Saturday, March 12, 2016

விக்கிரவாண்டி - 2

அத்தியாயம் - இரண்டு

அந்தப் பையன் வினோத் பைகளை மேலே வைத்தான். காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டான். ஃபிகர் ஏதும் தேறுதான்னு சுற்றுமுற்றும் பார்த்தான், ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

பாவம், அந்தப் பாட்டியம்மாவை அருகில் உட்காரக்கூடச் சொல்லவில்லை.

அவராகவே உட்கார்ந்தார். கையிலேயே கொண்டு வந்திருந்த மஞ்சப் பையைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ரெண்டு மடக்குக் குடித்தார்.

அருகில் இருந்தவர் சீட்டை சாய்க்க உதவினார்.

சீட்டில் சாய்ந்து நெடு நேரம் விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அருகில் இருந்த அவங்க பேரனுக்கு ஒரு ஃபோன் வந்தது.

       ‘ஆங், கேக்குது. சும்மா கத்தாத’

       ‘*****’

       ‘எனக்குத் தெரியாதா, அதான் அத்தன வாட்டி சொல்லியனுப்பிச்சியே’

       ‘******’

       ‘’அது பாட்டுக்கு உட்கார்ந்து இருக்கு, எதும் தேவப்பட்டா கேட்குமில்ல’

       ‘******’

      ‘சும்மாத் தொண தொணன்னு சொன்னதையே சொல்லிட்டிருக்காத, என்ன பண்ணனும்னு           எனக்குத் தெரியும்’

      ‘******
    
    ‘சரி சரி ஃபோன வை, எனக்குத் தூக்கம் வருது’

பேசியது அந்த அம்மையாரின் மகள். அவள் பையனுடன்தான் ஊருக்குப் பயணமானார். அவனுக்கு இந்தப் பொறுப்பைத் தன் தலையில் கட்டி விட்டர்களேயென்ற கடுப்பு. பெண் வீட்டுக்கு வந்து சில காலம் இருந்து விட்டுத் திரும்பியும் ஊருக்குப் பையன் வீட்டுக்குப் போகும் சோகம் அந்தம்மாவுக்கு.

அவர் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டா நம்மேலயும் எரிஞ்சு விழுவான்னுட்டு அமைதியாகக் கண்ணை மூடினார்.

வண்டி குலுங்கிக் குலுங்கி சென்று கொண்டிருந்தது. முன்னால் தொலைக்காட்சியில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருந்தது.

குளிசாதன வண்டி அம்மாவுக்கு ஒத்துக்காதென்று சாதா வண்டியில் டிக்கெட் போட்டிருந்தார்கள். ஆனால், எல்லோரும் ஜன்னலைத் திறந்து வைத்திருந்ததனால் மார்கழி மாசக் குளிர்க்காற்று அடித்தது.

குளிரில் பாட்டியம்மாவுக்கு நடுக்கம் எடுத்தது. மெல்லிய புடவை முந்தானையை இழுத்துப் போர்த்தியும் பயனில்லை. பேரன் வேற காதில எதையோ மாட்டிக்கிட்டு கண்ண மூடிட்டுக் கெடக்கிறான்.

அருகில் இருந்த இன்னொரு அம்மையார் பாவப்பட்டுத் தன்னிடமிருந்த எக்ஸ்ட்ரா சால்வையைக் கொடுத்தார். வாங்கத் தயக்கம். கண்களால் அந்தம்மா மன்றாட வேறு வழியில்லாமல் வாங்கிப் போர்த்திக் கொண்டார்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது வெறும் காப்பித்தண்ணி மட்டும் குடிச்சிட்டு வந்தது. இப்ப பசியுணர்வு கொஞ்சமாக எட்டிப் பார்த்தது. தண்ணியைக் குடித்து பசியை அடக்கப் பார்த்தார். எப்பொழுதுமே பயணத்தின்போது எதுவும் சாப்பிடப் பயம். எங்கே வழியில் வெளிக்குப் போக வந்தால் சங்கடம் ஆகிவிடும் என்று எண்ணியே பல மணி நேரங்கள் பசியுடன் பயணித்த அனுபவங்கள் உண்டு.

கண்ணை மூடினார். தூக்கம் வருவேனாவென்று அடம் பண்ணியது. வயசானாலே சாப்பாடும், தூக்கமும் குறைஞ்சு போயிடுது.

வண்டியின் ஆட்டத்தில் தூங்கிப் போனார்.



(தொடரும்)

No comments:

Post a Comment