Saturday, February 13, 2016

தந்திரவியூகம் - 5

அத்தியாயம் - ஐந்து

கமலினியின் ரசிகர் பட்டியலில் முன்னணி இயக்குனர் சுந்தரபாண்டியன் எப்போது இணைந்தாரென்று தெரியாது.

ஆனால், அவளைக் கண்ட நாள்முதல் எப்படியாவது தனது படமொன்றில் வாய்ப்பளித்து, தன் வசப்படுத்த விரும்பினார்.

எவ்வளவு முயன்றும் அவள் பற்றிய தகவல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

தனது ஏழாவது படத்தில் உச்ச நட்சத்திரத்துடன் இணைவதை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக அவர் கருதினார்.

தனது ஏழு படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை அமைத்து மிகவும் ராசியான இயக்குனரெனப் பெயர் எடுத்திருந்தார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தை மூன்றெழுத்து நிறுவனம் தயாரிக்க, 6 பாடல்களுக்கு தனித்தனியாக இசையமைக்க 6 முன்னணி இசையமைப்பாளர்கள் முதல் முறையாக ஒரே படத்தில் இணைந்தார்கள்.

கதாநாயகியாக நடிக்கப் பிரபல இந்தி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.

இவ்வளவும் நடக்கும் வேளையில்தான் சுந்தரபாண்டியனார் கமலினிமேல் தீரா மோகம் கொண்டார்.

நீண்ட நேரம் மதுவுடன் தனிமையில் இருந்துவிட்டு மெதுவாக தனது ஐ ஃபோனில் முகனூல்ப்பக்கத்தில் நுழைந்தார்.

அடிக்கடி, கமலினி கவிப்பித்தன் என்றொரு பிரகஸ்பதியை முன்னிலைப் படுத்தி வந்தாள். ஏதோ ஒரு யோசனையில், அவனுடைய பக்கத்துக்குத் தாவினார்.

முதலில் ஒரு கவிதை படித்தார். பின்னர் இன்னொன்று. சுவாரஸ்யமாய் இருந்தது. சுமார் 1 மணி நேரம் களிந்தபின் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

கவிப்பித்தன் (நம்ம கந்தன்தாங்க!) அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை பொதுவாகச் சீண்டுவது கிடையாது. ஆனால்,இன்று உள்ளிருந்து பட்சி கதறியது. எடுத்துப் பேசினான். பேசிமுடித்தவுடன் நிழல்கள் படத்தில் சந்திரசேகர்போல ஆடவேண்டும்போல இருந்தது.

இந்த நேரம் பார்த்து ரூமில் யாருமே இல்லை.

உடனே சுந்தருக்கு ஃபோன் போட்டான்.

சுந்தர் ‘மச்சி, வேலையா இருக்கேன். அப்புறம் பேசவா?’

கந்தன் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பைப் பற்றி சொன்னான்.

சுந்தர் முகம் அதிர்ச்சியடைந்தது. பின்னர் ஆனந்த ரேகைகள் மெல்லப் பரவின.

உடனே, ஜோசப்,பாலன்,செந்தில் என அறை நண்பர்கள் அனைவருக்கும் தகவல் சொன்னான்.

எல்லோரும் அன்று இரவு 8 மணிக்கு அறையில் சந்திப்பதாக முடிவானது.

எல்லோரும் கூடியபின் கந்தன் ஆரம்பித்தான்.

‘யார்கிட்டருந்துன்னு தெரியாம ஒரு அழைப்பு வந்துச்சு. எடுத்துப் பேசினா டைரக்டர் சுந்தரபாண்டியன். தனது படத்தில் பாட்டெழுத சம்மதமான்னு கேட்டாரு. ஒரு நிமிஷம் தலையெல்லாம் சுத்தி கிறு,கிறுன்னு வந்துச்சு. ஒருமாதிரி சுதாரிச்சு சரின்னு சொன்னேன். நாளைக்கு ஏவிஎம்முல பாக்கலாம்னாரு’

நண்பர்கள் நால்வரும் வாய்பிளந்து கேட்டனர்.

கடைசியில் ஜோசப் பேசினான்.

‘இது உண்மையிலேயே அவர்தானான்னு தெரியணும். ஏன்னா பலகுரல்ல பேசுற யாராச்சும் கலாய்ச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு’

கந்தனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாத்துபோல உணர்ந்தான்.

பாலன் உடனே ஒரு காரியம் செய்தான். கந்தனின் ஃபோனை வாங்கி அதில் இருந்த டைரக்டரின் எண்ணைக் குறித்துக் கொண்டான்.

தனது கைபேசியிலிருந்து திரையுலக நண்பர் ஒருவரை அழைத்தான்.

‘அண்ணே, நான் பாலா, க்ளோப் ட்ராவல்ஸ் மணி தம்பி. ஒரு சின்ன தகவல் வேணும். டைரக்டர் சுந்தரபாண்டியன் செல் நம்பர் கொஞ்சம் வேணும்.’

மறுமுனையில் கரடுமுரடான குரல் கேட்டது.

‘ஐயோ, அப்படியெல்லாம் பண்ணிட மாட்டேன். எங்க கம்பனி ஆண்டுமலருக்கு ஒரு பேட்டி எடுக்கணும், அதான்.’

சற்று மௌனம். பின் மீண்டும் கர,கர….

பாலன் வேகமாக அந்த எண்களைக் குறித்துக்கொண்டான்.

‘ரொம்ப நன்றிண்ணே’

அனைவரும் பரபரப்பானார்கள்.

இரண்டு எண்களும் மேட்ச்சாயின.

கந்தனுக்குப் போன உயிர் திரும்பியது.

நண்பர்கள் எல்லோரும் கந்தனுக்குக் கை கொடுத்தார்கள்.

வெளியே பனி பொழியத் தொடங்கியது.



………………………………………………(தொடரும்)

No comments:

Post a Comment