Thursday, March 10, 2016

விக்கிரவாண்டி - 1

அத்தியாயம் - ஒன்று


கோயம்பேடு தனியார் பேரூந்து நிலையம்.

தஞ்சாவூர் செல்லும் அரை சொகுசுப் பேரூந்து வரும்வரை பயணிகள் காத்திருந்தனர்.

இரவு 10 மணிக்குப் புறப்பட வேண்டிய வண்டி இன்னும் வந்தபாடில்லை.

கலக்கமுற்ற சிலர் நேரக்காப்பாளரைக் குடைந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவரும் இந்தா வருது அந்தா வருதென்று சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு வழியாக வண்டி வரவும் பயணிகள் முகத்தில் ஒரு நிம்மதி.

முன்பதிவு செய்திருந்தாலும் எல்லோரும் அடித்துப் பிடித்து ஏறினார்கள். ஒருத்தரை ஒருத்தர் திட்டிக் கொண்டார்கள். தத்தமது இருக்கையைக் கண்டுபிடித்து லக்கேஜை அதற்குரிய ரேக்கிலே வைத்துவிட்டு இருக்கையில் செட்டில் ஆனார்கள்.

நடத்துனர் வண்டிக்குள் சென்று நன்கு பார்த்துவிட்டு இருக்கைகளை எண்ணத் தொடங்கினார்.

‘கண்டெக்டர், இங்க ஜன்னல திறக்க முடியல்ல’

‘கண்டெக்டர் சீட்ட மடக்க முடிய மாட்டேன்னுது’

‘கண்டெக்டர் இந்தப்பைய கொஞ்சம் முன்னால உள்ள ரேக்கில வையுங்க’

பயணிகளின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பித்து வெளியே இறங்கி வந்தார்.

       ‘என்னப்பா, எல்லாரும் வந்தாச்சா?’ இது ஓட்டுனர்.

‘இல்லண்ணே, பெருங்களத்தூர்ல நாலு பேரு ஏறுவாங்க. இங்க இன்னும் ரெண்டு டிக்கெட் குறையுது’

‘இன்னும் பத்து நிமிஷம் பார்ப்போமா?’

‘ஆமாங்கண்ணே, நான் போய் டைம் கீப்பரைப் பாத்திட்டு வந்திர்றேன்’

வண்டி கிளம்பாததால் மீண்டும் பயணிகள் கலவரமானார்கள். தங்களுக்குள் முணு முணுத்தார்கள்.

ஒருவர் கீழே இறங்கி வந்து நடத்துனரைத் தேடினார். சிக்கிய ஓட்டுனரை ஒரு பிடி பிடித்தார்.

‘என்னய்யா நடக்குது இங்க? வந்ததே லேட்டு, இந்த லட்சணத்தில கெளம்புனா எத்தன மணிக்குப் போய்ச் சேர்றது. எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு”

கோவத்தைவிடத் தன்னுடைய பிஸி ஷெடியூளை மற்றவர்க்குத் தெரியப்படுத்தும் ஆர்வம் அந்த பேச்சில் தெரிந்தது.

நடத்துனர் வந்தார்.

        ‘சார், ரெண்டு பேர் வரணும் சார். தயவு பண்ணிக் கொஞ்சம் பொறுத்துக்கோங்க சார்’

கண்டவன் கிட்டெல்லாம் சாரி கேட்கவேண்டிய தனது நிலமையைத் தானே நொந்து கொண்டார்.

10 நிமிஷம் கடந்தது.

        ‘ஏம்பா, பாசஞ்சருக்குப் ஃபோனப் போட்டுப் பாரு.நேரமாகுதில்ல’

        ‘ஃபோன எடுக்க மாட்டேன்கிறாய்ங்கண்ணே’

        ‘இனியும் பார்க்க முடியாது, கெளம்ப வேண்டியதுதான்’

ஓட்டுனர் வண்டியை எடுத்தார்.

மெயின் ரோடு தொட்டுத் திரும்புகையில் ஒரு ஆட்டோ குறுக்கே புகுந்து மறித்தது.

ஓட்டுனர் போட்ட பிரேக்கில் பஸ்ஸில் நின்று கொண்டிருந்த இருவர் கீழே விழுந்தார்கள். ஒரு குழந்தை தலையை முட்டி கொண்டு வீலென்று கத்தியது. எல்லோரும் அவரைச் சபித்தார்கள். 

அவர் ஆட்டோகாரனைக் கெட்ட வார்த்தையால் திட்டினார்.

ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் கையைக் காட்டிக்கொண்டு ஓடி வந்தான்.

கீழே இறங்கிய நடத்துனர் ஓடி வந்த இளைஞனைத் திட்டினார்.

       ‘சாரிங்க, லேட்டாயிடிச்சு அதான் ஆட்டோவக் குறுக்க வுட்டோம்’

திரும்பவும் ஓடிச் சென்று ஆட்டோவிற்குள் தலையை விட்டான்.

ஒரு வயதான அம்மையார் இறங்கினார்.

அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பியது.(தொடரும்)

No comments:

Post a Comment