Sunday, March 6, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 7

அத்தியாயம் - ஏழு

செந்திகுமார் மயக்கத்தில் கிடந்தான். காலை முதல் சாப்பிட ஒன்றும் கிடைத்தபாடில்லை. சுமார் பல மணி நேரங்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே கிடந்தான். பசி மயக்கம் வேறு. தன்னுடைய நிலை என்னவென்று வீட்டு மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏன் யாருக்குமே தெரியாது. தன்னிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பணம் கிடைக்காவிட்டால் தன்னைக் கடத்தல்காரர்கள் கொன்றுவிடக் கூடும். பணம் கொடுத்தாலும் உயிருடன் விடுவார்கள் என்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. தன் மனைவியினதும் மகளினதும் முகம் ஒரு கணம் மனதில் வந்து சென்றது. இவன் இல்லாமல் ரெண்டு பேர் வாழ்க்கையுமே தடம் புரண்டு விடும். தன்னையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
காலடிகள் நெருங்கி வந்தன.
ஒரு புதுக்குரல் அவர்கள் இருவரையும் அதட்டுவது கேட்டது.
தனது கைக்கட்டுகள் பிரிக்கப்பட்டன. கண்கட்டும் அவிழ்க்கப்பட்டது.
இப்பொழுது அறையில் மங்கலான விளக்கு வெளிச்சம் இருந்தது.
புதிதாக வந்திருந்தவர் இவனிடம் பேசினார்.
      ‘பயப்படாத தம்பி, நான் போலீஸ். உன் பேர் என்னப்பா?’
தன்னைப்பற்றிய விபரங்களைக் கடகடவென்று கூறினான்.
கடத்தல்காரர்கள் இருவரும் தளர்ந்திருந்தார்கள். அவர்களிடம் தனது கேள்விகளைத் திருப்பினார்.
      ‘இந்த மாதிரி இன்னும் எத்தன பேரடா கடத்தினீங்க?’
‘இல்லையா, இதுதான் முத வாட்டி. சீக்கிரம் பணம் சம்பாதிக்க நெனைச்சு இந்த வழியத் தேர்வு பண்ணினோம்’
‘ஏன்டா, பணம் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழியிருக்கே, அது தெரியாதாடா உங்களுக்கு?’
‘இல்லங்கையா, அதுல ரொம்ப நாளாகும். பொறுமை இல்ல’
‘இப்ப பாத்தீங்களா, ஆள்கடதலுக்கு உள்ள போனா கொறஞ்சது 7 வருசமாகும்’
அவன் உடமைகள் அவனிடம் கொடுக்கப்பட்டன.
லாப்டாப், மொபைல் ஃபோன், பர்ஸ், தங்க மோதிரம், செயின், சாக்ஸ், ஷூ என்று சகலமும்.
அவர் அனுமதியுடன் முதல் வேலையாக வீட்டுக்கு ஒரு ஃபோன் போட்டான்.
கண்ணீருடன் பேசிய ரேவதியிடம் விபரம் சொல்லாமல் சாந்தப்படுத்தினான். குழந்தை ஸ்வஸ்தியிடமும் பேசி, அவளுக்குச் சாக்லேட் வாங்கி வருவதாகக் கூறி ஃபோனை அணைத்தான். ஆஃபீசுக்கு ஃபோன் போட்டு தன்னால் இன்று முக்கிய அலுவல் காரணமாக வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தான்.
எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தவர், மற்ற இருவருடனும் வெளியேறினார்.
அவன் பின் தொடர்ந்தான்.
அவர் அழைப்பின் பேரில் வந்திருந்த ஜீப் வெளியே காத்திருந்தது.
     

(தொடரும்)

No comments:

Post a Comment