Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 7

அத்தியாயம் - ஏழு

நந்தலால் கிஷோரும், ரூபேஷ் கன்னாவும் மற்றும் பெயர் தெரிந்து கொள்ள அவசியமில்லாத நால்வரும் மங்களூர் மெயிலில் ஒரு குழுவாகப் பயணித்துக்கொண்டிருந்தார்கள். வண்டி ஈரோடு தாண்டிப் பயணித்துக் கொண்டிருந்தது. சென்னையில் குண்டு(கள்) வெடித்ததும் சந்தேக வட்டம் வழக்கம்போல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள், ஈழப்போராளிகள் எனக் குறுகியது. யாருக்கும் கன்னடம் பேசும் இந்து இளைஞர்கள் மீது துளியும் சந்தேகம் எழவில்லை.

விவேகானந்தன் ஃப்ளாட்டில் இடம் கிடைத்த நாள் முதல் 4 நாட்களாகத் தீயாக வேலை பார்த்திருந்தார்கள். மின்னணுவியல் பட்டதாரிகளான இருவரும் தமிழர்கள்மீது தீராச் சினம் கொண்டவர்கள். தமக்கு வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் அந்த மதராசிகளுக்குப் போவதைக்கண்டு வெதும்பியவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் பீதியலையைக் கிளப்ப அமெரிக்க வாழ் கன்னடர் ராஜப்ப கவுடா பொறுக்கியெடுத்த அறுவர் கொண்ட குழு.

இவர்களின் கோபத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளப் பணிக்கப்பட்டவர், இந்த ஆபரேஷனின் மூளை யாரென்று பின்னர் பார்ப்போம்.

இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை ஸ்மார்ட் ஃபோன்களில் ப்ளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பதித்து, அதை இயக்கும் போது வெடிக்க வைப்பது.

மொத்தம் ஆறு ஐ ஃபோன்கள் இவர்கள் வந்து சேர்ந்த ½ மணியில் கொடுக்கப்பட்டன. இன்னும் 15 நிமிடங்களில் அதில் பதிக்கப்படும் பொருட்கள் வந்து சேர்ந்தன. இரவு பகலாகத் தொடர்ந்து தமக்கு ஏற்கெனவே கற்பிக்கப்பட்டிருந்த தொழில்நுட்பத்தை அழிவு வேலைக்குப் பயன்படுத்தினர்.

இது எதுவுமே தெரியாமல் விவேகானந்தன் டீ வியில் உலக கோப்பை கால்பந்து மாட்ச் பார்த்துக் கை தட்டிக்கொண்டிருந்தான்.

வேலை முடிந்ததும் அந்தத் தகவலும் உரியவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த இருவர் தவிர மேலும் 4 பேரின் முகவரி மென் தகவலாக வந்து சேர்ந்தது.

அந்த நால்வரிடமும் பொருள் கையளிக்கப்பட்டது.

அடையாறு, தி.நகர், வடபழனி, கோயம்பேடு, புரசைவாக்கம், பாரிமுனை என மக்கள் கூட்டம் அலைமோதும் பேரூந்துகளில் அந்த அறுவரும் வெவ்வேறாக ஏறினார்கள். கூடவே அந்த நவீன கைபேசிகள்.

மிகவும் லாவகமாக அவற்றை நழுவ விட்டு விட்டுச் சத்தமில்லாமல் இறங்கினார்கள். உடனே அந்தத் தகவலும் பரிமாறப்பட்டது.

புதிதாக மொபைல் ஒன்றைக் கண்டெடுத்த அறுவரும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஆனால் புதுப்பொருள்மீது, அது தன்னுடையதில்லையானாலும், மிகுந்த பிரேமம் கொண்டவர்கள்.

மெதுவாக அதை மறைத்து எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்துக்குப் போய் அதை இயக்கினர்.

உருக்குலைந்து போயினர்.



(தொடரும்)

No comments:

Post a Comment