Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 8

அத்தியாயம் - எட்டு

டாக்டர் சத்தியமூர்த்தி குழம்பிப் போய் இருந்தார்.

குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் உருக்குலைந்த உடல்களைப் போஸ்ட்மார்ட்டம் செய்து முடித்திருந்தார்.

அடையாறில் கிடைத்த தலையின் உடல் எப்படிக் கோயம்பேடு வரைக்கும் பயணித்திருக்கும் என்று அவரால் கற்பனை பண்ண முடியவில்லை.

கதவு தட்டப்பட்டது.

எஸ்.பி முருகானந்தம் உள்ளே நுழைந்தார்.

      ‘ என்ன டாக்டர், ஒரே யோசனையா இருக்காப்பல தெரியுது? ‘

      ‘ ஆமா முருகா, குழப்பத்திலதான் இருக்கேன் ’

தனது பள்ளித்தோழனைக் கண்டதும் அவருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. தான் அவதானித்தவற்றைக் காவல்துறை அதிகாரியிடம் கூறினார். இருவரும் வெகு நேரம் விவாதித்தார்கள்.

‘ இதுல ஏதோ பெரிய சதி நடந்திருக்கு. எவனோ சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டிட்ட மாதிரி படுது ‘

‘ அந்தத் தலையும், முண்டமும் இறந்து கொறஞ்சது 4 நாள் ஆகியிருக்கும். குண்டுவச்ச குரூப்பே இதையும் பண்ணியிருக்கணும் ‘

‘ சும்மாவே ஒரு க்ளூவும் கெடைக்காம மண்டையப் பிச்சுக்கிட்டு இருக்கோம். இப்ப இது புதுத் தலவலி ‘

‘ நான் ரிப்போர்ட்ட க்ளோஸ் பண்ணனும். எதுக்கும் என் சீனியர் கிட்டயும் ஒரு செகண்ட் ஒப்பீனியன் எடுத்துட்டு முடிவு பண்றேன் ‘

‘ சரி டாக்டர், நானும் கமிஷனர்கிட்ட போய் இந்த விஷயத்த சொல்லிடுறேன் ‘

கிளம்பினார்கள்.

நல்லது செய்கையில் நாலு பேருக்குத் தெரிந்து செய்வது தவறில்லை. ஆனால் தீயது செய்கையில் தனியாகச் செய்ய வேண்டும்.

கூலிப்படையில் இருப்பவர்கள் தொடர்ந்து நன்றி விசுவாசத்துடன் இயங்குவார்கள் என்று எண்ண முடியாது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது தலைமைப்பொறுப்பை ஏற்று லம்பாக பெரிய தொகையை அமுக்கி அடுத்த லெவலுக்குப் போவதையே அனைவரும் குறியாகக் கொண்டிருப்பார்கள்.

புகழின் தலைமையில் இயங்கினாலும் சுந்தருக்கும் சம்பத்துக்கும் தலைமைக் கனவுகள் நிதமும் கிறங்கடித்தன.

நகரெங்கும் வெடிகுண்டுப் பரபரப்பில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த நேரம் இவர்கள் குழு உயர்தர சொகுசு பாரில் பெரிய பார்ட்டியை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

பார்ட்டி வரும்வரையில் சோமபானம் பருகிக் காத்திருந்தார்கள்.

பார்ட்டி வந்தவுடன் சுந்தரையும் சம்பத்தையும் விட்டு விட்டு புகழ் தனியாகப் போய்ப் பேசினான். பை கை மாறியது.

“மொத்தம் ஒரு லட்சம் அட்வான்ஸ். இவரு சொன்ன பையனைக் கடத்தி, அவங்க அப்பாவை மெரட்டி பத்து கோடி ரூபா சொத்த இவரு பேர்ல எழுதி வாங்கிட்டு, அந்தப் பையன வெளிய வுடனும்”

புகழ் வெளியே வந்தவுடன் மெதுவாகச் சொன்னான்.

பைக்கில் ஏறும்போது சற்றுத் தடுமாறினான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.

மீண்டும் எழவில்லை.



(தொடரும்)

No comments:

Post a Comment