Wednesday, January 25, 2017

நினைவஞ்சலி - அத்தை - சிவபாக்கியம் ரட்னம்

17 ஜனவரி, தோகா நேரம் காலை 4 30. பொதுவாக அவ்வேளைகளில் தொலைபேசியழைப்பு மிகவும் அபூர்வம். அதிலும் வீட்டிலிருந்தென்றால்,  பதற்றம் தொற்றிக் கொள்ள, மீண்டும் மனைவியின் எண்ணுக்கு தொலைபேசினேன். 'அம்மா இறந்திட்டாங்களாம்!' இடியாய் இறங்கின வார்த்தைகள். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாலையில் எங்களை வழியனுப்பிய அந்தச் சிரித்த முகம் மனதில் தோன்றியது. மனைவியின் குரலில் இருந்த அதிர்ச்சி மேன்மேலும் தகவல் கேட்கும் ஆவலை அடக்கியது. ஒரு மணி நேரத்தில் மைத்துனனுக்கு அலைபேசினேன். தகவலை உறுதி செய்தான், தொடர்ந்து பேச முடியாத இக்கட்டான நிலை. உடனே அலுவலகத்திற்கு விரைந்தேன். மேலதிகாரியிடம் தகவலைத் தெரிவித்து விடுமுறை வேண்டுமென்று பணித்தேன். பணிக்குத் திரும்பி ஒரு வாரமே ஆகியிருந்த வேளையில் என் கோரிக்கை ஏற்கப்பட்டது அபூர்வம். கடவுச்சீட்டு மாலை கிடைக்கப்பெற மறு நாள் காலை 10 30 மணி கொழும்பு விமானத்தில் கனத்த இதயத்துடன் பயணம்.

அன்றிரவு மாமியார் (இல்லாத) வீட்டை அடைந்து அவர் உயிரற்ற உடலைக் கண்டவுடன் அந்நாள்வரை அவர் கையால் சமைத்துப் போட்டிருந்த உப்பு,புளி, காரம் அனைத்தும் கண்ணீராகப் பிரவாகம் எடுத்தது. சமையற்கட்டையே தன் சாம்ராஜ்யமாகக் கொண்டு இயங்கிய அரசி அமைதியாகப் பள்ளி கொண்டிருந்தார். கவலை தோய்ந்த முகங்களுக்கிடையில் அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் ஈமச் சடங்குகளுக்காக சுற்றமும், நட்பும் கூடி அவர் பூவுடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றது. அங்கே மின்னடுப்பில் ஏற்பட்ட சிறு சுணக்கத்தால் சுமார் அரை மணி நேரம் காக்க வேண்டிய சூழல். அதிலும் அங்கிருந்த மக்களுக்கு சூடான தேனீரும் சிற்றுண்டியும் கிடைக்கப் பெற்றது மறைந்த அன்னையின் விருந்தோபலின் ஒரு அங்கம் எனப் புகழாதோர் இல்லை. ஆண்கள் அழுவதை ஆச்சர்யமாகப் பார்க்கும் சமூகத்தில் கண்கள் பனித்த அத்தனை ஆண்களும் அத்தையின் கைப்பக்குவத்துக்கு ஒரு முறையன்றிப் பல முறை தலை வணங்கிய பாக்கியசாலிகளே. இருந்தவரை அடுத்தவருக்குக் கொடுத்துச் சிவந்த கரம் கடைசியில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் மின்னலைப் போல் மறைந்தது. தாயை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு என்ன சொல்லி ஆறுதல் செய்யவென்று புரியாத கலக்கத்தில் நான்.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும். 

2 comments:

  1. என் ஆழ்ந்த இரங்கல்கள் தவிர்க்க முடியாதவை அனுபவிக்கப்பட வேண்டும் என்று தேற்றிக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  2. இரங்கலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete