Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 10

அத்தியாயம் - பத்து

இந்த ஆபரேஷனுக்குத் தலைமை தாங்குமாறு கமிஷனர் கொடுத்த விண்ணப்பத்தை அரைமனதுடன் ஏற்றிருந்த முருகானந்தம் டிரைவர் திடீரென்று போட்ட ப்ரேக்கில் தலையை முட்டிக் கொண்டார். என்னவென்று பார்த்தால் யாரோ ஒருவன் குடிச்சிட்டு பைக்கக் கொண்டுவந்து இடிச்சிருந்தான்.

      ‘துத்தேறி நாயே!’

அவர் இறங்கி வருவதற்குள் டிரைவர் இறங்கி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.

அறை வாங்கியவன் நல்ல வாட்டசாட்டமான உடம்புடன் காணப்பட்டான். தான் வந்த வண்டியை விட்டு விட்டு அந்த இடத்திலிருந்து நகர்வதிலேயே குறியாய் இருந்தான். கையில் ஒரு பெரிய பை வேறு.

      ‘டேய், இங்க வாடா. குடிச்சிருக்கியா?’

முருகானந்தம் அவனைக் கேட்டார். அவன் அருகில் நெருங்குவதுபோல பாசாங்கு பண்ணி அவரைக் கீழே தள்ளி விட்டு ஓடத்தொடங்கினான்.

கால் தடுக்கிக் கீழே விழுந்தான். திமிறிய அவனை டிரைவர் மடக்கிப் பிடித்தான். முருகானந்தம் துப்பாக்கியை எடுத்து அவன் வாயில் வைத்ததும் அடங்கினான்.

பையைப் பிரித்துப் பார்த்தால் பணக்கட்டுக்கள் தெரிந்தன. ரெண்டு தட்டுத் தட்டியதில் தன் பெயர் சம்பத் என்றும் புகழ் மரணம் பற்றியும் சொன்னான். அவன் கொடுத்த தகவல்படி புகழின் உடல் கைப்பற்றப்பட்டு மார்ச்சரிக்கு அனுப்பப்பட்டது. பணப்பட்டுவாடா தகறாரில் தலைமறைவான சுந்தரும் கைது செய்யப்பட்டான்.

காவல்துறை தம் கடமையைச் செய்யச் செய்யத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. புகழ் எனும் நிழலுலக மனிதனும் அவன் சம்பந்தப்பட்ட சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

மறுநாள் இந்தக் கேஸின் முக்கிய புள்ளியை வளைக்க வேண்டியிருக்குமென முருகானந்தன் கமிஷனரிடம் பேசி அவர் சம்மதத்தைப் பெற்றுவிட்டு வெளியே வரும்போது யாரோ ஒருவர் ரொம்ப நேரமாகக் காத்திருப்பதாக டிரைவர் சொன்னான்.

விவேகானந்தன் ரொம்பவும் பயந்திருந்தான். முருகானந்தத்திடம் தனக்குத் தெரிந்த சகலத்தையும் சொன்னான்.

இடியாப்பச்சிக்கல் போல தோன்றிய விடயங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று அவர் எண்ணியிருக்கவில்லை.

அவன் தொடர்பான தகவல்களை வாங்கிக் கொண்டு, அவசியப் பட்டால் கொஞ்சம் ஸ்டேஷன் பக்கம் வர வேண்டியிருக்கும் என்று சொல்லி விவேக்கை அனுப்பி வைத்தார். 

வீட்டுக்கு வர நடுநிசியாகியிருந்தது. மெதுவாகக் கதவை மாற்று சாவியால் துறந்து உள்ளே நுழைந்தார்.

படுக்குமுன் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தார்.

16 வயது பவித்ராவும், 11 வயது தீபக்கும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



(தொடரும்)

No comments:

Post a Comment