Monday, February 22, 2016

அப்பா வருவாரா? - 2

அத்தியாயம் - இரண்டு

இவன் மகாதேவன், டீம் லீட், இன்ஃபொடெக் சொல்யூஷன்ஸ்

ஆச்சு. எல்லாம் முடிந்து போச்சு.

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துச் சேர்ந்த மகாதேவனும் மாளவிகாவும் சட்டரீதியாகப் பிரித்து வைக்கப்பட்டார்கள்.

கண்ணிமைக்காமல் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட வைத்த தன் காதல் மனைவி இப்பொழுது கட்டெறும்பாகத் தெரிந்தாள்.

எப்படி வாழ்க்கை இப்படி மாறிப்போனது?

அதுக்கு நீங்க ஷங்கரப் பத்தித் தெரிஞ்சிக்கணும்.

ஷங்கர், மகாதேவனின் உறவுப்பையன், சென்னையில் அவனுக்குக் காலூன்ற உதவுனதே இந்த மகாதேவன்தான்.

அப்பொழுது தெரியாது தன்னோட மணவாழ்க்கைக்கு இவனே எமனாவான்னு.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு.

ஜெர்மனியில் ஒரு மாதம் தங்கி முக்கியமான புரோஜெக்டை முடிக்க நிர்வாகம் இவனைத் தேர்ந்தெடுத்தபோது இவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.

மாளவிகாவையும் குழந்தை வஷிஷ்டையும் ஒரு மாதம் பிரிவது கவலை தந்தாலும் தொழில் ரீதியாகப் பல படிகள் முன்னேறும் வாய்ப்பு அவனை இந்த சவாலை ஏற்க வைத்தது.

மாளவிகாவின் அலுவலகத்தில் தினமும் அவளை விட்டபின்தான் இவன் அலுவலகம் செல்வது வழக்கம்.

அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என யோசிக்கையில்தான் இந்த ஷங்கரின் உதவியை நாடலாமேயென இவனுக்குத் தோன்றியது.

மாளவிகா அதற்கு முதலில் மறுத்தாள். தன் நண்பியுடன் ஸ்கூட்டியில் செல்வதாக எவ்வளவோ சொன்னாள். இவன் கேட்டுத் தொலைச்சிருக்கலாம்.

ஒரு மாதம் கழித்து வந்தபோது ஃபேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,வைபர் என எல்லா ரூபத்திலும் ஷங்கர் இவள் வாழ்வில் ஊடுருவியிருந்தது தெரிந்தது.

அதை விடப் பூதாகரமான பிரச்சினை இரண்டு நாளில் கிளம்பியது.

குழந்தை பள்ளிக்குப் போனதும் என்றும்போல மனைவியைக் கொஞ்ச முயல, வந்த நாள் முதல் முகம் கொடுத்துப் பேசாதவள் வெடித்தாள்.

‘என் மேல கை வச்ச, அப்புறம் அசிங்கமாயிடும். நல்லவன் மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டியேடா பாவி!’

என்ன நடந்திருக்குமென்று யூகிக்கவே முடியவில்லை

இவன் அதிர்ச்சியில் உறைந்திருக்க வாசல் மணியடித்தது.

ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் மாளு.

      ‘மாளுக் குட்டி'

உள்ளே வந்தவன் அப்படியே அவளை அள்ளிக் கட்டி கொண்டான். அவள் திணற பின்னரே இவனைப் பார்த்தான்.

பேயறைந்தது போலானான்.

மாளவிகா பேசினாள்.

‘நீ ஏன் ஷங்கு அவனைப் பார்த்துப் பயப்பிடுற. இவன் பண்ணின துரோகத்துக்கு இந்த வீட்டுல நான் இருக்கவே கூடாது. சீக்கிரம் ஒரு லாயரைப் பார்த்து டைவோர்ஸ் வாங்கிற வழியப் பார்க்கிறேன்’

மகாதேவனுக்கு எல்லாம் புரிந்தது.(தொடரும்)

1 comment:

  1. என்ன துரோகம் ? சஸ்பென்ஸ்...?

    ReplyDelete