Saturday, March 5, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 5

அத்தியாயம் - ஐந்து


ஆட்டோ மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. உள்ளேயிருந்து பார்க்க அவர்கள் இருவரும் பைக்கில் செல்வது தெரிந்தது. ஆட்டோக்காரருக்குப் பயணி யாரென்று தெரிந்ததால் அமைதியாக ஓட்டிக்கொண்டிருந்தார்.

சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் ஒரு குறுக்குச் சந்தினுள் நுழைந்தார்கள். அங்கே ஒரு வீட்டின் முன் நிறுத்தினார்கள். கதவைத் தட்டுவது தெரிந்தது. கதவு திறந்து இருவரும் உள்ளே சென்றார்கள்.

இவர் ஆட்டோவிலிருந்து இறங்கினார். சற்று நேரம் இருக்கச் சொல்லி சைகை காட்டி விட்டு மெதுவாக அந்த வீட்டை நெருங்கினார்.

கதவைத் தட்டாமல் தள்ளிப் பார்த்தார்.

திறந்து கொண்டது.

உள்ளே போய் மெதுவாக முதலில் தென்பட்ட அறைக் கதவை அடைந்தார்.

கதவு உள்தாள்ப்பாள் போடப்பட்டிருந்தது.

கிசு கிசுப்பான குரல்கள் கேட்டன.

கதவில் காதை வைத்து உள்ளே நடப்பதைக் கேட்டார்.

        ‘ஏய், நான் உன் நினைவாகவே இருக்கேன்டி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுடி’

‘பொய் சொல்லாதய்யா, வீட்டுல யாரும் இல்லாத நேரமாப் பாத்து வரவேண்டியது. சின்னதா சில்மிஷம் பண்ணிட்டு ஓடிர வேண்டியது. என் மனசு கெடந்து அடிச்சுக்கிறது ஒனக்கு எங்கய்யா புரியும்’

‘கோச்சுக்காத புள்ள, சீக்கிரமா வாழ்க்கையில செட்டில் ஆகிடலாமின்னு ஒரு நம்பிக்கை வந்திருச்சு. சீக்கிரமே நம்ம கல்யாணம்தான்’

இரண்டு பேர் வந்தார்களே என்று அடுத்தவனைத் தேடி பக்கத்து அறைக்குக் கவனத்தைத் திசை திருப்பினார்.

அந்த அறை அருகே இருந்த கழிவறையிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது.

வெளியே கத்திருந்தார்.

தண்ணீர் சத்தம் கேட்டது.

கதவு திறந்து வெளியே வந்தவன் கன்னத்தில் இடியொன்று இறங்கியது.

அவன் அடிவாங்கி அலறினான்.

அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த முதலாமவனுக்கும் பேயறை விழுந்தது. அவன் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது. அவன் காதலி அலறினாள்.

வந்திருப்பவர் யாரென்று பூட்சும் காக்கி பேன்ட்டும் காட்டிக் கொடுத்தன.

அடி வாங்கிய இருவரும் கதிகலங்கிப் போயிருந்தார்கள்.

அந்த அறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

கடத்தல் பற்றிய சகலவிதமான விபரங்களும் வெளியே கசிந்தன.

‘டேய், நீங்க ரெண்டு பேரும் இப்ப என் கூட வர்றீங்க. அங்க வந்து கட்டி வச்சிருக்கவன விடுவிக்கிறீங்க. அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுக்கிறீங்க. மவனே ஏதாச்சும் தப்பாட்டம் ஆட முயற்சி பண்ணினீங்க, இந்தப் பொண்ண பிராத்தல் கேசுல உள்ள போட்டுருவேன்’

அந்தப் பெண் அவனைத் திட்டியது. தன் தலைவிதியை நொந்து கொண்டது.

மீண்டும் பெருங்குரலெடுத்து அழுதது.

ஆட்டோக்காரர் ஆட்டோவிலேறிய மூன்று பேரையும் வினோதமாகப் பார்த்தார்.

ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டிக் கொண்டு வண்டியை உயிர்ப்பித்தார்.

வண்டி வந்த வழியே ஓடத் தொடங்கியது.



(தொடரும்)

1 comment: