Thursday, March 3, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 2

அத்தியாயம் - இரண்டு

அமைச்சர் பாலகிருஷ்ணன் செம டென்ஷனில் இருந்தார்.

பெரிய வீடு உருவத்தாலும், நோய் நொடிகளாலும் கைக்கடங்காமல் போனதால் கைக்கு அடக்கமா ஒரு சின்ன வீடு ஏற்பாடு பண்ணியிருந்தார்.

தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சின்னதா ஒரு ஃப்ளாட் வாங்கிக் கொடுத்திருந்தார்.

தினமும் ஒரு முறை சென்று மனதைச் சாந்திப் படுத்திக் கொண்டார்.

அதற்கு விலை சற்று அதிகமென்றாலும் தான் சார்ந்த துறை அமுதசுரபியாய்க் கை கொடுத்தது.

கேட்பதெல்லாம் கிடைத்ததால் சின்ன வீட்டில் அமைச்சருக்கு தடபுடலான விருந்து கிடைத்தது.

ஆசை ஆசையாய் பக் நாய்க்குட்டியொன்றை ரெண்டு நாட்களுக்கு முன்னர்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

யாரு கண் பட்டதோ அந்த நாயை (அப்படிச் சொல்லக் கூடாதாம், ஜூஜிலிபான்னு கூப்பிடனுமாம்னு அம்மணி உத்தரவு) மறு நாளே காணோம்.

பக்கத்தில நெருங்கவே வுடல்ல மகராசி.

‘போய்யா, போய் என் செல்லத்தோட வா சேத்துக்கறேன்!’

வெளியே தள்ளி கதவைப் படீர்னு அடிச்சிட்டா.

கடுப்பாகிப் போய் ஐ.ஜி காந்தனுக்கு ஃபோனைப் போட்டார்.

      ‘குட் மார்னிங் சார்’

‘பாட் மார்னிங். யோவ் இங்க எனக்கு அத்தியாவசிய சேவையே நடக்க மாட்டேன்னுது. உடனே ஒரு தனிப்படை அமைச்சு எல்லாத்தையும் சீர் பண்ணுய்யா. விபரம் குறிச்சுக்கோ’

முழு விவரமும் ஐ.ஜியிடம் வழங்கப் பட்டது.

ஐ.ஜி தன் பங்குக்கு டி.எஸ்.பி ராஜநாதனைப் பிடித்து உலுக்கி எடுத்தார்.

ராஜநாதன் தன் பங்குக்கு தன் படையில் உள்ள எஸ்.ஐ களையும் பி.சி களையும் ஒரு பிடி பிடித்தார்.

தனிக் குழுக்களாகப் பிரிந்து சிட்டியில் ஒவ்வொரு பகுதியாகத் தேடுவதாக முடிவானது.

அந்தக் குழுவில் ஒருவர்தான் நாம பார்க்கப் போற காவலர்.

அவரு பேரு…..அதெல்லாம் எதுக்குங்க, அவங்களுக்கெல்லாம் நம்பர்தான்.

என்னன்னு கேக்கிறீங்களா?

அதுதான் இந்தக் கதையின் தலைப்புங்க.

அவர ஏவி வுட்டவங்க யாரும் தெருவுல எறங்கி ஒண்ணும் பண்ண மாட்டாங்க.

ஐ.ஜி. சார் குடும்பத்தோட கோவிலுக்குக் கெளம்பிப் போய்ட்டாரு.

டி.எஸ்.பி.சாருக்கு கமிஷனர்கூட அவசர மீட்டிங்.

நம்ம ஹீரோ (?) காலங்காத்தாலயே வூட்டில இருந்து கெளம்பிப் போய்ட்டாரு.

இப்ப அவர் என்னதான் பண்றார்னு பார்ப்போம்.



(தொடரும்)

1 comment:

  1. பக் நாயை இல்லை இல்லை ஜுஜிலிபாவைத்தேடும் பணியா

    ReplyDelete