Sunday, November 9, 2014

மனம் போல் மாங்கல்யம்


இன்றோடு எனக்கும் இந்திராவுக்கும் திருமணம் நிகழ்ந்து 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.  மணநாள் நன்கு நினைவில் உள்ளது. அதிகாலையில் எழுந்து குளித்து சுற்றமும் நட்பும் புடை சூழத் திருமணம் நடக்கவிருந்த கோவிலுக்கு சென்றதும், அங்கே புகைப்பிடிப்பாளருக்கு இசைவாகச் சில போஸ்கள் கொடுத்ததும் நகைக்க வைக்கின்றது. மணப்பெண்ணுடன் முதல்நாள் இரவு தொலைபேசியில் பேசியிருந்தேன். பேசிவிட்டுப் படுத்த கொஞ்ச நேரத்தில் இனம் தெரியாத பூச்சியொன்று வலது கன்னத்தைக் கடித்து விட்டதாம். (அதுக்கு என்ன கோவமோ தெரியவில்லை!) ஒருபக்கம் வீங்கிய முகத்துடன் இருந்த மணப்பெண்ணை ஒப்பனை நிபுணர் ஒருவழி பண்ணி, இரு பக்கமும் சமநிலைப்படுத்தியிருந்தார். மணமேடையில் அமர்ந்து மணமகனின் சடங்கு, சம்பிரதாயங்கள் முடிந்த பின் பெண்ணை அழைத்து வந்தார்கள். முகத்தைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ஒருவேளை ஆள்மாறாட்டம் செய்திருப்பார்களோ என்று ஒரு ஐயம்.  மெதுவாக அருகில் அமர்ந்த பெண்ணிடம் கேட்டேன், ' இது இந்திராதானே?' ஆம் என்றது பரிச்சயமான குரல். அதுக்குள் ஐயருக்கு அவசரம். புகையின் அளவை அதிகரித்துக் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்' என்று கூக்குரலிட்டார். அதுவரை அவர் ஆணைக்குக் காத்திருந்தவர்கள்போல பக்கவாத்தியக்காரர்கள் பிளிரத் தொடங்கினார்கள். அட்சதை தூவியதுடன் தங்கள் வேலை முடிந்ததென்று எண்ணி (அதுவும் சரிதான்!) சபையோர் பந்திக்கு முந்தினார்கள். தாலிக்குப் பொட்டிட்டுக் கழுத்தில் படரவிடும் வேலையை சுற்றம் பார்த்துக் கொண்டது. மண்மகளின் கைபற்றி மூன்று முறை யாகமேடையைச் சுற்றி வந்து, பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாயிட்டு.  அம்மி மிதிக்கவைத்து, மெட்டி போட்டு , அருந்ததி பார்த்து, வாழ்த்துவோருடன் புகைப்படங்களுக்கு நின்று அவர்கள் அளித்த பரிசுப்பொருட்களைப் புன்சிரிப்புடன் வாங்கி, சுமார் 2 மணி நேரத்தின் பின் பசியாற அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே போயும் நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. நெருங்கிய சொந்தங்கள் வந்து கிச்சு கிச்சு மூட்டியபடி இருந்தார்கள். இருவரும் ஊட்டி விடுவதுபோல போஸ் கொடுக்க எங்களை விடச் சில முன்னாள் மணப்பெண்கள் அதீத வெட்கம் வெளிப்படுத்தினார்கள். அது முடிய முளைப்பாரி (ஒரு வாரம் வளர்ந்த தானியங்கள்) கரைக்கக் கட்ற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து மாப்பிள்ளை வீடு- பால் பழம்-பெண்வீடு -பால் பழம் ! இந்தத் தொல்லைகள் முடிய இருட்டி விட்டது. என்ன நினைத்தார்களோ, ஒரு வழியாக மணமக்களைக் கொண்டுபோய் 5 நட்சத்திர ஹோட்டலில் விட்டு விட்டு மீதிப்பேரெல்லாம் காணாமல் போனார்கள். நாங்கள் இருவரும் தனித்து விடப்பட்டோம், ஆனால் நன்கு களைத்துப் போயிருந்தோம். சும்மா பேருக்கு இரவு உணவை அருந்திவிட்டு, சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு உறங்கிப் போனோம். சுற்றமும் நட்பும் நடக்காத விஷயங்களைச் சிலாகித்துத் தத்தமது தூக்கம் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். 

2 comments:

  1. /சுற்றமும் நட்பும் நடக்காத விஷயங்களைச் சிலாகித்துத் தத்தமது தூக்கம் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்./ .....?

    ReplyDelete
  2. மணமக்கள் துயில் கொண்டுவிட்டதால் 'முதல் இரவு ' நடக்கவில்லை......

    ReplyDelete