Saturday, February 27, 2016

அப்பா வருவாரா? - 5

அத்தியாயம் - ஐந்து

நான் ஷங்கர், இந்தக் கதையின் பிரதான வில்லன்.

ஆனா, நீங்க நெனைக்கிற மாதிரி நான் ஒண்ணும் தப்பான ஆளில்ல.
என்ன தப்புப் பண்ண வச்சதே இந்த சமூகம்தான். புரியல? இப்ப மேல படியுங்க.’

ஷங்கருக்கும் மகாதேவனுக்கும் ஒரே ஊர். ரெண்டு பேரும் பங்காளிங்க. மகாதேவன் குடும்பம் செல்வாக்கோடு இருக்க, ஷங்கர் குடும்பம் அவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல்.

அவர்கள் கடையில் கணக்கெழுதும் சாதாரண எழுத்தர் ஷங்கர் அப்பா.

ஷங்கர் அப்பாவுக்கு 4 பொண்ணுங்க, 2 பசங்க. குழந்தைச்செல்வத்தைக் கொடுத்த ஆண்டவன் அது போதுமென்று நினைத்து விட்டான் போலும்.

வறுமையின் பிடியில் தனது இளமைக்காலம் முழி பிதுங்கி நின்றதை இன்றும் பயத்துடன் நினைவு கூருவான் ஷங்கர்.

பசி எந்நேரமும் இவனை ஆட்டிப் படைத்தது. சோறு கிடைக்கும் எனும் ஒரே காரணத்துக்காகவே பள்ளிக்கூடம் போனவர்கள் பட்டியலில் முதலில் வருவான்.

ஆனால் அந்தப் பாழாய்ப் போன படிப்பு இவனுக்கு வரவேயில்லை.

இதைவிடக் கொடுமை இவன் பங்காளி மகாதேவன் படிப்பில் பல படிகள் முன்னேறி இருந்த விடயம்.

வீட்டில் எதுக்கெடுத்தாலும் அவனைப் பற்றியே பேசி இவனை மட்டம் தட்டுவதையே தன் பொழைப்பாகக் கொண்டிருந்தார் இவன் அப்பா.

கடனை உடனை வாங்கி இவன் அக்கா, தங்கைகளின் திருமணங்களை எப்படியோ முடித்து விட்டார் அப்பா.

அதற்கு மிகவும் உதவியது மகாதேவனின் குடும்பம். மற்றக் குடும்பங்களைப் போலில்லாமல் அடுத்தவர்க்கு உதவுவதை ஒரு கடமையாகச் செய்த, மிக நல்ல குடும்பம்.

மகாதேவன் படிப்பில் ரொம்பவும் சுட்டி. முன்னணி அரசு பொறியியல் கல்லூரியில் இலகுவாக இடம் கிடைத்தது. எப்படியோ முட்டி,மோதி ஷங்கர் உள்ளூர் கலைக்கல்லூரியைத்தான் தொட முடிந்தது. அதற்கும் மகாதேவன் குடும்பம் கணிசமாக நிதியுதவி பண்ணியது.

லீவில் ஊருக்கு வரும் வேளைகளில் மகாதேவன் ஷங்கர் வீட்டுக்கு வருவான். அவன் எல்லாரோடும் சகஜமாகப் பழகுவது இவன் குடும்பத்தார்க்கு ரொம்பவே பிடிக்கும். சின்னம்மா, தங்கச்சி,அப்பத்தா என அவன் எல்லாரோடும் ஒன்றிப்போவான்.

அவன் போனபின் ஒரே மகா புராணம்தான்.

ஷங்கருக்கு அது வசம்பாய்க் கசக்கும்.

எப்படி இவனைக் கவுக்கலாம் என்று யோசிக்கலானான்.




(தொடரும்)

No comments:

Post a Comment