Saturday, December 28, 2013

கேக் - செய்முறை விளக்கம் அல்ல !


அவன் இல்லாமல் (எவன் அவனுன்னு கேட்கப்படாது, அது ஓவன் என்று தப்பாக தமிழில் சொல்லப்படும் ஒரு மின்னுபகரணம்) கேக் செய்வது எப்படியென்று ஒரு பதிவு படித்தேன். அம்மா நன்றாகக் கேக் செய்வார்கள்.செய்து எங்கள் விடுதிக்கு அனுப்புவார்கள். அனேகமாக எல்லாப் பிறந்த நாளுக்கும் அம்மாவின் கேக்தான். அப்போதும் சில பேக்கறிகள் இருந்தாலும் அங்கெல்லாம் வாங்குவதில்லை. அனேகமான எல்லாத் தின்பண்டங்களுமே வீட்டிலேயே செய்யப்படும்.

 பள்ளியில் நாங்கள் ஒரு 3-4 பேர் ஒரு கணக்கு டீச்சரிடம்  டியூஷன் போவோம். டியூஷன் அனேகமாக அவர் வீட்டிலேயே இருக்கும். எங்களுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு அடிக்கடி உள்ளே போய் ஏதாவது கொறித்துக் கொண்டு வருவார்.  அவரும் அவர் மகளும் இதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். நாங்களும் நமட்டுச்சிரிப்புடன் கணக்குப் போடுவோம். ஒரு நாள் அத்தி பூத்தது போல எங்களுக்கு (அன்று 2 பேர்தான்) ஒவ்வொரு துண்டு கேக் கொடுத்தார். கொடுத்து விட்டு எப்படி இருக்கு,எப்படி இருக்கென்று அவர் பெண் கேட்டுக் கொண்டேயிருந்தாள். சூது வாது தெரியாத நாமும் (?) சாப்பிட்டு விட்டு நன்றாக இருப்பதாகத் தலையாட்டினோம். அதற்கு அந்த டீச்சர் ' ஒன்றுமில்லை, நாலு முட்டையில் ஒன்று கொஞ்சம் கெட்டமாதிரி இருந்தது. அதுதான் உங்களுக்குக் கொடுத்து டேஸ்ட் பார்க்கச் சொன்னோம்' என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் ! எங்களுக்கு எப்பொழுது வெளியில் வந்து வாந்தியெடுக்கலாமென்று இருந்தது. இப்படியும் சில ஜென்மங்கள் ???

என் வீட்டிலும் கேக் செய்யவென்று ( நான் குக்கரி கிளாஸ் போய் நிறைய விஷயம் படித்திருக்கிறேனாக்கும் !) ஒரு அவன் வாங்கினார் சகதர்மினி. வாங்கி சில முறை கேக் செய்யப் பயன்பட்டது. பின்னர் பீட்சா சுடவும் உதவியது. இலங்கையிலிருந்து இங்கே இடம்பெயர்கையில் அதையும் கட்டியிழுத்துக் கொண்டு வந்தாயிற்று. இப்பொழுது அது கம்பீரமாகச் சமையல் அறையில் உட்கார்ந்து இருக்கிறது. அதில் பிஸ்கட் பாக்கட்டுக்களை சேமிக்கப் பயன்படுத்துகிறோம். செல்லமாக அதை நான் பிஸ்கட் ஸ்டாண்ட் என்று அழைப்பேன். அப்பொழுது ஒரு ஜோடிக் கண்கள் என்மேல் அனலைப் பாய்ச்சும் !



Sunday, December 22, 2013

சுவாரஸ்யமான புகைப்படங்கள்


இந்தப் புகைப்படம் நான் பிறக்க முன் எடுக்கப்பட்டது. எங்க வீட்டுப் பழைய ஆல்பத்திலிருந்து கிடைத்தது. இது ராஜரத்தினம் மாமாவின் குடும்பப் படம். அவர் கொழும்பில் பிரபலமான வக்கீல்.சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சட்டம் படிக்கும்போது காதல் வயப்பட்டுச் சிங்களப்பெண்ணை மணமுடித்தார். அந்தத் திருமண பந்தத்தின்மூலம் 7 குழந்தைகளைப் பெற்ற அவர் மனைவி இறுதிப்பிரசவத்தில் இரண்டை ஈன்று இறையடி சேர்ந்தார். பாவம் குழந்தைகள் ! குழந்தைகளுக்குத் தாய் வேண்டுமென்று வருந்திய தந்தையார், இரண்டாந்தாரமாக மேற்படி படத்தில் இருக்கும் பெண்மணியைக் கை பிடித்தார். அவரும் சில நாட்களிலேயே இறந்து போக மனம் வெதும்பினார். அவ்வேளையில் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவியொருவர் தாமாக முன்வந்து அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகும் பெரும்பொறுப்பை ஏற்றார். இதற்காக அவர் தனக்கென்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாதது இங்கே குறிப்பிடத்தக்கது. 

பிள்ளைகள் வளர்ந்தனர். தந்தையின் தொழிலையே மாக்களில் நால்வர் விரும்பி ஏற்றனர். தந்தையின் தொழில் சிறப்பாக நடந்தது. அருகில் வசித்த பெண்களையே மூத்த சகோதரர்கள் காதலித்து மணந்தனர். இவர்கள் வழியிலேயே இளைய பெண்ணும் பேனா நண்பரான ஜெர்மனிய நாட்டவரை காதல் மணம் புரிந்தார். இவ்வேளையில் வாசஸ்தலத்தை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற்றினர். அதற்கு வங்கிகளின் உதவியை நாடினார் மாமா. சொந்த வீட்டுக் கனவு நனவானது. ஆனால் வாங்கிய கடன் நெருக்கியது. தினம் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர், மனவழுத்தம் தந்த கவனப்பிசகால் ரயில் தண்டவாளத்தைக் கடக்கையில் துர்மரணமடைந்தார். பெரிய விருச்சம் வீழ்ந்தது. இது என் தந்தைக்குப் பேரிழப்பென்றால் மிகையாகாது. பிள்ளைகள் வங்கிக்கடனை ஒருவாறு ஒழித்தனர். மற்றவர்களுக்கும் திருமணம் நடந்தேறியது. அவர்களுக்கும் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் வளர்ந்து பெரியவராயினர். அந்த அத்தை இன்னும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அவர் தியாகத்தை பற்றி பேச யாரும் இல்லாது போனதுதான் சோகம். 

Saturday, December 21, 2013

நினைவலைகள்


அப்பொழுது எனக்கு 5 வயதிருக்கும். காலை 6 : 30 மணிக்கு 'நெஞ்சில் நிறைந்தவை' கேட்டுக்கொண்டே படுத்திருப்பேன். 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும், வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்' எனும் பாடல் அடிக்கடி ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகும். அக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இதைத் தொடர்ந்து 7 மணிக்கு 'பொங்கும் பூம்புனல்' ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் இடம்பெறும்.  அதைத் தொகுத்தளிக்கும் அறிவிப்பாளர்கள் கவித்துவமான இரு வரிகளை ஒவ்வொரு பாடலுக்கும் முன்னர் சொல்வது தனி அழகு. மதியம் 12 : 05 க்கு 'சித்திரகானம்' ஒலிக்கும். செய்திகளின் பின்னர் 'இந்திப்பாடல்கள்' ஒலிக்கும். மொழி புரியாவிட்டாலும் முகமது ராஃபி முதல் மூகேஷ், கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என பல வடநாட்டுப் பாடகர்கள் அறிமுகமானது இவ்வண்ணமே. பின்னர் 'ஒரு படப்பாடல்' மற்றும் 'மலர்ந்த்தும் மலராதவை' தொடரும். 2 : 30 க்கு 'மகளிர் விருப்பமும்' அதைத் தொடர்ந்து 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி' ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் கணீர்க்குரலில் ஒலித்ததும் இன்றும் இனிக்கிறது. 'மலையாளப் பாடல்கள்' மூலம் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மற்றும் பல பெண் பாடகிகள் அறிமுகம். 5 மணிக்கு 'இன்றைய நேயர்' அதைத் தொடர்ந்து 'பிறந்தநாள் வாழ்த்து' என 5 : 30 க்கு 'நீங்கள் கேட்டவையுடன்' வர்த்தக நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். பிற்காலத்தில் இரவு ஒலிபரப்பு தொடங்கிய வேளைகளில் 'இரவின் மடியில்' தாலாட்டுப் பாடித் துயில வைக்கும். இதுபோக 'தேன்கிண்ணம்', கதம்பமாலை','மலர்ந்தும் மலராதவை' எனப் பல நிகழ்ச்சிகள், சிந்தனையைத் தூண்டும் அதேவேளை மனதை மயக்கும்.

விடுமுறை நாட்களை கே.எஸ்.ராஜா ஆக்கிரமிப்பார். 'திரைவிருந்து' மற்றும் 'இசையணித்தேர்வு' மிகவும் எதிர்பார்க்கப்படும்.'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் இடம்பெற்ற 'என்னடி மீனாட்சி' பாடல் பல வாரங்கள் நிலைத்து நின்றது மறக்க முடியாதது.  'ஒலிச்சித்திரம்' (திரைப் படங்களின் கதை,வசனம்) ஒருமணி நேரம் ஒலித்தாலும் சுவாரஸ்யம் குறையாது. பி.எச்.அப்துல் ஹமீத் 'பாட்டுக்குப் பாட்டு' மூலம் மனதுகளைக் கொள்ளை கொள்வார். 'புதுவெள்ளம்' புதிய பாடல்களை அறிமுகம் செய்யும். 'விடுமுறை விருப்பம்' நேயர் விரும்பிய பாடல்களை வாரி வழங்கும். இதற்கிடையில் நாடகங்கள் தமது ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும். ராமதாஸின் 'கோமாளிகள்' நாடகத்தைக் கேட்க ஒரு கூட்டமே இருந்தது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு வாழ்த்து நிகழ்ச்சிகள் ஒலிக்கும். புது ராகங்களை இசைக்கும். அவற்றை ஒலிநாடாவில் பதிவு பண்ணப் பெரிய போட்டியே நடக்கும். 

இன்று போல் அன்று விளம்பரதாரர்கள் இடையில் இடியூறு செய்யாது இருந்த காலமது. அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளின் ஊடே பல விடயங்களைப் பகிர்ந்தார்கள். வெறும் அரட்டைக் கச்சேரியைக் கேட்டு சலிப்புறும் நிலை அன்றில்லை. வானொலி கேட்டல் ஒரு உபயோகமான பொழுது போக்காக இருந்த காலமது. அதற்கு இலங்கை வானொலி முன்னோடியாக இருந்ததென்பது பெருமைக்குரிய விடயம்.

Thursday, December 19, 2013

யதார்த்தம்


நேற்று கத்தார் தேசியதினம். லீவு விட்டுட்டாங்க. எப்பவும்போல நண்பன் ஸ்ரீகாந்தன் அறைக்கு ராஜேந்திரனுடன் போனேன். அங்கு சோமபானம் பருகி. மதிய உணவை முடித்து விட்டுக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். மாலை 5 : 15 மணிக்காட்சிக்கு ஆனந்த மற்றும் ஜோன்ஸ் அழைப்பு விடுத்துப் போயிருந்தார்கள். படம் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் போனோம். வழக்கமாக முதல் படத்தில் காட்டும் அக்கறை,உழைப்பு எதையுமே அடுத்த படத்தில் காட்டுவதில்லை தமிழ் இயக்குனர்கள். சிற்சில விதிவிலக்குகள் இருந்தாலும், அனேகமானவர்கள் படங்களில் ஒருவித சலிப்புத் தெரியும். இந்தப் படம் பார்க்கலாம் ரகம். ஏனோ ஹீரோ மனதில் ஒட்டவில்லை. என்னதான் நடிகர் திலகத்தின் பேரனென்றாலும் தமிழ் நாயகர்களுக்கான முகவெட்டு இவரிடம் இல்லவேயில்லை. அது எப்படியோ போகட்டும். இந்தப் பதிவும் ஒரு சினிமா விமர்சனம் அல்ல. அதையும் தாண்டி ஒரு தனி மனிதனின் உண்மை நிலை பற்றிய விளக்கம் மட்டுமே.

படத்தில் ஒரு காட்சியில் நாயகனும்,நாயகியும் ஒரு ஆட்டோவில் பயணிப்பார்கள். அந்த ஆட்டோக்காரர் சில வசனங்கள் பேசுவார். கூர்ந்து நோக்கினால் அவர் முகம் ரொம்பவும் பரிச்சயமாகப் பட்டது. ஸ்ரீகாந்தனும் அதை ஆமோதிக்க, பார்த்தால் அது எங்களுடன் பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்ற நண்பன் இளங்கோ ! அனேகமானோர் இவன் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அல்லவா சொல்லியிருந்தார்கள் ? 25 வருடங்கள் அந்த மாயச் சூழலில் சிக்கி அவன் அடைந்திருந்த 'இடம்' சில நிமிடங்களே திரையில் இடம்பெற்றதென்றால், இந்த நிலையடைய எவ்வளவு பாடு பட்டிருக்க வேண்டும். வேறு எந்தத் துறையில் இருந்திருந்தாலும் ஒரு நல்ல (?) நிலைக்கு வந்திருக்க முடியும். ஏனிப்படி? அதீத திறமை இருந்தும் அதிர்ஷ்டக் காற்று தம் பக்கம் வீசாமையால் கடைசிவரை திரைமறைவிலேயே வாழ்ந்து, வீழ்ந்த எண்ணிலடங்காரைப் பற்றிப் படித்தும், பேசியும் இருக்கிறோம். ஆனால், எம்மில் ஒருவனின் நிலை மனதைத் தைத்ததென்னவோ உண்மை. 

அதன்பின் வந்த காட்சிகளிலெல்லாம் துணை நடிகர்களின் முகங்களை மட்டுமே, என்னை அறியாமல், கண்கள் கூர்ந்து நோக்கின. எத்தனை கனவுகளும், ஏக்கங்களும் அந்தக் கண்களில் தேங்கி நின்றன. அவற்றிலெல்லாம் என்பன் நண்பன் தெரிந்தான் என்பதே உண்மை.

Wednesday, December 11, 2013

என் நண்பனின் இல்லம்


தனதில்லத்தின் முகப்பில் நான் என்றோ அளித்த யாழி பொம்மையை மாட்டி எனக்குப் பெருமை சேர்த்த என் நண்பன் சத்யமூர்த்தி

பாவம் அத்தை !


அப்பாவின் தங்கை, அப்பாவித் தங்கை

அவங்க பேரு தங்கம், உள்ளம் சொக்கத் தங்கம்

நாங்கன்னா அதுக்கு அம்புட்டு உசுரு

அறியாத வயசில அத்தைக்குக் கண்ணாலம்

ரெண்டாந்தாரமா வாய்ச்ச வயசான மாப்பிள்ளை

அஞ்சு புள்ளைங்க கொடுத்த மாமா கெளம்பிட்டாரு பரலோகம்

கஷ்டம்னாக் கஷ்டம் கஞ்சிக்கு மட்டுமல்ல

ஆனா தனியாளாப் புள்ளைகள கரையேத்தி

கடைசிவரை சுகமின்னா என்னான்னு தெரியாமலே

அத்தையும் படுக்கைல விழுந்து மாமா போலவே

40 நாள்ள மெதுவாக மேல போயிருச்சு

ஊருக்கு கௌரதையா போட்ட 4 பவுன் சங்கிலிய

பாடைல போகையில யாரோ பாவிப்பய உருவிட்டானே

அம்மாவ மறந்திட்டு புள்ளைங்க பொருளத் தேடி

வெட்டியான அவுத்துப்பாத்து, வசை பாடி, இருட்டில் தேடி

கடைசிவரை கெடைக்கலியே மருமக சங்கிலி

மண்ணுக்குப் போகும் முன்னே

பொன்னுக்கு சர்ச்சையாச்சு

பொன்னை விரும்பும் பூமியிலே

பொன்னான அத்தைக்கு எங்கய்யா மதிப்பு ?






Tuesday, December 10, 2013

வாழ்வின் விளிம்பில் - நூலாய்வு

16 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. நூலாசிரியர் எனது நண்பன் பிரசாத்தின் தந்தை என்பது சிறப்பு. இவரின் ஆக்கங்கள் வலைப்பதிவுகளில் எனக்கு முன்னரே நன்கு பரிச்சயம்.

சுஜாதா,பாலகுமாரன் என மிகச்சில பிரபலங்களின் எழுத்துகளையே விரும்பிப் படித்தது ஒரு காலம். பின்னர் அந்தப் பட்டியலில் கி.ராஜநாராயணன் அய்யாவும், எஸ்.ராமகிருஷ்ணனும் இடம் பிடித்தார்கள். இவை தவிர விகடன்,குமுதத்தில் வரும் சிறு மற்றும் நெடுங்கதைகளையும் விடாமல் படிக்கும் வழக்கம் இருந்தது. இணையம் வந்தபிறகு படிக்க நிறைய விடயங்கள் கிடைக்கின்றன ; சில ஆச்சர்யப்பட வைத்தாலும் பல முகம் சுழிக்க வைக்கின்றன. ஆனால் நூலாசிரியரின் வலைப்பக்கம் எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும். தனது பழுத்த அனுபவங்களைப் படிப்பவரின் மனதுக்குப் பிடித்தவாறு எழுதுவதில் வல்லவர். ஏறக்குறைய 70 களின் எழுத்துச்சாயல் அவர் நடையில் இருக்கும். இந்த நூலிலுள்ள சில கதைகள் (அவை உண்மையில் அனுபவக்கோர்வைகள்) ஏற்கனவே வலைப்பதிவு செய்யப்பட்டவை. ஒவ்வொன்றாக அவற்றைப் பார்ப்போம் :

1. வாழ்வின் விளிம்பில் மற்றும் 14. விளிம்புகளில் தொடரும் கதை 
இந்தக்கதையின் நாயகன் ரங்கசாமிக்கு உடல்நலம் மிகவும் மோசமாகும்போது அவனுடைய மனவோட்டத்தை பிரதிபலிக்கிறது கதை. இறுதியில் அவனும் மனைவியும், ஈருடல் ஓருயிரென்று வாழ்ந்து, ஒன்றாக இறப்பதாக முடிகிறது கதை. இந்த எண்ண ஓட்டங்கள் (முடிவு தவிர்த்து) ஆசிரியரின் வாழ்வில் நடந்திருக்குமோவென நம்மைச் சிந்திக்க வைப்பது என்னமோ உண்மை. 

2. கேள்விகளே பதிலாய் 
குழந்தையின்மை ஒரு இளம் தம்பதியின் நிம்மதியை எப்படிக்குலைக்கின்றதென்பதையும் அதற்காக அவர்கள் தவறாக போலிச்சாமியாரிணியின் பின்னால் போவதையும் நன்கு விளக்குகிறது. இறுதியில் அந்நாளைய பாலச்சந்தர் படங்கள்போலக் கேள்வியுடன் முடிகிறது கதை. 

3. ஏறி வந்த ஏணி
இந்த உலகில் எல்லோருமே சுயநலமிகளாக இருப்பதை இந்த அனுபவப் பதிவு தெரிவிக்கிறது. பாவம்சேகரன்,கடைசியில் சோகரனாகி விட்டார். அவர் மனைவி நாய்க்குச் சோறூட்டுவதை நிறுத்தவில்லை என்பது காமெடி பன்ச்.

4. மனசாட்சி
மேல்மட்ட மக்களின் வாழ்வில் நடப்பதாக் கூறப்படும் இக்கதை ( இப்படிக்கூட நடக்குமா என பிரமிக்க வைத்து) இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதன் மகிமையை உணர்த்துகிறது. 

5. அனுபவி ராஜா அனுபவி
சதாவின் பாத்திரப் படைப்பு ( உண்மையாயிருக்குமோ?) பழைய படமொன்றில் என்னத்தே கன்னையாவை நினைவு படுத்தியது. நாய் தானும் தின்னாது, தின்னுற மாட்டையும் விடாது என்பது இதற்குச் சாலப்பொருத்தம்.

6.வாழ்க்கை ஒரு சக்கரம் 
தலைப்புக்கேற்ற ஒரு கதை, (புது) மனைவி அருகில் வேற்றாள் அமர்வதில் வரும் கோபம் இயல்பாக இருக்கிறது.(நான் ஆண் என்பதால் அப்படித்தோறுகிறதோ என்னமோ?) இதன் சாயல் மீண்டும்  (15) 'கண்டவனெல்லாம்' கதையில் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.  அடுத்தவர் நிலை உயர்வதைப் பொறுக்காத சித்தியின் விசும்பல் யதார்த்தம். 

7.இப்படியும் ஒரு கதை
இந்தத் தொகுப்பில் சிறந்தது இதுதான். மலையாள மைந்தரின் வாழ்க்கை முறை விவரமாகக் கூறப்படுகிறது. (தமிழ்நாட்டிலும் இப்படியான பழக்க வழக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு) முடிவு புல்லரிக்க வைத்ததென்னமோ உண்மை.

8. எங்கே ஒரு தவறு?
ஜயந்தியின் கதையில் அவள் மேல் பச்சாதாபம் தோன்றுகிறது. அவள் (உடல்) இச்சைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடிப்போன கணவன் குற்றவாளியா, அல்லது அவளுடன் சல்லாபித்து அவளை மற்றவரின் கோபத்துக்கு ஆளாக்கிய சிவகுமாரன் குற்றவாளியா? மணவாழ்க்கையில் ஒவ்வாமையைக் கண்டறிந்து, பின் மணமுடிக்க  இதுவொன்றும் மேற்குலகமில்லையே.

9. விபரீத உறவுகள்
ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றிய கதை, அனேகமாக இப்பொழுது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' சாயலில் பயணிக்கிறது. முகத்தைப் பார்த்து ஏமாறாதே என எச்சரிக்கை விடுக்கிறது. கடைசியில் வைத்தியர் எஸ் ஆவது பன்ச்.

10. சௌத்வி கா சாந்த் ஹோ
மூட நம்பிக்கைகளை விவரிக்கும் கதை, குருவி உட்காரப் பழம் விழுந்த கதையாய் முடிகிறது. (தலைப்புக்கு அர்த்தம் என்ன?)

11.லட்சுமி கல்யாண வைபோகம்
இதுவும் அனுபவப்பகிர்வு போலும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்று மணப்பெண்ணுக்கு ஆதரவாக வாதாடிய நல்லுள்ளங்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

12. அரண்டவன் கண்ணுக்கு 
இந்தத்தொகுப்பில் இது தேவைதானா? 

13. பார்வையும் மௌனமும்
மற்றொரு சிறந்த படைப்பு. பால்ய விவாகத்தால் விதவையான சிறுமியரின் வாழ்க்கை மிகக் கொடியது. இது அதைவிடக் கொடுமை. காமு பாவம், உணர்ச்சிப்பெருக்கை அவள் எப்படித் தடுப்பாள்? மனசை ரொம்பவே சங்கடப்படுத்திய படைப்பு இது.

14. நதிமூலம் ரிஷிமூலம்
இதுவும் முதல் மூன்றில் வரும் படைப்பு. காதலுக்குக் கண் மட்டுமில்லை, அறிவும் கிடையாதென்பதை வலியுறுத்தும் கதை. பிறப்பின் சஸ்பென்ஸ் உடைபடும் இடம் (மனதளவில்)கை தட்ட வைத்தது.

மொத்தத்தில் முதல் நூல் நன்றாகவே உள்ளது. கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.