Monday, December 17, 2012

கௌதம் மேனன்


‘மின்னலே’ என்று ஒரு படம். வெளிவந்து சரியாக 11 வருடங்கள் இருக்கும். இன்றும் வசீகரா பாடல் தொலைக்காட்சியில் வரும்போது சப்த நாடியுமொடுங்கி (நான் மட்டுமல்ல மக்களே !) வெறித்துப் பார்ப்பதற்குப் பல காரணங்கள். ஒன்று ஹாரிஸ் ஜெயராஜின் இசை.மற்றது பம்பாய் ஜெயஸ்ரீயின் அதிரம்யமான குரல். மூன்றாவதாக அந்தக் கதாநாயகி ரீமா சென். இவ்வளவு நாளாகியும் இந்தப் பாடல் பலரது மனங்களில் ஒன்றரக்கலந்திருக்க என்ன காரணம்? அப்படத்தில் காதல் உணர்வு ஒருவனை என்னென்ன பண்ணும் என்று அழகாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும் தனக்கு அப்படியொரு காதலி வேண்டுமென ஏங்க வைத்த படம். அந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு அதன் நாயகியை ஒரே வாரத்தில் தமிழக கனவுகன்னியாக்கியது. ஆச்சர்யம் தந்த அந்த அறிமுக இயக்குனர் கௌதம் (வாசுதேவ) மேனன்.
அடுத்த படத்தில் காவல்துறையைக் கையில் எடுத்தாலும் காதல் உணர்வு அழகாகக் கையாளப்பட்டது. ஹாரிஸின் பாடல்களும் கைகொடுக்க, காக்க காக்க அந்த நாயகனுக்கு  உச்சாணிக்கொம்பை அடைய உந்துதலாக அமைந்தது. நாயகியுடன் திரையில் இருந்த அன்னியோன்யம் நிஜ வாழ்விலும் தொடர்ந்து இருவரும் மணம்புரிந்ததில் இந்தப் படத்தின் பங்கு மகத்தானது. ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ என்று பம்பாய் ஜெயஸ்ரீ பாடிய பாட்டுக்கு சொத்தையே எழுதித் தரலாம்!
 
அடுத்ததும் காவல்துறை சம்பந்தப்பட்ட படம். உலகநாயகனும் முந்தைய பட நாயகியும் தங்கள் தங்கள் தடம்புரண்ட வாழ்க்கையை (!) மீண்டும் காதலித்துப் புதுப்பித்துக் கொண்டது மனதுக்கு இதமாக இருந்தது. அறிமுக நாயகி கமலினி முக்கர்ஜியின் (முதல்) காதலிலும் கமல் பூந்து (வேட்டையாடி) விளையாடியதும் அம்சமாகவே இருந்தது. ஹாரிஸ் இசை படத்தை இன்னொரு பரிமாணத்திற்கு  எடுத்துச் சென்றது.
முந்தைய படங்களின் கனவுக்கன்னி ஜோதிகாவை வில்லியாக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் சறுக்கினாலும்,பாடல்கள் பேசப்பட்டன. புது வரவு ஆன்ட்ரியா பளிச்சென்று மனங்களைக் கவர்ந்தார்.
 
வாரணம் ஆயிரம் சூர்யாவுக்கு மட்டுமன்றி ஹாரிஸுக்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இளைஞர் சமூகம் சமீரா ரெட்டியின் வனப்பால் கட்டுண்டது.சூர்யா-சமீரா காதலை கவித்துவமாகச் சொல்லிய இயக்குனர், சூர்யாவுடன் சேர்த்து தமிழகத்தையே அழ வைத்தார். அழகான அம்மாவாக சிம்ரனும், மனைவியாக திவ்யா ஸ்பாந்தனாவும் ஆண்களை ஏங்க(!) வைத்தனர். யார் கண் பட்டதோ ஹாரிஸுடனான உறவு முறிந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் பின்னடைவு என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.
 
அடுத்து சிம்பு-த்ரிஷா ஜோடியுடன் களம் இறங்கிய இயக்குனர், மீண்டும் மெல்லிய உணர்வுகளை மீட்டி இளவுள்ளங்களைப் பைத்தியமாக்கினார். ஏ ஆர் ரஹ்மானுடன் இசைக்கூட்டணி அமைத்துக்கொண்ட இவர் படப்பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. சிம்புவின் காதல் தோற்றாலும் (திரையில்தான்!) இயக்குனரின் முயற்சி வென்றது.
 
பரிச்சார்த்த முயற்சியாக நடுநிசி நாய்கள் வந்தது. காதலில்லாத சைக்கோத்தனமான முயற்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது.
 
மீண்டும் தனக்குப் பரிச்சயமான, மக்களுக்கு நிரம்பப் பிடித்த காதல் களத்தில் இறங்கிய கௌதம், நீதானே என் பொன் வசந்தத்தை இவ்வருடம் தந்துள்ளார்.எண்பதுகளின் இளவட்டங்களாகிய எங்களின் உடல்,பொருள்,ஆவியென அனைத்தும் இசைஞானிதான். அவரின் இசையை இதற்குப் பயன்படுத்தி எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாகக் கூட்டிவிட்டார். படத்தில் ஜீவா – சமந்தா காதல் ரொம்ப ரொம்ப மெதுவாகச் சொல்லப்படுகிறது. சமயத்தில் பொறுமையை சோதிக்கிறது. இருப்பினும் இனிக்கிறது. இது எதனால்? சம்ந்தாவின் அழகு ஒரு புறம், வசனங்கள் மறுபுறம். காதல் தோற்றுவிடுமோ என்று சமந்தா மட்டுமன்றி யாவருமே கலங்கியது என்னவோ உண்மைதான். கடைசியில் இருவரும் ஒன்று சேர்வது சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
 
மொத்ததில் மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா என ஏங்க வைத்து, தன் (காதல்) பலத்தை நிரூபித்துவிட்டார்.
கௌதம் வாசுதேவ மேனன்…..காதலின் சுகம் தெரிந்தவர், முக்கியமாக, அந்த உணர்வை அப்படியே திரையில் பகிர்பவர்.

 

No comments:

Post a Comment