந்தை வாய் விட்டு அழுததை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. இருக்கும்வரை என்றும்,எப்பொழுதும் அவரைக் குறை கூறுவதையே தன் கொள்கையாகக் கொண்டிருந்த மனையாளின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை. பெண் குழந்தையின் வரவால் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. இந்தப் பெண் என் வாழ்வில் இவ்வளவு சினேகமாக வலம் வர என் அன்னை என்னுடன் பழகிய விதம் அபாரமாகக் கை கொடுக்கிறது. பெண்களில்லாப் பள்ளிகளில் படித்ததனால் இன்றும் அறியாப் பெண்களுடன் பேச நாக்கு வரண்டு போகும்.ஆனால், அதைக்கடந்து நண்பிகளான பலருடன் ஆரோக்கியமான நட்புப் பாராட்ட என் அன்னையுடனான பந்தம்தான் முழுமுதற்காரணம்.

வாழ்வில் நான் கண்ட வெற்றிகள், செய்யப்போகும் சாதனைகள் அனைத்தும் எனக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தரலாம். ஆனால் என்றும் என் முதல் ரசிகை, எனை ஈன்ற அன் அன்புத்தாய் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.


இன்று அம்மாவின் 83வது ஜனனதினம். 

Wednesday, August 14, 2013

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்


நாமும் நமது சந்ததியினரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தத்தமது வாழ்க்கையைப் பணயம் வைத்த எண்ணற்ற சுயநலமற்ற தியாகச் செம்மல்களை இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

பாரதத்தாய் வாழிய பல்லாண்டு !