Monday, February 29, 2016

அப்பா வருவாரா? - 9

அத்தியாயம் - ஒன்பது

மகாதேவன் குழப்பத்தில் இருந்தான்.

தன்னைப் பார்க்க யாரோ ஊரில் இருந்து வந்திருப்பதாக கூர்க்கா வந்து சொல்லி விட்டுப் போயிருந்தான். அனுப்பச் சொல்லி விட்டு யாராயிருக்கும் என்று காத்திருந்தான். நிழலாடியது.

      ‘ஐயா, நல்லாயிருக்கீங்களா?’

நிமிர்ந்து பார்க்க முன், அவன் காலடியில் அவள் கிடந்தாள். பதறியபடி

      ‘யாரும்மா நீ, ஏன் இப்படி?’

      ‘என்னைத் தெரியல்லீங்களா, நாந்தான் சரோஜா’

இப்பொழுதுதான் அவளை மறுபடி ஒரு முறை பார்த்தான். கிராமத்தில் இவன் வீட்டில் ஒத்தாசை செய்த பணிப்பெண். ஒரு அசம்பாவிதத்துடன் அந்த ஊரை விட்டே போனவள். மறுபடியும் ஏன் தேடி வந்திருக்கிறாள்?

      ‘ஞாபகம் இருக்கும்மா, எப்படி இருக்க?’

சம்பிரதாயமான கேள்வி.

      ‘நல்லா இருக்கேனுங்க.’

தன்னைப் பற்றி விலாவாரியாக எல்லாவற்றையும் சொன்னாள். ஊரை விட்டுப் போய் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து அங்கு சாமியார்களுக்கு ஒத்தாசை செய்ததையும், தன்னை விரும்பிய ஒரு பக்தர் பெரிய சாமியாரின் ஆசியுடன் அவளுக்கு வாழ்வளித்து அவள் குழந்தையையும் ஏற்றுக் கொண்டதையும் சொன்னாள். அவருக்கு பெரிய தொழிற்சாலைகள் இருப்பதாகவும் தன்னை நன்றாக வைத்துப் பார்ப்பதாகவும் பூரித்தாள்.

‘ஊர்ல உள்ள மார்யாயி ஒரு நா கோவில்ல என்னையப் பாத்தா. அவதான் ஐயாவுக்கு நேர்ந்த கதியச் சொன்னா. அன்னைல இருந்து எனக்கு உங்களையும் உங்க வூட்டுகார அம்மாவையும் பார்த்து நடந்த உண்மையச் சொல்ல வந்தேனுங்க’

மகாதேவன் விரக்தியாய்ச் சிரித்தான்.

      ‘அந்தக் கட்டத்த எல்லாம் தாண்டியாச்சு தாயி.’

என்னமோ அவனுக்கு இவளைப் பார்த்ததும் உள்ளே அணை உடைந்தது. நம்மீது நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் நாம் வஞ்சிக்கப் பட்டிருக்கும் வேளைகளில் நம்முன் தோன்றினால் வரும் உணர்வு அது.

அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தான். தலையில் கையை வைத்துக் கொண்டு ஓவென அழத் தொடங்கினான். சரோஜினி அவன் தோளைத் தொட்டு அவனை ஆசுவாசப்படுத்தினாள். அதில் ஒரு தாயின் பரிவு இருந்தது.

சற்று நேரத்தில் மகா தொடர்ந்து பேசினான்.

‘யார என் சொந்தத் தம்பியா நெனச்சு என்னால முடிஞ்ச உதவியெல்லாம் பண்ணினேனோ அவனே கடைசில என் வாழ்க்கைய அழிக்கக் காரணமாயிட்டான். என் பொண்டாட்டி மனசில விஷத்த விதச்சு, அவள திச திருப்பி, அவன் பசியத் தீர்த்துக்கிட்டு விவாகரத்து வரைக்கும் கொண்டு போய்ட்டான். எல்லாம் முடிஞ்சோன்னே சத்தமில்லாம வெளியூர் போய்ட்டான்’

அவள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘இப்ப அவ ஊர்ல எல்லார்கூடவும் பழகுறா. என்னப் பழி வாங்குறதா நெனச்சி தன்னத்தானே பலி கொடுக்கிறா. என் பையன நெனச்சாத்தான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு’

அவன் முழுசாகக் கொட்டும்வரை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் பேசினாள்.

‘ஐயா, என்னால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மத்தியஸ்தம் பண்ண முடியுமய்யா’

அவன் விரக்தியாய்ச் சிரித்தான்.

‘இல்ல தாயி, அந்த ஆண்டவனே வந்து அறிவுரை சொன்னாலும் அவ கேட்க மாட்டா. இவ்வளவு தூரம் வந்ததே பெருசும்மா. நீ கெளம்பு’

அவன் கைகூப்பினான்.

கனத்த இதயத்தோடு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.


(தொடரும்)




No comments:

Post a Comment