Monday, August 19, 2013

ஆனந்தவிகடன் - இணையப்பதிப்பு


சிறுவயதில் தமிழ்த்துணுக்குகள் படிக்கக் கற்றுக்கொடுத்ததே ஆனந்தவிகடன் சஞ்சிகைதான். இதில் வரும் நகைச்சுவைத் துணுக்குகள் படித்துத்தான் பிற்காலத்தில் சினிமா விமர்சனம், சிறுகதைகள் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது சுஜாதாவும்,பாலகுமாரனும் தொடர்கதைகள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டினார்கள். கல்லூரியில் படிக்கையில் என் மிஸ்டர் எக்ஸ் ஜோக் ஒரு இதழில் பிரசுரமாகி எனக்கு 50 ரூபா சன்மானம் கிடைத்தபோது உலகமே கைக்குள் வந்ததுபோலிருந்தது. பின்னர் நாடுகள் கடந்து சென்றாலும் விகடன் குழும இதழ்களைக் காண்கையில் குடும்பத்தின் மூத்த உறவினரைக் காணும் உவகை ஏற்பட்டது என்னமோ உண்மை. காலத்திற்கேற்றவாறு புதுப்பொலிவு பெற்று பல புதிய பகுதிகளை உள்ளடக்கியபோதும் கண்ணியம் காத்தது மிகவும் மனதைக்கவர்ந்தது. இணையத்தில் இவ்விதழைப் படிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் என் அறை நண்பர்மூலம் கைகூடியது. ஆனால்,எப்படித் தபாலில் வந்த கடிதங்களைப் படிக்கையில் ஏற்படும் பரபரப்பு மின்னஞ்சல்மூலம் வரும் மடலைப் படிக்கையில் வரவில்லையோ, அதே நிலைதான் இதற்கும் என்பது கண்கூடாகக் காணும் சோகம். புதுச்சட்டையை எப்படி அதற்கேயுரிய பிரத்தியேக மணத்துடன் விரும்பிப் பல முறை அணிவோமோ அதே உணர்வைப் புதிய சஞ்சிகைகளும் நமக்களித்தன.திரைப்படங்களைக் கூட்டமாக,கைதட்டி,விசிலடித்து,சிரித்து,அழுது,பயந்து திரையரங்குகளில் கண்ட அனுபவம் வீட்டில் மடிக்கணினியில் காணும்போது ஏனோ கிடைக்கவில்லை. இணையம் அனைத்தையும் கைக்குள்ளே அடக்கிவிட்டது உண்மைதான், ஆனால் பீஸா ஹட்டிலிருந்து வீட்டுக்கு வரும் பண்டம், அம்மா கை மணக்கும் பதார்த்தம் போல ஏனோ இல்லவே இல்லை. # எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சுகமானது என்று நண்பன் சத்யா என்றோ சொன்ன ஞாபகம்.                                               

4 comments:


  1. /எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சுகமானது என்று நண்பன் சத்யா என்றோ சொன்ன ஞாபகம்/. ஆனால் அவ்வாறு வாழ்வது கடினம் என்று அவர் சொல்ல வில்லையா.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அவர் சொல்லாவிட்டாலும் அவர் வாழும் வாழ்க்கை எனக்குப் புரியவைத்தது. நன்றி ஐயா.

    ReplyDelete
  3. உங்களுடைய இந்த உணர்வுகள் நிஜம். நல்ல மனம் உள்ளவர்களுக்கு இப்படித்தான் தோன்றும் போலும்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அமுதவன் அண்ணா

    ReplyDelete