Sunday, March 13, 2016

விக்கிரவாண்டி - 4

அத்தியாயம் - நான்கு

டீ குடித்து, தம்மடித்து முடித்து ஓட்டுனர் உள்ளே ஏறினார்.

கூடவே கீழே நின்றிருந்த சில பேரும் ஏறினார்கள்.

வண்டியை எடுக்கும் முன் நடத்துனர் ஆள் கணக்கு பார்ப்பது வழக்கம்.

இன்று பயணியொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது.

‘ஏன்யா இந்த மாதிரி மட்டமான எடத்தில வண்டிய நிறுத்துறீங்க. உங்களுக்கு ஓசியில எல்லாம் சப்ளைங்கறதனால ஏன்யா எங்க உயிர எடுக்கிறீங்க?’

‘யாரு ஓசியில தின்னுறது, எல்லாம் எங்க நிர்வாகம் சொல்ற எடுத்துலதான் நிறுத்துறோம். அதில்லாம சாப்பிடுற சாப்பாட்டுக்குப் பணம் குடுக்காமச் சாப்பிட நான் ஒண்ணும் எச்சக்கலைங்க இல்ல’

‘சும்மா நிர்வாகம்னு பழியத் தூக்கி அங்க போடாதீங்க, வண்டியில போறவங்க பண்ற தகிடுதத்தோம் எங்களுக்கும் தெரியும்’

‘என்ன சார் ஓவராப் பேசுறீங்க, நாங்களும் கௌரவமான தொழில் பண்ணிறவங்கதான்’
‘ஆமா, பெரிய கௌரவமான தொழில், மை ஃபுட்’

நடத்துனர் இளவயதுக்காரர், வேகம் அதிகம். ஆனால், ஓட்டுனர் பழுத்த அனுபவஸ்தர். இந்தமாதிரியான சந்தர்ப்பங்கள் பலவற்றைக் கடந்தவர். வாக்குவாதம் செய்வதால் யாருக்கும் லாபமில்லை என்பதை நன்கு உணர்ந்தவர். இந்தப் பயணம் முடிந்தவுடன் அனைத்து வார்த்தைகளும் காற்றில் கரைந்துவிடும் என்று அவருக்குத் தெரியும்.

‘தம்பி விடுப்பா, சார் நீங்க உள்ள போங்க. நேரமாகுதில்ல. அப்புறம் போய்ச் சேர லேட்டாச்சுன்னு என்ன வையப் படாது சொல்லிப்புட்டேன்’

எல்லோரும் வாயை மூடிக் கொண்டு உள்ளே ஏறி அமர்ந்தார்கள்.

நடத்துனர் கடுப்புடன் வண்டியைப் பின்னாலும், மீண்டும் முன்னாலும் எடுக்க விசில் கொடுத்தார். கடைசியாக போலாம் ரைட்ஸ் என்று கதவை மூடினார். தன் இருக்கையில் அமர்ந்தார்.

வண்டி கிளம்பியது.

பயணிகள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

பாட்டியம்மாவின் முன்னால் இருந்த. போர்வை கொடுத்த ஆசிரியப் பெண்மணியும் நல்ல உறக்கத்தில் இருந்தார். லீவுக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அருகில் தனது தங்கை பெண். வலுக்கட்டாயமாகப் பெரியம்மாவுடன் அழுது, அடம்பிடித்துத் தானும் உடன் கிளம்பிய பத்து வயதுக் குழந்தை. தூக்கத்தில் எதையோ முனக, அந்த நேரம் பார்த்து வண்டியும் சற்று வேகம் பிடிக்கத் தூக்கம் சற்றே கலைந்த நிலையில் பார்வை எதேச்சையாகப் பின்னாலுள்ள இருக்கையில் விழுந்தது. அதில் தான் கொடுத்த சால்வை மட்டுமே இருந்தது. பாட்டியம்மாவைக் காணோம். ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு சொல்ல மெல்ல எழுந்து நன்றாகப் பார்த்தார். உண்மையிலேயே பாட்டியம்மாவைக் காணோம்!

தட தடவென்று உள்பக்கமிருந்து யாரோ கதவைத் தட்டினார்கள்.

நடத்துனர் கதவைத் திறக்க அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான்.

       ‘என்னப்பா, யூரின் ஏதும் போகணுமா? அதான் அரைமணி நேரம் முன்னாடி நிறுத்தினமே’

அவன் கடுப்பாகிக் கத்தினான்.

       ‘யோவ், கூட வந்த என் ஆயாவக் காணோமய்யா’

நடத்துனரும் சூடானார்.

       ‘கூட வந்தா நீயில்ல பத்திரமாப் பாத்துக்கணும்’

தூக்கம் கலைந்த கடுப்பும், பாட்டியம்மா காணாமல் போன தவிப்பும் சேர்ந்து அவன் இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் சூடானான்.

‘வண்டியில ஏறுனவுங்க இடையில எறங்குறாங்களான்னுகூடப் பார்க்காம அப்புடி என்னய்யா புடிங்கிட்டிருந்தீங்க?’

ரெண்டடி முன்னால் பாய்ந்த ஓட்டுனர் அவன் சட்டையைக் கொத்தாய்ப் பிடித்தார்.

நல்ல வேளை, முன்னால் இருந்த இரண்டு பேர் இடையில் பூந்து அடிதடி இடம்பெறாமல் தடுத்தார்கள்.

வண்டி ஓரமாக நிறுத்தப்பட்டது.

அந்த ஊர் சேத்தியாத்தோப்பு.(தொடரும்)

No comments:

Post a Comment