Sunday, August 18, 2013

அம்மா

நான் உச்சரித்த முதல் வார்த்தை, என் முதல் உறவு, என் முதல் ஆசான், என் மிகச் சிறந்த தோழி, என் வெறித்தனமான ரசிகை, முக்கியமாகக் கடைசிவரை என்மேல் முழு நம்பிக்கை வைத்த ஒரு ஜீவன்.

திருமணபந்தம் எல்லாத் தாய், பிள்ளைகளைப்போல எங்கள் இருவருக்கும் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளியைக் கொடுத்தது. என் பொழுதுகளைப் புது மனைவி பெரிதும் ஆக்கிரமித்தாள். எல்லா மாமியார்களும்,மருமகள்களும்போலக் கருத்து வேறுபாடு தலைதூக்கியது. தனிக்குடித்தனம் காலத்தின் கட்டாயமானது. முதுமையில் தனிமை மிகவும் கொடுமை. என் தந்தையின் தொழில்பக்தி நிலைமையை மேலும் மோசமாக்கியது. தொழில் நிமித்தம் தொலைவில் குடியிருந்தாலும், மாதமொருமுறை எங்களுடன் சில நாட்கள் தங்கிச்செல்ல அந்தத் தாயுள்ளம் ஏங்கியது. மரணிக்க ஒரு மாதம் முன்னர் எங்களுடன் தங்கிச் செல்கையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்ட துயரம் இன்னும் கண்ணில் நிற்கிறது. அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பார்கள், ரத்தக்குழாய் வெடித்துச் சுயநினைவு இழப்பதற்கு ஒரு நாள் முன்னதாக எனக்கும்,என் கர்ப்பவதி மனைவிக்கும் அருமையான அருசுவை விருந்து படைத்து, நாங்கள் உண்டு மகிழ்வதைக் கண்டு உவகையடைந்த என் தாய் பின்னர் இவ்வுலகில் சுயநினைவுடன் இருந்தது சில மணித்துளிகளே. மறுநாட்காலை தனது மாணவியின் திருமணத்திற்குச் செல்லத் தயாராகும் நிலையில் விதி விளையாடியது. மிகவும் கொடுமையான 10 நாட்களின்பின், எங்கள் திருமண நாளின் மறுநாள் அந்த உயிர் நிரந்தரமாகப் பிரிந்தது.

15 ஆண்டுகள். பிரமிப்பாக இருக்கிறது. அம்மா என்னும் ஒரு உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது என் மகள் இவ்வுலகைக் காணவில்லை. அன்னையின் பிரிவு என்னை நிலை குலையச் செய்தது. இனிதாய் சென்று கொண்டிருந்த காலன் விளையாடி, சில நாட்களில் எல்லாமே முடிய, கட்டுப்படுத்தமுடியாத சோகம் என்னை நிதம் கண்ணீர் சிந்த வைத்தது. எதற்கும் கலங்காத என் தந்தை வாய் விட்டு அழுததை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. இருக்கும்வரை என்றும்,எப்பொழுதும் அவரைக் குறை கூறுவதையே தன் கொள்கையாகக் கொண்டிருந்த மனையாளின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை. பெண் குழந்தையின் வரவால் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. இந்தப் பெண் என் வாழ்வில் இவ்வளவு சினேகமாக வலம் வர என் அன்னை என்னுடன் பழகிய விதம் அபாரமாகக் கை கொடுக்கிறது. பெண்களில்லாப் பள்ளிகளில் படித்ததனால் இன்றும் அறியாப் பெண்களுடன் பேச நாக்கு வரண்டு போகும்.ஆனால், அதைக்கடந்து நண்பிகளான பலருடன் ஆரோக்கியமான நட்புப் பாராட்ட என் அன்னையுடனான பந்தம்தான் முழுமுதற்காரணம்.

வாழ்வில் நான் கண்ட வெற்றிகள், செய்யப்போகும் சாதனைகள் அனைத்தும் எனக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தரலாம். ஆனால் என்றும் என் முதல் ரசிகை, எனை ஈன்ற அன் அன்புத்தாய் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.


இன்று அம்மாவின் 83வது ஜனனதினம். 

2 comments:


  1. அன்பின் உமேஷ், உங்கள் இந்தப் பதிவு என்னை நெகிழவைத்துவிட்டது. கடவுள் எங்கும் இருந்து காட்சி அளிக்க இயலாததால் அன்னையின் உருவில் இருக்கிறார் என்பார்கள். நான் என்னை பெற்ற அன்னையை மிகச் சிறு வயதிலேயே இழந்து விட்டதால், அன்னையின் அன்பு தெரியாதவன். அன்னையின் உடனிருப்பவர் மீது கொஞ்சம் பொறாமையும் இருக்கும். .உயிருடன் இருக்கும்போது இருப்பவரின் அருமை தெரிவதில்லை. யாராயிருந்தாலும் இன்று காண்பவரை நாளைக் காணமுடியும் என்பதே நிச்சயமில்லாத உலகில் இருக்கும்வரை எல்லோரையும் அன்புடனும் பாசத்துடனும் நடத்துவது மிகவும் முக்கியம். உங்கள் அன்னை இருந்தபோது என்ன செய்தால் மகிழ்ந்திருப்பார்களோ, விரும்பினார்களோ அதைச் செய்து அவர் நினவைப் பசுமையாக வைத்துக் கொள்ளுங்கள். அன்புடன்

    ReplyDelete