Thursday, February 18, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 4

அத்தியாயம் - நான்கு

    ஃபோன் அடித்தது.

வாக்கிங் அழைத்து வந்த லாப்ரடாரை ஒரு கையால் கட்டுப்படுத்திக் கொண்டே அழைப்பை ஏற்றான் விவேகானந்தன். ஐடி கம்பேனியில் கை நிறையச் சம்பளத்துடன் வேலை.தினமும் காரில் 2 மணி நேரம் பயணம் செய்து வேலை பார்த்து பின்னர் மாலை மீண்டும் அதே தூரத்தை சில சமயம் 3 மணி நேரங்களில் கடந்து, நொந்து, நூலாகி, வீடு வந்து சேர்வதற்குள் பெண்டு கழண்டு விடும். இவன் எடுத்த சாமர்த்தியமான முடிவினால் புறநகரில் ஒரு 3 BHK ஃப்ளாட்டில் ஜாகை, பயண நேரம் வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே.

இன்னும் திருமண பந்தத்தில் இணையாத காரணத்தால் (வீட்டில் தீவிரமாகத் தேடுகிறார்கள்) வாழ்க்கை யந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருந்தது. இன்று ஓய்வுநாள் செல்லப்பிராணியுடன் நடை பழக வந்தவிடத்தில் இந்த அழைப்பு.

சொல்லுடா மாப்பிள்ளை

மறுமுனையில் புகழ் பேசினான். தனது வடநாட்டு நண்பர்கள் இரண்டு பேரை தன்னுடன் தங்க வைக்க முடியுமாவெனக் கேட்டான். புதிதாகக் காலேஜில் சேர்ந்து ஹாஸ்டல் ஒத்துக்கொள்ளாமையால் கஷ்டப் படுவதாகச் சொன்னான். ரெண்டே வாரங்கள் என்று கெடு வேறு. வேறு யாருமென்றால் மறுத்திருப்பான் விவேக். புகழ் வேறு ரகம். மறுக்க முடியவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிட்டு சமையலை ஆரம்பிக்கையில் மணி அடித்தது. இரு வடக்கத்திக்காரர்கள் நின்றிருந்தார்கள். புகழ் அனுப்பியதாகச் சொன்னார்கள். இவனைசார்,சார்என்று மரியாதையாய் விளித்தது ரொம்பவும் பிடித்திருந்தது. ரெண்டு வாரம்தானேயென்று காலியாயிருந்த ஒரு அறையை அவர்களுக்குக் கொடுத்தான். வினை ஆரம்பமானது.

      சொக்கலால் ஜெயின் குழப்பத்தில் இருந்தார். இந்த டிரைவர் பையன் பண்ணிய காரியம் அவருக்கு வியப்பாக இருந்தது. கார் சாவியை வண்டியிலேயே வைத்து விட்டு அவன் தலைமறைவாகி விட்டான். பொண்ணை பள்ளியிலிருந்து வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு கம்பெனிக்கு வரச் சொல்லியிருந்தார். செல்ஃபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது. வீட்டில் கேட்டால் யாருக்கும் சரியான விவரம் தெரியவில்லை. பணம்,பொருள் என்று எதுவும் குறையவும் இல்லை. எதுக்கும் இருக்கட்டுமென்று ஒரு போலீஸ் கம்ப்ளேன்ட் கொடுக்கக் கிளம்பினார்.

  வேணிக்குக் கலவரமாய் இருந்தது. பழனி போனவன் போனவன்தான். அவன் செல் அவளிடம்,அடிக்கடி சில எண்களுடன் பளிச்சிட்டு,பளிச்சிட்டு ஒரு கட்டத்துக்குமேல் உயிரிழந்தது. இதனை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள்.அம்மாவிடம் சொன்னால் நிச்சயம் சாமி ஆடுவாள் என்று தெரிந்ததால் யாரிடம் சொல்லுவதென்று தடுமாறினாள். கடைசியில் தன் பள்ளி செல்லும் தங்கையிடம் இதனைச் சொல்ல முடிவு பண்ணினாள்.

‘ஏய் ஜோதி,இங்க கொஞ்சம் வாடி!’.(தொடரும்)

1 comment:

  1. கதாபாத்திரங்கள் எல்லாம் பிடிபடும்வரை ஒவ்வொரு அத்தியாயம் முன்பு பழைய பதிவுகளின் சுருக்கத்தை வெளியிடலாமோ

    ReplyDelete