Monday, March 14, 2016

விக்கிரவாண்டி - 6

அத்தியாயம் - ஆறு

பாட்டியம்மாயைப் பறிகொடுத்தது மட்டுமல்லாமல், வீட்டில் அதை எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்று குழம்பியிருந்தான் வினோத். அந்தக் குழப்பமே அவன் கோபத்துக்குக் காரணம். அதன்மூலம் வார்த்தைகள் தப்பாக வந்து விழ இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரிய கைகலப்பில் முடிந்திருக்கும். நல்ல வேளை அப்படியொன்றும் நடக்கவில்லை.

ஓரங்கட்டப்பட்ட வண்டியின் ஓட்டுனர் பேசினார்.

‘இங்க பாரு தம்பி. எங்களைக் குத்தம் சொல்லாத. வயசானவங்க கூட வந்தாங்கன்னா நாமதான் அவங்களக் கவனமாப் பாத்துக்கணும். இப்ப வேகப்பட்டு எதுவும் ஆகப்போறதில்ல. யோசி. எப்புடி அவங்களத் திரும்பி அடையிறதுன்னு ஐடியா பண்ணு. நாங்க ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. மத்த பாசஞ்சருங்களுக்கு அது தொந்தரவாகிடும். எங்க நிர்வாகமும் அதை அனுமதிக்காது. வேணுமின்னா பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு கம்ப்ளேன்ட் குடுக்கலாம். எங்களுக்கு ஏதாச்சும் தகவல் கெடச்சா நாங்க நிச்சயம் உங்கிட்ட சொல்றோம். உன் ஃபோன் நம்பர் இருந்தா எழுதிக் கொடு’

அவர் பேசுவது நியாயமாகப் பட்டது. வண்டி சர்க்கிள் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி திருப்பி விடப்பட்டது. சென்ற வேலை முடிந்தவுடன் வினோத்தையும் அவன் லக்கேஜுகளையும் விட்டு விட்டு வண்டி கிளம்பியது. அங்கே ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் இருக்கப் பணிக்கப்பட்டான். வினோத் யோசித்தான். இப்போது மணி 2 45. இந்த நேரத்தில் வீட்டுக்குப் ஃபோன் போடுவதோ, தஞ்சாவூரில் மாமாவுக்குப் ஃபோன் போடுவதோ பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தும். ஒன்று பண்ணலாம். கிளம்பி வண்டி டீ குடிக்க நிறுத்தியதாகச் சொல்லப்பட்ட இடத்துக்குச் செல்லலாம். ஆனால், அங்கேதான் ஆயா இருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம். அடுத்த நடவடிக்கை என்னவென்று பிறகு முடிவு செய்யலாம். முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். என்ன சொல்லிக் கிளம்பலாமென்று யோசிக்கலான்.

தஞ்சாவூர் நோக்கி வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தேவையில்லாத ஒரு குளறுபடி. நிர்வாகத்துக்குத் தெரிந்தால் அனாவசியப் பிரச்சினை கிளம்பும். வண்டியை ஓட்டிக்கொண்டே நடந்த விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் செல் ஃபோன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டியவாறே, ஓட்டிவாறு ஃபோன் பேசினால் நிர்வாகம் கடுமையான தண்டனை கொடுக்கும், யாராயிருக்கும் என்ற எண்ணத்துடன் ஃபோனை எடுத்தார்.

       ‘வணக்கம், நான் திண்டிவனம் டைம்கீப்பர் மணிகண்டன் பேசுறேண்ணே’

       ‘வணக்கம் மணி, நல்லாயிருக்கியாப்பா? என்ன இந்த நேரத்தில?’

கூர்மையாகக் கவனித்துக் கேட்டார். ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக் கொண்டு மறு கையால் தன் சட்டைப் பையைத் துழாவினார். எழுந்து பாண்ட் பாக்கெட்டில் கை விட்டுப் பார்த்தார். வண்டியின் டாஷ் போர்டில் பார்த்தார். ஓட்டுனரிடம் குரல் கொடுத்துப் பார்த்தார். முடிவில் ஏமாற்றத்துடன் பதில் சொன்னார்.

‘இங்கதான்பா எங்கேயோ வச்சிருந்தேன் அவன் நம்பர, அது காத்துல கீத்துல பறந்திருச்சுப் போல’

வேறு என்னென்னமோ பேசிவிட்டு லைனைக் கட் பண்ணினார். முகம் வாடியிருந்தது. சே! ஒரு பேப்பர் துண்டைக்கூட வச்சுக்கத் துப்பில்லாமப் போச்சே என்று மனம் குமுறியது. வண்டியை எடுத்தார்.

ஒரு அரைமணி நேரம் வண்டி ஓடியிருக்கும். டாஷ்போர்டில் ஒரு துண்டுச் சீட்டு துருத்திக் கொண்டிருந்தது. எடுத்துப் பார்த்தார். அவர் தேடியது அதைத்தான். வண்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. தகவல் சொல்லப்பட்டவுடன் மீண்டும் வேகமெடுத்தது.

இப்பொழுது அவர் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

திண்டிவனத்தில் நேரக்காப்பாளர் மணி பரபரப்பானார். மாணிக்கம் அண்ணன் மீண்டும் அழைத்து அந்தப் (பாட்டியம்மாயின்) பேரனின் நம்பரைக் கொடுத்திருந்தார். உடனே அதற்கு ஒரு ஃபோனைப் போட்டார். தகவல் சொன்னார். இப்பொழுது உண்மையாகவே பாட்டியம்மாயைப் பார்த்துத் தலையாட்டினார்.

வினோத்துக்கு நடப்பது கனவா அல்லது நனவா என்று சந்தேகமாய் இருந்தது. தீண்டிவனத்திலிருந்து யாரோ பேசினார். ஆயா பத்திரமாக இருப்பதாகச் சொன்னார். இவன் உடனே வருவதாகச் சொன்னான். காவல் நிலையத்தில் நடந்தவற்றை விளக்கினான், அவன் நல்ல நேரத்துக்கு மேலதிகாரி இல்லாததால் இரவு நேர அதிகாரி அவன் விண்ணப்பத்தைப் பதிவு செய்யாதிருந்தார். உடனே அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் போலீஸ் ஜீப்பிலேயே கொண்டுபோய் இறக்கி விடப்பட்டான். சென்னை நோக்கிச் சென்ற பஸ்ஸில் ஏறினான்.



(தொடரும்)

No comments:

Post a Comment