Wednesday, February 10, 2016

தந்திரவியூகம் - 3

அத்தியாயம் - மூன்று

ஷிஃப்ட் முறையில் வேலை செய்வதால் கந்தன் அறையில் தங்கவும் பெருந்தன்மையாக எல்லோரும் விட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து வந்த நாட்களில் அவரவர் தத்தம் வேலைகளில் ஒன்றினார்கள்.

கந்தனைப்பற்றி சுத்தமாக மறந்து போயிருந்தார்கள்.

வார இறுதியில் எல்லோருக்குமே ஒன்றுகூடும் சந்தர்ப்பம் அமைந்தது.

எல்லா இளைஞர்களையும்போல ஓய்வுநாளைத் தாகசாந்தியுடன் களித்தார்கள்.

சுந்தர்தான்  இந்த பாட்டு விஷயம்பத்தி ஆரம்பிச்சான்.

என்னடா மாப்பிள்ள, போன எடங்கள்ல எப்படி வரவேற்பு?’

கந்தன் உள்ளே ஒரு கட்டிங் விட்ட உற்சாகத்தில் பேசத் தொடங்கினான்.

எல்லா எடத்திலேயும் ஏகப்பட்ட கூட்டம். உள்ள நொளையக்கூட முடியல

செந்தில் கடலையை நொறுக்கிக் கொண்டு பேசினான்.

திறம மட்டும் இருந்தா இந்தக் காலத்தில வேலைக்கு ஆவாது பிரதர், வெளம்பரம் பண்ணனும்

கந்தன்புரியலையே பிரதர்?’

செந்தில்மீடியாவுல வரணும், நம்மள நாலு பேருக்குத் தெரிஞ்சாத்தான் வெளியொலகத்துல  மதிப்பு

கந்தன்அதுக்கு எதாச்சும் வழியிருக்கா பிரதர்?’

பாலன்இப்பல்லாம் பணம் செலவு பண்ண ரெடியாயிருந்தா எதுவும் சாத்தியம்

கந்தன் குழம்பினான். இவனுங்க தன்னை வச்சு காமெடி கீமெடி பண்றாங்களோன்னு.

இந்த சிந்தனையே சுந்தர் மனசுக்குள்ளும் ஓடியிருக்கணும். அவன் பேசினான்.

டேய், சும்மாவே அவன் கொழம்பிப் போய் இருக்கான்டா, நீங்கவேற…...’

இப்ப முதல் முறையாக ஜோசப் பேசத்தொடங்கினான். எல்லோரும் அமைதியானார்கள்.

எனக்கு ஒரு ஐடியா தோணுது பாஸ். இப்ப எந்தப்பொருளையும் பெண்கள முன்னிலைப்படுத்தித்தான் வியாபாரம் பண்றாங்க.’

நிறுத்தி கொஞ்சம் சரக்கு ஏற்றிவிட்டு, அரிந்த ஆப்பிள் துண்டொன்றை வாயில் போட்டுக்கொண்டு தொடர்ந்தான்.

இவர் விஷயத்திலயும் அதையே நாம பயன்படுத்தனும்

எப்படி மச்சான்இது அனைவரிடமிருந்தும் ஒருங்கே கிளம்பியது.

சொல்றேன். உங்க எல்லாருக்குமே ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கு. அதுல நெறைய பொண்ணுங்க நடிகைங்க படங்களதான் ப்ரொஃபைல் பிக்சரா யூஸ் பண்ணுவாங்க. த்ரிஷா,ஜோதிகா,சமந்தான்னு இப்படி நெறைய. உண்மையிலேயே இந்தப் பொண்ணுங்க அழகா இருப்பாங்களான்னு தெரியாட்டியும், ஆண்கள் மனசுல ஒரு சலனத்த உண்டு பண்ணி, ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தூள்பரத்தும். இந்த டெக்னிக்கைதான் நாமளும் ஃபாலோ பண்ணனும்

நிறுத்தி ஒரு தம்மைப் பற்றவைத்தான்.

இதெல்லாம் ஏதோ கனவு போலப் பாத்துக்கொண்டிருந்தான் நம்ம கந்தன்.

ஜோசப் தொடர்ந்தான்.

என் திட்டம் இதுதான். முதல்ல ஒரு பொண்ணோட அக்கவுண்ட தொறக்கிறோம். அந்தப் பொண்ணோட படம் புதுமையா,எல்லோரையும் கவர்ற மாதிரி இருக்கணும். முக்கியமா சினிமா சம்பந்தமில்லாததா பாத்துக்கணும். அப்புறமா நம்ம பொண்ணு இயல்,இசை,நாடகம்னு ஈடுபாடுள்ளதாக் காட்டிக்கணும். ஒரு பத்து ஆண்களுக்கு ரெக்வெஸ்ட் அனுப்பிப் பார்க்க வேண்டியது. சீக்கிரமே அது பாக்டீரியா மாதிரிப் பல்கிப் பெருகிடும்

எல்லோரும் ஜோசப்பை வியப்புடன் பார்த்தார்கள்.

பொதுவாகவே இந்தக் குழுவில் அதிகம் பேசாதவன் அவன். ஆனா ஏதாச்சும் ஒண்ணு சொன்னா சரியா இருக்கும்.

இந்த அனுபவபாடம் அவன்மேல் ஒரு அபிமானத்தைக் கொடுத்திருந்தது.

எதிர்தரப்பில் மௌனம் நிலவவே, அவனே தொடர்ந்தான்.

இந்த வேலைய ஒருத்தனால செய்ய முடியாது. நம்ம நண்பர் கவித,பாட்டு மட்டும் எழுதட்டும். அதுக்கு வேண்டிய உதவிகளை குறிப்பா ஃபேஸ்புக் சம்பந்தப்பட்ட மேட்டர நான் கவனிச்சுக்கிறேன். சுந்தர் நீ ஒரு அழகான பொண்ணோட படத்துக்கு ஏற்பாடு பண்ணு. முக்கியமா தமிழ்க்கலாச்சாரம் படங்கள்ல பிரதிபலிக்கணும். வெவ்வேறு ஆங்கிள்ல ஒரு 10 படம் எடு. தேவைப்படும்

சுந்தர் இடை மறித்துபொண்ணுக்கு நான் எங்கடா போவேன்?’

பாலன் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான்ஏன் மாப்பு, உனக்குத்தெரியாத பொண்ணுங்களா? யாரை டபாய்க்கிற, நீதான் மன்மதராசாவாச்சே?’

தொடர்ந்து சிரிப்பொலிகள்.

ஜோசப் எல்லோரையும் அமைதியாக்கினான்.

‘’உன் ஆளு கிட்ட கொஞ்சம் ஹெல்ப் கேளு மாமு, அவதான் முழுசா போத்திட்டில்ல நடமாடுறா. ஆபத்துக்கு பாவமில்லன்னு சொல்லுவாங்க

சுந்தர் ஏதோ சொல்ல வாய் திறந்தான், ஆனால் கந்தனின் பரிதாபமான முகம் அவனை வாயடைத்துவிட்டது.

பாலன் உனக்குத்தான் தமிழ்ல டைப் பண்ண வருமில்ல, அப்ப நீதான் நண்பரோட கவிதைகளை அப்லோட் பண்ற

செந்தில் தான் தப்பிவிட்டதுபோல ஒரு நிம்மதிச் சிரிப்பை உதிரவிட்டான்.

மாமு, நீயில்லாம எப்படிடா, நீதான் இவர் பதிவுகளுக்கு சரியான புகைப்படங்களைத் தேடித் தர்ற

மேலும் சில,பல விஷயங்களுடன் அன்றைய பொழுது அஸ்தமனமாகியது.

வெளியே வட்ட நிலா வானில் எழுந்தது.………………………………………………(தொடரும்)

2 comments:

  1. ஃபேஸ் புக்கில் பெண்படம் போட்டு ஆட்களை கவர்வது பற்றியும் நீர் எழுதி இருந்த நினைப்பு. நானும் ஏதோ காமெண்ட் எழுதியதாகவும் நினைவு

    ReplyDelete
  2. அந்தக் கதைதான் ஐயா, மற்ற நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க இதில் பிரசுரிக்கிறேன்.

    ReplyDelete