Tuesday, March 29, 2016

தாம்பரம் டு பீச் - 12

பன்னிரண்டு    -    கோடம்பாக்கம்

08 : 38

தன்னை முறைத்துப் பார்த்தவன் சம்பந்தமில்லாமல் வேறொருத்தனை அறைந்ததையும், அதைத் தொடர்ந்து அவனை இழுத்துக் கொண்டு போனதையும் பீதியுடன் பார்த்தான் ராஜாபாதர்.

மடியில் கனம் இருந்தால்தான் மனதில் பயம் இருக்கும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்கள், ஏன் தனக்கு இந்தப் பழமொழி ஞாபகம் வந்து தொலைக்கிறதென்று அவனுக்குள் குழப்பம்.

ரயில் மீண்டும் வேகமெடுத்து வேகம் குறைத்து மீண்டுமொரு ரயில் நிலையத்தின் வரவைப் பிரதிபலித்தது.

மீண்டும் ஒரு சலசலப்பு.

ரயில் நிற்கும் முன்னரே இருக்கையின் அடியில் இருக்கும் பையை எடுக்க முனைந்தான் சுப்பு. இறுக்கமாக ஒரு பிடி அவன் கைமீது விழுந்தது. உதறிவிடப் பார்த்தான். இறுக்கம் அதிகமானது. உடனே தனக்குப் பழக்கமான தற்காப்பு முறையைக் கையாண்டான்.

திடீரென்று திராவிடனின் முகத்தில் நாக்குக்கடியில் பதுக்கியிருந்த பிளேடை உமிழ்ந்தான். அருவருப்பில் சடாரென்று கை அந்த எச்சிலைத் துடைக்க முனைய முகத்தில் ரத்தம் பீரிட்டது.

அந்தத் தருணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய சுப்பு பையை இழுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேற முனைந்தான். அந்தக் களேபரத்தில் கைக்குட்டை விற்றுக் கொண்டிருந்த நசீர் பாய்மீது மோதினான். அவர் அல்லாவே என்று கீழே விழுந்தார். திராவிடன் சுதாரித்து அவனைப் பிடிக்க முனைகையில் அவன் இரண்டடி முன்னேறியிருந்தான்.

வாசலை அடைந்து விட்டான். நசீர் பாய் கண்ணில் அங்கிருந்த கிச்சா தென்பட்டார்.

      ‘அவனை மடக்குங்க கிச்சாண்ணே!’

கிச்சா முன்னால் சென்று கொண்டிருந்த சுப்புவை அப்படியே கட்டிக் கொண்டார். சுப்பு இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் முட்டியை இறுக்கி பின்னோக்கி ஒரு குத்து விட்டான்.

      ‘அம்மா’

அலறிக்கொண்டே கீழே சாய்ந்தார் கிச்சா.

ஒரு பார்வையற்ற வயதானவரைத் தாக்கியத்தைக் கண்டதும் அதுவரையில் சிந்துஜாவை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு நின்ற எட்வர்ட்டுக்கு கோவம் தலைக்கேறியது. பாய்ந்து போய் ரயிலை விட்டு வெளியேறியிருந்த சுப்புவை பின்னாலிருந்து தாக்கினான். அந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத சுப்பு கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் எழுந்தான். சரக்கென்று தன் பையிலிருந்து கத்தியை உருவினான். அதற்குள் அன்வர் கொடுத்த உதையில் கத்தி கீழே விழுந்தது. எட்வர்ட், அன்வர் என இருவர் தன்னைக் குறி வைப்பதைக் கண்ட சுப்பு, அவர்களை விட்டு விட்டுப் பையுடன் கம்பி நீட்ட மெதுவாக நகர்ந்தான். உடனே எட்வர்ட் பையை நோக்கிப் பாய, அன்வர் சுப்புவின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

ரயில் நகரத் தொடங்க எட்வர்ட் பையை எடுத்து ரயிலின் ஜன்னலில் வைத்து

‘யாராச்சும் பிடிச்சுக்கோங்க!’  என்று கத்தினான்.

இந்தக் களேபரத்தைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மேரி உடனே அதனை உள்ளே இழுத்தாள்.

அன்வரிடம் உதை வாங்கிய சுப்பு கீழே விழுந்து, எழுந்து சுதாகரிப்பதற்குள் அன்வரும், எட்வர்டும் வண்டிக்குள் ஏறினர்.

ரயில் வேகமெடுத்தது.

கூட சபித்துக் கொண்டே ஓடி வந்த சுப்பு விரைவில் ஒரு புள்ளியாகி மறைந்தான்.



(தொடரும்)

No comments:

Post a Comment