Saturday, February 27, 2016

அப்பா வருவாரா? - 7

அத்தியாயம் - ஏழு

நான் சரோஜினிதேவி. எனக்கு இதை உங்ககிட்ட இப்ப சொல்லியே ஆகணும்.’

புதிதாக ஒரு குணச்சித்திரம் உள்ளே நுழைவது குழப்பமாகத்தான் இருக்கும். இவள்தான் மகாதேவனின் பெயர் கெட்டுப்போகக் காரணமாயிருந்த அந்த மகராசி.

இப்ப அவள் குரலிலேயே அவ கதைய சொல்லக் கேட்போம்.

‘நான் பக்கத்து ஊரு. எனக்கும் மாணிக்கத்துக்கும் கல்யாணம் ஆகி 2 வருஷத்தில பாம்பு கடிச்சு அவரு போய் சேர்ந்துட்டாரு. ஒரு வயசுல கைக்கொழந்தையோட நான் அல்லாடிப் போய்ட்டேன். பொறந்த ஊருலயும் என்னய சேர்த்துக்கல்ல. கூலி வேல செஞ்சு மானத்தோட வாழ்ந்துக்கிட்டு இருந்தேன்.  தனியாளா ஒரு பொம்பள வாழ்றது அவள விட ஊர்ல உள்ள சில மைனர்களுக்கு கஷ்டமா தெரிஞ்சிது. என்ன பலமுறை பலவந்தப் படுத்தினாங்க.பணத்தால மடக்கப் பார்த்தாங்க’

தண்ணி குடித்து விட்டுத் தொடர்ந்தாள்.

‘ஆனா, என்னய ஒரு சக மனுஷியா நெனச்சு அவுக வீட்டிலயே கூடமாட ஒத்தாச பண்ண தங்க வச்சுக்கிட்டாரு பெரியய்யா. நானும் அந்த வீட்டுப் பொண்ணுங்களுக்கு உதவியா இருந்தேன். வாழ்க்கை நிம்மதியா இருந்துச்சு. யார் கண்ணு பட்டதோ, அதுக்கும் அவ்வளவு சீக்கிரம் கேடு வருமின்னு நான் எதிர்பார்க்கல்ல’

பெருமூச்சு.

‘பட்டணத்திலிருந்து அய்யா புள்ள லீவுல வந்திருந்தாங்க. எல்லாரோடயும் சகஜமாப் பேசுவாங்க. ஒரு நாள் எல்லாரும் கோவிலுக்குப் போயிருந்தாங்க. நான் மட்டும் வீட்டுல. கெணத்தடியில குளிச்சிட்டு வரும்போது கால் வழுக்கி விழுந்திட்டேன்.’

மகாதேவன் வீட்டுக்கு வருமுன்னே எல்லோரும் கோவிலுக்குக் கெளம்பிப் போயிட்டாங்க. எல்லோரும் சேர்ந்து போவதாக ஏற்பாடு. போன எடத்தில் அவன் சைக்கிள் பஞ்சர். அதை சரி செய்து வருவதற்குள் அப்படி என்ன அவசரம் என்று புலம்பியபடி வீட்டுக்குள் நுழையப்போனவன் கிணற்றடியைப் பார்த்தான். திடுக்கிட்டான்.
அங்கே வீட்டுப் பணிப்பெண் மயங்கிக் கிடந்தாள். அவனுக்குக் காலும் ஓடவில்லை, கையும் ஓடவில்லை.

அவளை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டு அருகிலுள்ள ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான்.

அவளைப் படுக்கவைத்து, உடைகளைத் தளர்த்தி முதலுதவி செய்தான். லேசாகக் கண் விளித்து மெல்ல முனகினாள்.

சரோஜினி தொடர்ந்தாள்.

‘முழிச்சுப் பார்த்தா என்னைய யாரோ கயிற்றுக் கட்டில்ல படுக்க வச்சிருந்தாங்க. பார்த்தா சின்னையா. அய்யான்னு எந்திரிக்கப் போனேன். கையமர்த்தி ஒண்ணும் பேச வேணாம்னு சைகையிலே சொன்னாங்க அவ்வளவு நெருக்கத்தில ஒரு ஆஜானுபாகுவான ஆண். என் இளமையின் ஏக்கம் என் புலன்களைக் கட்டிப் போட்டுடிச்சு. அப்படியே அவரை அணைச்சுக்கிட்டேன். என் செயல் அவரை ஆச்சரியப்படுத்திச்சு. விடு புள்ளன்னு என்னை உதறுனாரு. நான் விடாம அணைச்சுக்கிட்டேன். ஓங்கி ஒரு அறை விட்டாரு. எனக்குப் பொறி கலங்கிடுச்சு.என் காமமும் அடங்கிடுச்சு.’

விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மீண்டும் மௌனத்தை உடைத்தாள்.

‘அந்த நேரம் பார்த்து யாரோ வெளித்தாள்ப்பாளச் சாத்துற சத்தம் கேட்டுது. சின்னையா மூஞ்சி பேயறஞ்சமாதிரி ஆச்சு. நான் அவர் காலப்புடிச்சிக்கிட்டு அழுதேன். கொஞ்ச நேரத்தில யாரோ கதவைத் தெறந்தாங்க. வெளியே நெறைய பேரு, குசு குசுன்னு பேசிக்கிட்டாங்க’

பஞ்சாயத்து கூடியது. விதவைப் பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சித்ததாக மகாதேவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அபராதம் விதிக்கப்பட்டு ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்பட்டான்.

அந்த விதவைப் பெண்ணை மறுநாள் முதல் காணவில்லை.

பல வருடம் கழிந்து இன்றுதான் ரீ-என்ட்ரி.(தொடரும்)

No comments:

Post a Comment