Sunday, March 6, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 6

அத்தியாயம் - ஆறு

வெளியே ஓடிய ஈஸ்வரன் அங்கே கண்ட காட்சி அவரை மீண்டும் சிரிக்க வைத்தது.

கூடவே வெளியே வந்த மீனாட்சியும் ரேவதியும் கூட சிரித்து விட்டார்கள்.

ஸ்வஸ்திகா அந்தக்குட்டி நாயுடன் ஒரு மேடைமீது பெரிய மனுசி போல அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி அவள் நட்பு வட்டம் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்தபடியே இருந்தது. கையால் சைகை செய்தபடி அவள் ஏதோ ராக்கெட் விஞ்ஞானி மாதிரி பெரிய பில்ட் அப் கொடுத்துக்கிட்டிருந்தாள்.

      ‘அம்மா ஸ்வஸ்தி, வாம்மா வீட்டுக்கு’

      ‘இல்லம்மா, நான் என் ஃப்ரெண்ஸ்கூட பேசிட்டு வரேன்மா’

‘இல்லடா செல்லம், எந்திருச்சு பல்கூட தேய்க்கல. பல் தேய்ச்சு, டிபன் சாப்பிட்டுட்டு அப்புறமா வரலாம்மா’

ஒரு வழியாக நட்பு வட்டத்தை வழியனுப்பி விட்டுக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

குழந்தைக்கு அம்மாவும், பாட்டியும் மாறி மாறிச் சேவகம் செய்தார்கள். தாத்தா டிபனை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு பொருள் வாங்கக் கடைக்குக் கிளம்பினார்.

அந்த நாய் இது எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.

இந்தக் களேபரத்தில் அந்த வீட்டிலுள்ள இன்னுமொரு முக்கியமான நபரை சற்று மறந்துதான் போனார்கள்.

அவன்தான் ஸ்வஸ்தி குட்டியின் அப்பா செந்தில்குமார். முன்னணி மின்னணுவியல் நிறுவனத்தில் பொறியாளன். காலையிலேயே வேலை விஷயமாகச் சென்றிருந்தான்.

குழந்தைமேல் உயிரையே வைத்திருந்தான்.

காலையில் அவள் எழும் வேளையில் வழக்கமாக தொலைபேசியில் அழைப்பது வழக்கம். இன்று அவன் அழைக்கவில்லை. வேலையாய் இருப்பான் என்று ரேவதியும் விட்டு விட்டாள். குழந்தையும் புது நண்பன் கிடைத்ததால் மற்ற நாட்களைப்போல அப்பாவைப் பற்றிக் கேட்டுத் தொந்தரவு பண்ணவில்லை.

மதியம் காமாட்சிதான் கேட்டாள்.

      ‘ஏன்டி இவளே, உங்க வூட்டுக்காரர் ஃபோன் பேசலையாடி?’

வேலையாய் இருந்த ரேவதிக்கு அப்பதான் அவன் நினைவே வந்தது. மகளின் அபிலாஷைகளை எடுத்துச் சொல்லும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

‘வேலையா இருப்பாங்கம்மா. இந்தா இப்ப எடுத்து அவர் பொண்ணு பண்ணிய காரியத்த சொல்லிடுறேன்’

ஃபோன் போட்டாள்.

பலமுறை ரிங் போய் கட்டானது.

மீண்டும் முயற்சித்தாள்.

அதே கதை.

10 நிமிஷம் கழிந்து மறுபடியும் முயற்சித்தாள்.

ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

கலவரமானாள்.

லாண்ட் லைனுக்குப் போட்டாள்.

அன்று அவன் வேலைக்கே வரவில்லையென்று தகவல் தரப்பட்டது.

ஓவென்று பெருங்குரல் எடுத்து அழலானாள்.



(தொடரும்)

No comments:

Post a Comment