Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 5

அத்தியாயம் - ஐந்து

ஏய் ஜோதி, இங்க கொஞ்சம் வாடி!’.

அந்த செல்லைப் பார்த்ததுமே ஜோதி முகம் பரவசமானது.

‘நல்லாருக்கே, எனக்குத் தாடி’

என்று அதைப் பறித்தாள். உயிரற்று இருந்த அதை எப்படி உயிரேற்றுவதென்று யோசித்தாள்.

‘இரு வரேன்’

திடீரெனக் காணாமல் போனாள்.

வேணி கலவரமானாள். இவளுக்கு எப்பவும் ஒரே விளையாட்டுத்தான். ஜோதி சில நொடிகளில் எங்கிருந்தோ ஒரு சார்ஜருடன் தோன்றினாள். அந்த மின்னிணைப்பினால் செல் உயிர் பெற்றது. அக்காவைவிட இவள் ரொம்ப விவரமாகவே இருந்தாள். உள்ளே நுழைந்து பாட்டு,படம் என சகலத்தையும் நோண்டினாள்.

‘ஏய், இதப் பார்றி’

என்று எதையோ காட்டினாள். அவள் காட்டியதைப் பார்த்தாள் வேணி.வித விதமான போஸ்களில் பெண்களை ரொம்ப ஆபாசமாகப் படம் பிடித்திருந்தது. திடீரென ஜோதி பரபரப்பானாள்

‘ஏய், அந்த சேட்டு வீட்டுப் பொண்ணுடி. வேல பாக்கிற வீட்டிலேயே கைவரிசையக் காட்டிட்டான்டி’

வேணிக்கு வெறுப்பாக இருந்தது. இவ்வளவு மட்டமானவனா இருப்பான்னு கனவிலும் நினைக்கவில்லை.

‘மொத வேலையா இத அவன் மூஞ்சில தூக்கி எறிஞ்சிட்டுத்தான் மறு வேல’
வேணி ஆவேசமானாள்.

‘அப்படிப் பண்ணுனா பத்தாதுடி. இவனை போலிசில புடிச்சுக் குடுக்கணும்’
என்றாள் ஜோதி.

அடுத்து புத்திசாலியான ஜோதி முட்டாள்தனமான காரியம் செய்தாள்.

நேராக 100 எண்ணுக்கு ஃபோனைப் போட்டாள்.

காவல்துறைக்கட்டுப்பாட்டறையில் அவள் புகார் பதியப்பட்டது. உடனே அவள் வீடு இருக்கும் பகுதி காவல்நிலைய அதிகாரிக்கு தகவல் பறந்தது.

2 மணி நேரத்தில் ஹெட் கான்ஸ்டபள் பலராமன் வேணி வீட்டுக் கதவைத் தட்டினார்.

ஜோதியும், வேணியும் விசாரிக்கப் பட்டார்கள். ஃபோன் காவல்துறை வசமானது.

தேவைப்பட்டால் ஸ்டேஷனுக்கு வர வேண்டியிருக்கும் என்றுவிட்டுத் தலைமைக் காவலர் புறப்பட்டார்.

காவலர் போகவும் அம்மா நுழையவும் சரியாக இருந்தது.

அன்றைய இரவு மூன்று ஜீவன்களுக்கும் கண்ணீரிலே முடிந்தது.



(தொடரும்)

No comments:

Post a Comment