Sunday, February 21, 2016

அப்பா வருவாரா? - 1

அத்தியாயம் - ஒன்று 

இவன் வஷிஷ்ட். 1பி, சின்மயா வித்யாலயா.

‘சம்பந்தமேயில்லாமல் என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தாங்கன்னு புரியல.  பேசாம ஸ்சூல்லயே இருந்திருக்கலாம், ப்ரியா மிஸ் அழகா கதை சொல்லிப் பாடம் எடுத்திருப்பாங்க. நானும், கிஷான், திலிப், முகுந்தோட ஜாலியா வெளையாடி   இருப்பேன்'

இது 5 வயசே நிரம்பிய வஷிஷ்ட்டின் கவலை. உண்மைதான், அவனுக்கும் இந்த நீதிமன்ற வளாகத்துக்கும் ஒட்டவில்லைதான். கறுப்புக் கோட்டுப் போட்டு இங்குமங்கும் செல்லும் வக்கீல்களும், முறைப்புடன் நகரும் காக்கிச்சட்டைகளும் அவர்களுக்குப் பயந்தமாதிரி நடிக்கும் குற்றவாளிகளும் இவனை மிரள வைத்தார்கள். அம்மா,பாட்டியுடனும் யாரோ ஒரு முரட்டுமீசை ஆளுடனும் பேசிக்கொண்டிருந்தாள். அவனை இவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

‘அப்பா வந்தாலாவது ஜாலியா பைக்கில ஒரு ரவுண்டு போய்ட்டு அப்படியே மேரி பிரவுன் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கலாம்.’

அப்பாவைப்பத்தி நினைக்கையில் அவனுக்கு அழுகை வந்தது. அப்பா வீட்டுக்கு வந்து பல நாட்களாகியிருந்தன.

முன்னெல்லாம் செல்லக்குட்டியென்று இவனை முதுகில் யானைமாதிரி சுமந்து வீடு முழுக்கச் சுற்றி வருவார் அப்பா. என்னையும் சுமக்கணும்னு அம்மா முரண்டு பிடிப்பா. அப்பா அவளையும் சுமப்பதுபோல கவுத்துவிட்டுருவாரு. அம்மா பொய்க் கோபத்துடன் அப்பாவைத் துரத்த அப்பா வீட்ட சுத்தி ஓடுவாரு. பின்னர் ரெண்டு பேரும் மாறி,மாறி இவனுக்கு முத்தம் கொடுப்பாங்க.

திடீரென்று அம்மா இவன் கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. கறுப்புக்கோட் போட்ட நெறையப்பேரு உட்கார்ந்து இருந்தாங்க. உயரமான மேடையில இருந்த ஒரு கறுப்புக்கோட்டுத் தாத்தா அம்மாவப் பாத்து என்னமோ கேட்டாரு.அதுக்கு அம்மாவும் இங்கிலிஷ்ல என்னமோ சொன்னாங்க. இவனையும் அவருக்குத் தெரியும்படியா நிறுத்தினாங்க.

அப்பத்தான் அவன் எதிர்ல இவங்களமாதிரி ஒரு கூண்டுல அப்பா நிக்கிறதப் பாத்தான்.

‘அப்பா’ 

கையைக் காலை ஆட்டி ஜாலியாகக் கூச்சல் போட்டதை பக்கத்திலிருந்த அனைவரும் ரசித்தார்கள், அம்மாவைத் தவிர.

இவனை இடுப்பில் கிள்ளி, பார்வையால் அக்னி கக்கினாள்.

ஆனால் அப்பா இந்தப் பக்கம்கூடத் திரும்பாதது இவனுக்குக் கவலையளித்தது.

ஒரு வழியா வெளியே வர ரொம்ப நேரம் ஆச்சு.

அப்ப அவன் அப்பாவப் பக்கத்தில பாத்தான்.ஒரு நொடி இருவர் கண்களும் சந்தித்தன. 

அதில் கொஞ்சம் பரிவு தெரிந்தது.

‘அப்பா’ 

என அவன் விளித்து அந்தப் பக்கம் போக எத்தனிக்கையில் முதுகில் சுள்ளென்று அடி விழுந்தது.

அடி தாங்காமல் அப்பாவென வீரிட்டான்.

அப்பா திரும்பி அம்மாவைத் திட்டினார்.

அம்மாவின் உதவிக்குப் பாட்டியும் மற்றும் பலரும் வந்தனர். அப்பாவைத் திட்டினர்.

அந்தச் சண்டையில் இவனை எல்லோரும் மறந்துபோனார்கள்.

வஷிஷ்ட் அழுதான்.

அடியைவிடப் புறக்கணிப்பு பலமடங்கு வலித்தது.


(தொடரும்)


2 comments:

  1. ஒரு விவாக ரத்தா. அதுவும் சிறுவன் பார்வையில் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete