Sunday, March 13, 2016

விக்கிரவாண்டி - 5

அத்தியாயம் - ஐந்து

       ‘பாட்டியம்மா, எங்க போறீங்க?’

நல்ல தூக்கத்தில் இருந்த பாட்டியம்மாக்குக் குரல் கேட்டு முழிப்பு வந்தது.

         ‘தஞ்சாவூர்ல என் பையன் வூட்டுக்கு’

‘என்ன தஞ்சாவூருக்கா, ஏறும்போது பார்த்து ஏற மாட்டீங்களா? இந்த வண்டி சென்னைக்கில்ல போகுது!’

பாட்டியம்மா பேந்தப் பேந்த முழிக்கலானார். பக்கத்தில் உள்ள பேரனை உலுக்கினாள். முகத்தைத் துண்டால் மூடியிருந்தவன் அதை விலக்கி இவரைப் பார்த்து என்ன என்பதுபோலப் பார்த்தான். ஐயோ! அது வேற யாரோ ஒருவன். பாட்டியம்மாக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது.

வண்டியில் ரெண்டு, மூன்று பேர் என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தார்கள். பாட்டியம்மாயைப் பார்த்துவிட்டு தங்களுக்குத் தோன்றியதைப் பேசிக் கொண்டார்கள்.

அந்தப் பேரூந்தின் ஓட்டுனருக்கு விபரம் புரிந்தது. பாவம் அம்மையார் வண்டி மாறி ஏறிட்டாங்கன்னு பரிதாபம் ஏற்பட்டது.

‘சரி பெரியம்மா, பதட்டப் படாதீங்க. கூட யாரு வந்தாங்க, அவங்களோட ஃபோனுக்கு பேசி தகவல் சொல்லிட்டாப் போச்சு’

பாட்டியம்மாவிடம் யார் தொலைபேசி எண்ணும் இருக்கவில்லை. எழுதப் படிக்கவும் தெரியாது. போவது தஞ்சாவூர் பக்கம் உள்ள ஒரு கிராமம், வருவது சென்னையில் வளசரவாக்கம் அருகில் என்று மட்டுமே தெரிந்தது. பயணச் சீட்டும் பேரனிடம் இருந்ததால் எந்த வண்டியில் பயணம் செய்தார்களென்றும் கண்டு பிடிக்க முடியவில்லை.

       ‘அந்த வண்டியில எதாச்சும் அடையாளம் இருந்துச்சாம்மா?’

பாட்டியம்மாக்கு இப்பொழுது கண்கள் ரெண்டும் குளமாகியிருந்தன.

‘முன்னாடி பெருசா முருகன் படம் வச்சிருந்துச்சு. மாலை போட்டு, ஊதுவத்தியெல்லாம் கொழுத்தியிருந்துச்சு’

‘அட, அது நம்ம கம்பேனி வண்டிதான். புடிச்சிரலாம். நீங்க அழாதீங்க’

முன்னாடி போய் ஓட்டுனருடன் என்னமோ பேசினார். திரும்பி வந்தார்.

‘அடுத்து திண்டிவனம் வருது. அங்க எங்க ஆபீஸ்ல எறங்கினா அவங்க வெவரம் கேட்டு உங்கள எப்படியும் அனுப்பி வுட்டுருவாங்க’

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் வண்டி திண்டிவனத்தை அடைந்தது. கீழே இறங்கி நேரக்காப்பாளரருடன் என்னமோ பேசினார். பின்னர் திரும்பி வந்தார்.

       ‘பெரியம்மா, மொள்ளமா வாங்க.’

கைபிடித்து அழைத்துச் சென்றார். நேரக்காப்பாளரிடம் சொல்லி விட்டு, மறுபக்கம் திரும்பி

       ‘நீங்க ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க. இவரு உங்கள பத்திரமா அனுப்பிருவாரு’

சொல்லிவிட்டு வண்டியில் ஏறிக் கதவை இழுத்து மூடினார். வண்டி கிளம்பியது.

பாட்டியம்மாக்கு அழுகையை அடக்க முடியவில்லை. முந்தானையால் வாயை மூடிக் கொண்டு கேவினார்.

நேரக்காப்பாளருக்குத் தன் தூக்கம் தடை பட்ட கோவம். அத்துடன் ஒரு பெரிய பொறுப்பைத் தலையில கட்டிட்டுப் போய்ட்டானேன்னு கடுப்பு வேறு.

       ‘இந்தாம்மா, முதல்ல இந்த ஒப்பாரிய நிறுத்து.’

பாட்டியம்மாக்கு அதிர்ச்சி. என்ன இந்தாளு இப்படிப் பேசுறாருன்னு நெனப்பு ஒரு பக்கம். பேராண்டி எங்கயிருக்கானோ என்ற பயம் ஒரு பக்கம். அப்படியே அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
விடியக்காலை 3 மணிக்கு யாருக்கு ஃபோன் போட்டு என்ன பண்ணுவதென்று நேரக்காப்பாளருக்கு ஒரே குழப்பம். தஞ்சாவூர் போற வண்டின்னா நம்ம மாணிக்கம் வண்டியாத்தான் இருக்கும். மாணிக்கம் மொபைலுக்கு ஒரு ஃபோனைப் போட்டார். சிறிது நேரம் பேசிவிட்டு அந்தம்மாவைப் பார்த்தார். மீண்டும் பேசினார். ஒரு பேனாவை எடுத்து எதையோ எழுத முயன்றார். வெறுமனே கிறுக்கினார். நன்றி சொல்லிவிட்டு லைனைக் கட் பண்ணினார்.

       ‘கூட வந்தவன் யாரு உன் பேரனா?

பாட்டியம்மா தன்னிடம் கேட்ட கேள்விக்குத் தலையை மேலும் கீழும் ஆட்டினார்.

       ‘அந்த வண்டிக்குத் தகவல் சொல்லியாச்சு. அவன் வந்திருவான். நீ பதட்டப்படாம இரு’

பாட்டியம்மாக்கு அந்த வார்த்தை காதில் தேன் பாய்ந்ததுபோல இருந்தது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

ஆனால் அங்கே நடந்தது என்ன?(தொடரும்) 

2 comments:

  1. கதை பஸ் வேகத்தில் போகிறது ( அல்லது ஜெட் வேகத்திலா) இதுவரை வந்த எல்லாபதிவுகளையும் படித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஐயா.

      Delete