Saturday, February 20, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 6

அத்தியாயம் - ஆறு

சென்னையில் அன்று 6 இடத்தில் குண்டு வெடித்தது.

வரலாறு காணாத உயிர் மற்றும் பொருள் சேதம். மாநிலமே அதிர்ச்சியில் உறைந்தது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இப்படியொரு தாக்குதல் நடத்தியது எல்லா ஊடகங்களிலும் விரிவாக அலசப்பட்டது.

காவல்துறையின் மெத்தனமென முதல்வர் தொலைக்காட்சி உரையில் கண்டனம் தெரிவித்தார். அமைதிப்பூங்காவான தமிழகத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவியமைக்கு எதிர்க்கட்சிகளைச் சாடினார்.

குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு, பட்டி தொட்டியெங்கும் ஏழைபாழைகளைத் துளைத்தெடுத்தார்கள்.

எஸ்.பி. முருகானந்தம் பயங்கர டென்ஷனில் இருந்தார். முதல்வரின் கோபம் கமிஷனர்மீது திரும்பி, அது அங்கிருந்து அடுத்த கட்டத்துக்குத் தாவியதின் பலன்.

தன் ஏரியாவில் குண்டு வெடித்தது தன் பதவி உயர்வுக்கு உலை வைக்கும் என்று முருகானந்தனுக்குப் பட்டது.

‘அடிங், யாருடா இந்த நாய்ங்க? ஏன்டா இங்க வந்து இந்த எழவப் பண்ணினாய்ங்க?’

பொத்தாம் பொதுவாய் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏட்டையா இளையராஜா பதில் சொன்னார்.

‘ஐயா, வெளி மாநிலத்தவனுங்க இங்க வேலைக்கு வரத்தொடங்குனப்பவே இந்தப் பயம் இருந்துச்சய்யா. இப்ப உண்மையாலுமே பெருசா வெடிச்சுடிச்சு’

பல குழுக்களின் தலைமைக் குழுவான இவர்கள் டீ சாப்பிட அருகில் உள்ள கடையில் ஒதுங்கினார்கள்.

வடை,போண்டா,டீயென இலவசமாக உள்ளே போய்க்கொண்டிருந்ததைக் கவலை தோய்ந்த முகத்துடன் முதலாளி பார்த்துக்கொண்டிருந்தார்.

பாதுகாப்பு வலையமாக சுற்றிலும் மஞ்சள் நாடா சுற்றப்பட்டு குண்டு வெடித்த இடம் காணப்பட்டது.

அவசரஊர்திகள், தீயணைப்பு வண்டிகள், போலீஸ் வண்டிகள் என எங்கும் தென்பட்டன.
பத்திரிக்கைக்காரர்களைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.

கைரேகை நிபுணர்கள் தடயங்களுக்காகச் சல்லடை போட்டுத் தேடினார்கள்.

உயிரிழந்தவர்களின் உடல் எச்சங்கள் அவசர ஊர்திகளில் ஏற்றப்பட்டன. அதில் தற்கொலைப்படையாளி எனச் சந்தேகப்பட்ட ஒருவனின் உருக்குலைந்து போன தலையும் அடங்கும்.

‘சரி, ராஜா இதப்பாத்துக்க. நான் ஃபாரென்சிக் லாப் வரைக்கும் பாதுகாப்புக்குப் போய் வர்றேன்’

முருகானந்தம் ஒரு உப குழுவுடன் அவர் வண்டியில் அவசர ஊர்தியைப் பின் தொடர்ந்தார்.

சம்பவம் நடந்து 12 மணி நேரமாகிய பின்னும் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருந்தன. கமிஷனர் சாந்தாராமன் பிரஸ் மீட்டில் இருந்தார். தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகச் சொன்னார். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் பிடித்து விடுவதாகவும் கூறி விடைபெற்றார்.

      ‘என்னவெல்லாம் பொய் சொல்லித் தப்பிக்க வேண்டியிருக்கு’

அலுத்துக்கொண்டார்.(தொடரும்)

No comments:

Post a Comment