Saturday, March 19, 2016

தாம்பரம் டு பீச் - 3

                                                                                                                          
மூன்று            குரோம்பேட்டை    

08 : 13

ரயிலில் இப்பொழுது சற்றுக் கூட்டம் இருந்தது.

ரயில் நகரும் நேரம் ஓடி வந்து ஏறிக்கொண்டாள் சிந்துஜா.

பின்னாலேயே எட்வர்ட்.

இவளுக்கு வெறுப்பாக இருந்தது.

‘இன்னைக்குன்னு பார்த்து லேட்டாச்சு. லேடீஸ் பெட்டியில ஏறி இவன் கிட்டருந்து தப்பிக்கலாம்னு நினைச்சது நடக்கல்லியே…’

நல்லவேளை ஒரு சீட்டில் குழந்தைகளுடன் ஒரு பெண் இருப்பது தெரிந்தது. அருகில் நகர்ந்து அவளிடம் அனுமதி பெற்று இருக்கையைத் தனதாக்கினாள்.

காதில் இயர் ஃபோனை சொருகி, கண் மூடி, எஃப் எம் ரேடியோ கேட்கத் தொடங்கினாள்.

அவள் கண்ணில் படும் தூரத்தில் எட்வர்ட் நின்று கொண்டான்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. ரெண்டு பேரும் ஒரே கம்பேனியில வேலை. காமன் கணை எப்படியோ தாக்கி ரெண்டு பேருக்கும் லவ்வோ லவ்வு.

இதற்கிடையில் சிந்துஜாவின் பிறந்தநாள் வந்தது. அன்று விடுமுறை நாள் வேறு.

வந்து வாழ்த்துச் சொல்லுவான் என்று ஆவலாய்க் காத்திருந்தாள்.

மதியம் ஆகியும் அவன் வரவில்லை.

ஃபோன் பண்ணியபோது அது அணத்து வைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் முதல் அவனை அலட்சியப் படுத்தினாள்.

அது அவன் நிலைமை புரியாத முன்கோவம் என்பது அவளுக்குப் புரியவில்லை. புரியவைக்க அவன் முயன்ற போதும் அவள் விடவில்லை.

முதல் நாள் இரவு அவள் பிறந்தநாளுக்குப் பரிசு வாங்க வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான். எதிர் வீட்டு அக்கா பெருங்குரலெடுத்து அழுத குரல் கேட்டது. என்னமோ ஏதோவென்று ஓடிப் போய்ப் பார்த்தான். அவள் குழந்தை மூச்சுப்பேச்சின்றிக் கிடந்தது. அவள் கணவன் போதையில் மட்டையாகியிருந்தான். மேலே எதுவும் யோசிக்காது குழந்தையை வாரியெடுத்தான். ஒரே ஓட்டமாகத் தெருவில் இறங்கி ஓடினான், கூடவே குழந்தையின் தாய். எதிரில் வந்த ஆட்டோவில் ஏறி நேரே தர்மாஸ்பத்திரிக்குப் போகும்படிப் பணித்தான்.

அன்றிரவு நெடு நேரம் வரை கூடவே இருக்க வேண்டியதாயிற்று. இந்தக் களேபரத்தில் அவன் ஃபோன் கீழே விழுந்து விட்டிருந்தது.

மறுநாள் மதியம்தான் அறைக்குத் திரும்ப முடிந்தது. குழந்தை உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது. தாய் அங்கேயே தங்கிவிட இவன் விடை பெற்றுக்கொண்டான்.

அதிர்ஷ்டவசமாகக் கீழே கிடந்த இவனது ஃபோனை கண்டெடுத்த யாரோ முனைக்கடையில் கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள். அதிலும் தூரதிர்ஷ்டம் சிம்கார்ட் பணாலாகியிருந்தது.

முதல் வேலையாகக் குளித்து விட்டு சிம்மை மீட்கும் வேலையாகச் சென்றான். நீண்ட அலைக்கழிப்புக்குப் பின் மாலைதான் திரும்ப முடிந்தது.

இந்தக் களேபரத்தில் பிறந்தநாள் முடிந்து போயிருந்தது.


(தொடரும்)


2 comments:

  1. /இவன் கிட்டருந்து தப்பிக்கலாம்னு நினைச்சது நடக்கல்லியே…’/வந்து வாழ்த்துச் சொல்லுவான் என்று ஆவலாய்க் காத்திருந்தாள்./ முரணாக இல்லையா?

    ReplyDelete
  2. முன்னையது நிகழ்காலம், பின்னையது நிகழ்ந்த காலம்.

    ReplyDelete