Monday, February 29, 2016

அப்பா வருவாரா? - 10

அத்தியாயம் - பத்து

ஷங்கர் : எனக்கு எப்பவுமே என் சந்தோஷம்தாங்க முக்கியம். அதுக்கு தடையா யாரு வந்தாலும் அந்தத் தடைய உடைப்பேன். மகா எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருந்தாலும் என் சிறுபிராயத்தில என் குடும்பமே என்னைக் குத்திக் காட்ட ஒரே காரணமா இருந்திருக்கான். அதனால நான்தான் அவனை அந்தப் பொண்ணோட மோட்டார் ரூமில வச்சு பூட்டிட்டு வெளியே கிடந்த வைக்கைப் போருக்குத் தீ வச்சிட்டு ஓடினேன். அந்தத் தீய அணைக்க வந்தவங்க கிட்ட அவன் வசமா மாட்டிக்கிட்டான். அப்படியும் என் மனசுல இருந்த வெறுப்பு அடங்கல்ல. சென்னையில நான் காலூன்ற அவன் உதவினான். ஆனா அவன் மனைவி, குழந்தையோட சந்தோஷமா இருப்பது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. அதுக்கும் வேள வந்திச்சு. குடும்பத்தப் பிரிச்ச பிறகு அவன் மனைவியால எனக்கு எந்த உபயோகமும் இல்ல. அதில்லாம குழந்தை வேற எக்ஸ்ட்ரா லக்கேஜ்.  டுபாய்ல நல்ல வேல கெடச்சி பறந்து வந்துட்டேன். இனி ஒரு நல்ல வெளிநாட்டுப் பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி அங்கே போய் செட்டில் ஆவதுதான் என் குறிக்கோள்.

மாளவிகா : .ஷங்கர் இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவேயில்ல. வெளியூருக்குப் போய் செட்டில் ஆவலாம்னு சொல்லிட்டிருந்தான். இவன் மட்டும்தான் நமக்குக் குழந்தை அப்பிடின்னு வேற சொல்லிட்டிருந்தானே? எல்லாம் காரியத்த முடிக்கிறதுக்குத்தானா? இப்ப என்ன பண்றதுன்னு தெரியல்லயே? அதுக்குத் தீர்வு குடுக்கிறேன்னு வந்த மூர்த்தி, சலீம், க்ரிஷ் எல்லாருமே அவனவனுக்குத் தீர்வு தேடிட்டு ஓடிட்டானுங்களே? என் மூளை ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிச்சு? அவனப் பழி வாங்கிறேன்னுட்டு என்னையே நான் பழி வாங்கிட்டேனோ? இப்ப ஆஃபீஸ்லயும் பேரு கெட்டுப் போச்சு. இந்த அம்மா வேற எப்ப பார்த்தாலும் தொண தொணண்ணு எதையாவது சொல்லிக் குழப்பிக்கிட்டே இருக்கு. இப்ப என பண்ணறதுன்னு தெரியல்லியே?

சரோஜினிதேவி : மகா ஐயாவைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போனேன். போய் ரூம் கதவ மூடிட்டு ஓன்னு அழுதேன். இவர் குரல் கேட்டு வந்து தெறந்து பார்த்தேன். என் கண்ணு கலங்கியிருப்பதைப் பார்த்திட்டு ஏம்மான்னு பதறிட்டாரு. நடந்த விஷயத்த அவருகிட்ட சொன்னேன். பொறுமையா எல்லாத்தையும் கேட்டாரு. ஒண்ணுமே சொல்லல்ல. மறுநாள் காத்தால என்னைக் கெளம்பச் சொன்னாரு. எங்கன்னு கேட்காம நானும் கெளம்பினேன். போற வழியிலதான் மகா ஐயாவோட சம்சாரத்தப் பார்க்கப் போற விஷயத்த சொன்னாரு. எனக்கு கண் கலங்கிடிச்சு. இந்த மனுஷன் என் கிட்ட சொல்லாம எல்லாத்தையும் நேத்து இரவே பேசி முடிவு பண்ணிட்டாரேன்னு பெருமையா இருந்திச்சு. அந்தம்மா அழகா, அம்சமா கண்ணெல்லாம் சோகமா இருந்துச்சு. நாங்க சொன்னதப் பொறுமையாக் கேட்டுச்சு. தான் தப்பு பண்ணினத முழுமனதோட ஏத்துக்கிச்சு. குழந்தைய ஹாஸ்டல்ல விட்டிருக்கேன்னு குற்றவுணர்ச்சியோட சொல்லிச்சு. பாவம். நல்லது நடக்கும்னு நம்பிக்கையோட பேசிட்டு வந்தோம்.

மகாதேவன் : சரோஜினியோட கணவர் என்ன வந்து பார்த்துப் பேசினாரு. ரொம்பத் தெளிவா இருந்தது அவர் பேச்சு. தன் மனைவி பற்றி ரொமபவும் பெருமையாப் பேசினாரு. என் மேல அவங்களுக்கு இருக்கிற மரியாதை பற்றியும், இப்ப நான் இருக்கிற நிலமையால மனசு படுற கஷ்டம் பற்றியும் சொன்னாரு. முக்கியமா என் குழந்தை பற்றிப் பேசினாரு. எனக்கு கண்ணில கண்ணீர் வந்திருச்சு. நெருங்கி வந்து உரிமையோட தோள் மேல கை போட்டு ‘நான் இருக்கேன், பாத்துக்கிறேன்’ அப்பிடின்னு தீர்மானமா சொன்னாரு. எனக்கென்னமோ என் வாழ்க்கை திரும்பியும் துளிக்கும்னு நம்பிக்கை வந்திருச்சு.

வஷிஷ்ட் :  அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தா. அவ கூட ஒரு அங்கிளும் ஆன்டியும் வந்தாங்க. இவங்க ரெண்டு பேரையும் பார்த்தோண்ணே எனக்கு ரொம்ப நாளாப் பார்த்துப் பழகிய மாதிரி இருந்திச்சு. என்னைக் கூப்பிட்டு மடியில் உட்கார வச்சுக்கிட்டு என் கிட்டயே ரொம்ப நேரம் பேசுனாங்க. எனக்கு காட்பரீஸ் சாக்லேட் குடுத்தாங்க. எனக்கு என்ன, என்ன புடிக்கும்னு கேட்டாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் மனசு ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. நான் எனக்கு அப்பாவைத்தான் ரொம்பவும் புடிக்கும்னு சொன்னேன். மற்ற நாட்களைப் போல அம்மா அதுக்கு என்னைத் திட்டி, அடிக்காம அமைதியாச் சிரிச்சிட்டு இருந்தாங்க. உன் ஆசை நிறைவேறப் போகுது கண்ணா அப்பிடின்னு அந்த ஆன்டி சொன்னாங்க. என மனசுல ஒரு கேள்வி வந்திச்சு. தயங்கித் தயங்கி நான் கேட்டேன்

      ‘அப்பா வருவாரா?’


(முற்றும்)


பி.கு

விவாகரத்தான குடும்பங்களில் அல்லல்படும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுத் தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


2 comments:

  1. இரண்டு மூன்று நாட்கள் வேறு நிகழ்ச்சிகளில் மும்முரமாய் இருந்ததில் பதிவுப் பக்கம் வரவில்லை. இப்போதுதான் வருகிறேன் எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தேன் துவக்கத்தில் இருந்த தெளிவு போகப் போகக் குறைந்தது போல் தெரிகிறது. கதை சொல்லும் விதமும் வெகுவாக மாறி இருந்தது. எண்ணியவற்றை எல்லாம் உடனே சொல்லி முடித்து விடும் வேகம் தெரிந்தது இன்னும் சற்று நிதானமாகச் சொல்லும் முறையைக் கையாண்டிருக்கலாமோ என்று நினைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் உமேஷ்

    ReplyDelete
  2. நன்றி ஐயா, தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவு உற்சாகம் அளிக்கிறது. கதை எழுதுவது எனக்குப் பரீட்சார்த்த முயற்சி, உங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றி இனிவரும் படைப்புகளைச் செப்பனிட முனைகிறேன்.

    இன்னும் இரு கதைகள் உள்ளன. அவற்றையும் தொடர்ந்து பதிவிறக்கம் செய்கிறேன்.

    ReplyDelete