Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 11

அத்தியாயம் - பதினொன்று

மங்களூர் மெயில் திருப்பூர் தாண்டித் தடம் புரண்டது. அறுவர் குழுவில் ஒருவன் நல்ல மப்பில் இருந்தான். இந்தத் தடங்கல் அவனுக்கு எரிச்சல் மூட்டியது. மிக மட்டமான மொழியில் தமிழ்நாட்டையும் தமிழரையும் சபிக்கத் தொடங்கினான். கன்னடம் தெரிந்த தமிழர்கள் சிலருக்கு ரத்தம் கொதித்தது. நம்ம ஊர்ல வச்சு நம்மளையே திட்டுறதான்னு பேசியவனைப் பந்தாடினார்கள். அவனுக்கு ஆதரவாக வந்தவர்களும் செமத்தியாக அடிபட்டார்கள்.

காவல்துறை வரவழைக்கப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அவர்கள் உடமைகள் சகிதம் மருத்துவ உதவிக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். செல்ஃபோன்கள் பறிக்கப்பட்டன. அனைத்து அலைபேசிகளிலும் கடைசியாக ஒரே எண் பதிவாகியிருந்தது காவல்துறையின் மூக்கில் வியர்க்க வைத்தது.

பேசும் நிலையிலிருந்த நந்தலால் கிஷோர் தக்க முறையில் விசாரிக்கப்பட்டான். மின்னணுவியலில் விற்பன்னர்களாகிய தாம் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரிகள் எனும் தகவலை வலி தாங்கமுடியாது கக்கினான்.

இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் உடனடியாக இந்தத் தகவலைத் தனது சீனியர் மூலமாக சென்னையிலுள்ள முருகானந்தனுக்குத் தெரிவித்தார்.

முக்கிய புள்ளியை நெருங்கி விட்டது தெரிந்தது.


கமிஷனர் சாந்தாராமன் முகம் கவலை ரேகைகளுடன் காணப்பட்டது. சட்டம் ஒழுங்கு சீர் கேட்டால் உருளப்போவது அவர் தலைதான் என்று பரவலாகச் செய்தி அடிபடத் தொடங்கியிருந்தது. முருகானந்தம் முதல் நாள் இரவு சொன்ன செய்தியால் மிகுந்த அதிர்ச்சியடைந்திருந்தார். மீண்டும் காலையில் வந்து விடுவார்.

பெரிய அரசியல் புள்ளியைக் கைது செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டுப் போனாரே தவிர யாரென்று விவரிக்கவில்லை. ஆளும் கட்சியா, எதிர்கட்சியா அல்லது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியா, முன்னாள் ஆளும் கட்சியா என்று எந்த விவரமும் தெரியவில்லை. உள்துறைச் செயலாளர் இன்று மதியம் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்.

வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

தொடர்ந்து பூட்ஸ் ஒலியும் தொடர்ந்த கதவில் தட்டும் சத்தமும்.

      ‘குட் மார்னிங் சார்’

விறைப்பான சலூட்டை ஏற்றார்.

இருவரும் அலுவலக அறைக்குள் பிரவேசித்தனர்.

வெளியே நிற்கும் சென்ட்ரியிடம் யாரையும் உள்ளே விடவேண்டாமென்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்தினார்.

குண்டு வெடிப்பில் ஆரம்பித்து அது எப்படிப் புகழ் குழுவுடன் சம்பந்தப் படுத்தப்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். நாசவேலையின் சூத்திரதாரிகள் சகலரையும் வியத்தகு வகையில் அடையாளம் கண்டிருந்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் கமிஷனர் முகத்தில் புன்சிரிப்பொன்று தோன்றியது. உடனடியாக முக்கிய புள்ளியின் கைதுக்கான ஆவணங்களைத் தயார் செய்து முருகானந்தத்திடம் கொடுத்தார்.

உள்துறை செயலரின் சந்திப்புக்குத் தயாரானார்.



(தொடரும்)

No comments:

Post a Comment