Sunday, February 28, 2016

அப்பா வருவாரா? - 8

அத்தியாயம் - எட்டு


வஷிஷ்ட்டை நீங்கள் மறந்திருப்பீர்கள். அம்மா, அப்பா சண்டையில் பெரிதும் பாதிக்கப்பட்டவன் இந்த 5 வயதுக் குழந்தை. அவன் வகுப்பு நண்பர்கள் இவனுடன் பேச அவர்களின் பெற்றோர் தடை விதித்தனர். வீட்டிலும் அக்கம் பக்கத்துச் சிறுவர்கள் இவனைத் தவிர்த்தனர். பாவம் குழந்தை, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவித்தான். அதை நினைத்துத் தனிமையில் அழுதான். தனிமை முதலில் பயமுறுத்தியது. பின்னர் அதுவே பழகிப்போனது. தன்னைத் தள்ளி வைத்த சமூகத்தின்மீது வன்மம் உண்டாயிற்று.
ஒரு மழை நாள் இரவு முழிப்பு வந்தது. அருகில் அம்மாவைத் தேடினான். காணவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தான். பக்கத்து அறையிலிருந்து வினோதமான ஒலிகள் கேட்டன. அந்தக் கதவைத் திறந்தான். வினோதமான செயல்களையும் கண்டான். கருமமே கண்ணாயிருந்த மாளவிகாவும் ஷங்கரும் இவனைக் கவனிக்கவில்லை. 

அவன் கண்ட காட்சி (சரி, சரி கருமாந்திரம்) மனதில் நன்கு பதிந்து கொண்டது.

அம்மா மீது வெறுப்பு உண்டாகியது. எல்லாப் பெண்களும் போகப்பொருட்கள் எனும் கருத்து ஆணித்தரமாக உருவானது.

அம்மா இவனைச் சில நாட்களில் தொலைவிலுள்ள ரெசிடென்சியல் ஸ்கூலில் சேர்த்தாள்.

அங்கு இவனை விடப் பெரிய பையன்கள் இவனை அடித்தார்கள். இவன் பொருட்களை எடுத்தார்கள். இவனைக் கேலிப் பொருளாக்கினார்கள். வார்டனிடம் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.

இவன் நிறைய அழுதான்.

கொஞ்ச நாளில் எல்லாம் பழகியது.

புதுப் பையன்கள் வரும்போது இவனும் அதையே பண்ணினான். அதில் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

அம்மா இவனைப் பார்க்க எப்போதாவது வந்தாள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அங்கிள் அவளுடன் வந்தார்கள். இவனிடம் சம்பிரதாயமாக ஹாய் சொன்னார்கள். சொல்லி வைத்த மாதிரியே எல்லோரும் கையைத் திருப்பி மணி பார்த்தார்கள். உடனே அம்மா இவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு விடை பெற்றாள்.
லீவில் பாட்டியுடன் ஊரில் இருக்க வேண்டியதாயிற்று. அக்கம் பக்கத்தில் உள்ள பிள்ளைகள் இவனுடன் ஒட்ட மறுத்தார்கள். அப்படி ஒண்டிய ஒன்றிரண்டு பேரையும் அவர்களின் அம்மாக்கள் அடித்து இழுத்துப் போனார்கள்.

தனியாளாய் ஆற்றில் மீன் பிடிக்கவும், புல்வெளியில் வெட்டுக்கிளி பிடிக்கவும், மரமேறிக் குருவிக்கூட்டிலுள்ள முட்டை திருடுவதும் என தனக்குத்தானே ஒரு உலகத்தை வடிவமைத்தான். அதில் அவனே ராஜாவாக உணர்ந்தான்.

அப்பா வந்து தன்னைப் பார்ப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அம்மாவின் மேல் வெறுப்பு கூடிக்கொண்டே போனாலும் அப்பாமீது இன்னும் அபிமானம் இருந்தது.

அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்தது.

பாட்டியும் அம்மாவும் ஃபோனில் பேசியபோது காதில் விழுந்த தகவல்.

‘ஏன்டி இவளே, உன் வீட்டுக்காரன் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு அமெரிக்காவில செட்டில் ஆகப் போறானாமே?’

‘*** **** ****’

தெரியுமான்னு கேட்டா என்ன ஏன்டி வையிற’

‘*** **** ***’

சடாரென ஃபோன் வைக்கப்படும் ஓசை கேட்டது.

பாட்டி கோவத்துடன் வெளியே வந்தாள்.

இவனைக் கண்டவுடன் பொரிந்தாள்

‘நீ பண்ணின பாவம்தான்டா இவ வயித்தில வந்து பொறந்த. இன்னும் என்னென்ன கஷ்டமெல்லாம் படப் போறியோ தெரியல்லயே?’

வஷிஷ்ட்டுக்கு என்னமோ புரிவதுமாதிரி இருந்தது.
(தொடரும்)

No comments:

Post a Comment