Saturday, March 12, 2016

விக்கிரவாண்டி - 3

அத்தியாயம் - மூன்று

‘வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும், பாத்ரூம் போறவங்கெல்லாம் போய்ட்டு வந்துரலாம்’

திடீர் அறிவிப்பால் தூக்கம் கலைந்தது. சிலர் எழுந்து வெளியேறினார்கள். பேரன் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கம் கலைந்ததும் அடிவயிறு பாரமாக இருப்பதுபோலத் தோன்றியது. இல்லை சும்மா நம்ம நெனப்புதான் என்று பாட்டியம்மா எண்ணினார்.

ஐந்து நிமிஷம் கூட இருக்க முடியவில்லை.

மீண்டும் பேரனைப் பார்த்தார். அவன் தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினால் வீணாக வசவு வாங்க வேண்டிவரும்.

எல்லோரும் போனார்களே, அதில் பொம்பளைகளும் இருந்ததாக ஞாபகம்.

மெதுவாக எழுந்து வண்டியைவிட்டுக் கீழிறங்கினார்.

ஏகப்பட்ட வண்டிகள் நின்றன. எந்தப் பக்கம் போவது என்றும் தெரியல்ல.

அங்கே நின்று ஃபோன் பேசிக்கொண்டிருந்த ஒருவரிடம் கேட்க அவன் சைகையால் ஒரு திசையைக் காட்டினான்.

அங்கே மெதுவாகப் போனார். நெருங்க நெருங்கப் பாட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. அதைவிடச் சிறுநீர் வாடை வேறு.

ஆண், பெண் படங்கள் போட்ட ஒரு அறிவிப்புப் பலகை அம்புக்குறியுடன் தெரிந்தது. பெண்கள் படம் போட்ட திசைப்பக்கம் ரெண்டு பேர் போய்க்கொண்டு இருந்தார்கள். வாசலில் ஒருவன் உட்கார்ந்து இருந்தான். எப்படி இந்த நாத்தத்தில் இங்கே இருக்கான்னு தோணிச்சு. அவனைத் தாண்டுகையில் குரல் கொடுத்தான்.

       ‘ஏம்மா, பணம் குடுத்துட்டுப் போ’

       ‘பணம் இல்லையேப்பா’

       ‘அப்ப உள்ள போக முடியாது’

       ‘இதுக்கெல்லாம் பணம் எதுக்கப்பா?’

‘நல்லாக் கேட்ட போ, இதுல வர்ற வருமானத்த வச்சுத்தான் எங்க பொழப்பே நடக்குது பெரியம்மா’

‘பணம் என் பேரன் கிட்ட இருக்கு, அவன் தூங்கிட்டு இருக்கான்பா’

‘அப்ப முதல்ல அவனைப் போய் எழுப்பி 2 ரூவா வாங்கிட்டு வா’

என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தார். நல்லவேளை அங்கே வந்த ஒரு கல்லூரிப் பெண் பெரிய மனசு பண்ணிப் பாட்டியம்மாவுக்கும் சேர்த்துப் பணம் குடுத்தாள்.

உள்ளே போன பாட்டியம்மாவுக்கு ஏன் போனோமென்று ஆகி விட்டது. பணம் வாங்குவதோடு அவர்கள் வேலை முடிந்துவிடும் போலிருக்கிறது. உள்ளே அப்படி ஒரு துர்நாற்றம். தண்ணீர்தொட்டியில் ஒழுங்காக ஒரு பக்கெட்டுகூட கிடையாது. பழைய பெயின்டு டப்பாக்கள்தான் இருந்தன.அவையும் நெளிந்து போய், ஒழுகிக் கொண்டு…..

எப்படியோ வேலை முடிந்து வெளியே வந்தார்.

அப்பாடா என்று இருந்தது.

தூரத்தில் பஸ்கள் தெரிந்தன. அதை நோக்கிச் சிலர் செல்வது தெரிந்தது. அவர்கள் பின்னால் பாட்டியம்மாவும் போகத்தொடங்கினார்.

கழிவறை அனுபவம் அவரைக் கதிகலங்க வைத்திருந்தது. எதுலுமே சுத்தம் எதிர்பார்க்கும் அவருக்கு அது மிக மோசமான அனுபவமாக இருந்தது.

ஒரு வழியாக பஸ்கள் நின்ற இடத்துக்கு வந்தார்.

அவர்கள் வந்த வண்டி எதுவென்று சற்றே குழப்பம்.

முன்னாடி முருகன் படம் இருந்ததாக ஞாபகம். அப்படியொரு வண்டி கண்ணில் பட்டது.

உள்ளே ஏறினார்.

அனேகமாக எல்லாரும் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்கள்.

தனது இருக்கையில் அமர்ந்தார். பக்கத்தில் பேரன் இன்னும் தூங்கிக் கொண்டுதானிருந்தான்.

இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடினார்.


(தொடரும்)




No comments:

Post a Comment