Sunday, October 23, 2016

நினைவஞ்சலி - செல்லத்துரை குமரேசன்

இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. 1994ல் ராஜரட்னம் - தேவி கல்யாணம் முடிந்து வரவேற்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடந்தபோது ஒரு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்க்களமாகச் சுழன்று சுழன்று ப்ரேக் டான்ஸ் ஆடினான். யாரவன் யாரவன் என்று கேட்காத ஆளில்லை. அந்த அபரிமிதமான திறமைசாலிதான் குமரேஷ். அந்த வயதுக்கே உரிய இயல்பான குறும்புத்தனமும் சேர்ந்து கொள்ள அவனைப் பார்த்தவர்கள் எல்லோரையும் அவன் கவர்ந்ததில் வியப்பில்லை. சில காலத்தில் அவன் மாமா மகளைக் கைப்பிடித்த வேளையில் இன்னும் அவனுக்கு உறவு முறையில் நெருங்கி வரும் வாய்ப்பு அமைந்தது. காலம் அவனை அமைதியாக்கியிருந்தது. துள்ளலும் துடுக்குத்தனமும் நகர்ந்து கொள்ள பொறுப்புணர்ச்சி கூடியிருந்தது. பட்டப்படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டான். வாழ்க்கை நன்றாகப் பயணிக்கும் தருணத்தில் விதி விளையாடியது. கடும் தலைவலியால் அவதிப்பட்டு மருத்துவர்களால் மூளையை இயக்கும் நரம்பில் சிறு அடைப்பிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் தாயகம் திரும்பினான், கனவுகள் கேள்விக்குறியாகி நின்றன. அடிக்கடி வலிப்பு வரத் தொடங்கியதால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் வீட்டில் ஒரு நாள் அவனைக் கண்டேன். நோயின் தாக்கம் உடலை உருக்கியிருந்தாலும் நம்பிக்கையுடன் பேசினான். அந்தக் கண்களில் இருந்த உயிரோட்டம் நம்பிக்கையளித்தது. பின்னர் 5 வருடங்களுக்கு இந்தத் தொல்லை இல்லை என்றான பின் மீண்டும் லண்டனுக்குச் செல்ல முடிவு செய்தான். அவனை அனுப்பக் குடும்பத்தில் எதிர்ப்புக் கிளம்பினாலும் நம்பிக்கை வார்த்தைகளால் அவற்றை முறியடித்து மீண்டும் கனவுகளைத் துரத்த விமானம் ஏறினான். சென்ற வருடம் இலங்கைக்குச் சென்ற போது சுகவீனமுற்றிருக்கும் அவன் தந்தையாரைக் காணச் சென்றோம். இவனைப் பற்றிப் பேச்சு வந்தபோது விரைவில் அவனுக்குப் பெண் பார்த்துக் கல்யாணம் முடிக்க இருப்பதாக அவன் தாயார் சொன்னார். சென்ற வாரம் அவன் மரணித்த செய்தி இடியாய் இறங்கியது. குளியலறையில் பாரிய இதயச் செயலிழப்பினால் உயிர் பிரிந்ததாகத் தகவல். உடல் பரிசோதனைகளின் பின்னர் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் பத்து லட்சம் செலவாகும் என்றும் மேலதிக தகவல்கள். வயோதிப காலத்தில் புத்திர சோகம் ஓர் பேரிடி. எப்படி இதைத் தாங்கப் போகிறார்களோ தெரியவில்லை. அந்த சக்தியை இறைவன் வழங்க வேண்டும். அவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

No comments:

Post a Comment