Wednesday, March 16, 2016

தாம்பரம் டு பீச் - 1

ஒன்று   -        தாம்பரம்    

08 : 06


நசீர் வாப்பா காலியாகவிருந்த பெட்டியொன்றில் ஏறினார். அனேகமாக எல்லாப் பெட்டிகளும் காலியாகத்தான் இருந்தன. நடைபாதையில் தமது கைக்குட்டைகள் அடங்கிய கூடையை வைத்தார்.

மனசு பாரமாய் இருந்தது. இந்தக்கூடையைப் போல அதையும் இறக்கி வைக்க முடிந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று எண்ணியபடி அன்று காலை நடந்த சம்பவங்களை அசை போடலானார்.

மனைவி கதீஜா என்றைக்குமே அப்படிப் பேசியது கிடையாது.

‘மூணு பொண்ணுங்க வளர்ந்து நிக்கிறாங்க, இதுகளுக்கு ஒரு நிக்காஹ் பண்ணத் துப்பில்ல’

நசீர் வாப்பாவுக்குக் கடைசியாய்ச் சொன்ன வார்த்தைகள் அசரீரி போல திரும்பத் திரும்பக் காதில் ரீங்கரித்தன.

எல்லாம் வல்ல அல்லாஹ் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர். நிச்சயம் தன் வாழ்வில் ஒரு நாள் விமோசனம் பிறக்கும் என்று நிச்சயமாக நம்பினார். தொடர்வண்டியில் கைக்குட்டை விற்கும் தொழிலை நெடுநாட்களாகச் செய்து வந்தார். இதில் வரும் லாபத்தில் இரண்டு வேளை கஞ்சி என்பதே பெரும் பாடாக இருந்தது. மூன்று பெண்களுமே அரசாங்கப் பள்ளியில்தான் படித்தார்கள். அதுவும் பத்தாவது பரீட்சைக்குப் பின்னர் நின்று விட்டார்கள். இப்பொழுது பெரியவளுக்கு 23 வயது. மற்றவர்களுக்கு 2 வயது வித்தியாசம். கதீஜாவுக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணி வீட்டு வேலைகளை நன்கு கற்று வைத்திருந்தார்கள். ஆனால், இவை மட்டும் நிக்காஹ்விற்குப் போதாமல் இருந்தது.

கதீஜாவின் அக்கா வழியில் ஒரு பையன் இருப்பதாகத் தகவல் வந்திருந்தது. ஒரு துணிக்கடையில் வேலை பார்ப்பதாகவும் கல்யாணத்துக்கு எதுவும் எதிர்பார்க்க மாட்டார்களென்றும் கேள்வி. ஆனால், சாதாரண விஷயங்களுக்கே பல ஆயிரங்கள் தேவைப்பட்டது. 

யாரைக் கேட்பதென்றும் புரியவில்லை.

கதீஜாவிற்கு ஆதங்கம். கல்யாணம் கட்டின நாள் முதல் கஷ்டத்தையே அனுபவிச்சிருந்தாலும் ஒரு நாளும் கணவனை வைதவள் இல்லை.

இன்று பொறுக்க முடியாமல் கொட்டித் தீர்த்து விட்டாள்.

பிள்ளைகள் மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்து நிற்க, நசீர் வாப்பாவை ஒரு பிடி பிடித்து விட்டாள்.

இதை கேட்டு அந்த மனிதன் ஒன்றுமே சொல்லாமல் தன் பையை எடுத்துகொண்டு வெளியேறி ரொம்ப நேரம் கழித்துத்தான் தன் தவறை உணர்ந்தாள்.

பிள்ளைகள் அழுது கொண்டு இருந்தார்கள். அவர்களை வாப்பா ஒரு நாளும் வைதது கிடையாது. பணத்தால் முடியாததை பாசத்தால் ஈடுகட்டியிருந்தார். அவரை உம்மா இப்படித் திட்டியது அவர்களை மிகவும் பாதித்தது.

வீட்டில் எல்லோரும் சோக மயமாக இருந்தார்கள்.

ரயிலில் நசீர் வாப்பா கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ரயில் நகரத் தொடங்கியிருந்தது.



(தொடரும்)


No comments:

Post a Comment