Thursday, March 3, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 3

அத்தியாயம் - மூன்று

சிகரெட்டை ரெண்டு இழுப்பு இழுத்தார்.

வெறுப்பாக இருந்தது.

அமைச்சர் (சின்ன)வீட்டு நாய் தொலைந்து போய் 8 மணி நேரம் ஆகியிருந்தது.

துணைவியார் விட்ட டோஸில் அமைச்சர் ஃபீல் ஆகி, அதை காவல்துறைமீது திருப்பிவிட, ஜுஜிலிப்பா சாரை (அப்படித்தான் சொல்லிக்கிறாங்க!) கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைகளில் ஒன்றில் நம்ம பி.சியும் அடக்கம்.

மறுபடியும் பையில் இருந்து அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தார்.

‘வோடாஃபோன் விளம்பரத்தில வர்றதோட உறவுக்காரனா இருக்கும்போல’… (மைண்ட் வாய்ஸ்)

இதன் விலை பல ஆயிரங்கள்னு சொல்லிக்கிட்டாங்க. அமைச்சருக்கு வேண்டாத யாரோ இதைக் கடத்தியிருக்கலாம்னு சந்தேகம்.

டீ குடித்துக் கொண்டே படத்தை மடக்கி உள்ளே வைத்தார்.

பணம் குடுக்க பர்சை எடுப்பதுபோல பாவனை பண்ணினார், நாயர் கையாலும் பல்லாலும் வேண்டாமென மறுத்தார்.

மஃப்டியில் இருந்தாலும் பேன்ட்டும், ஷூவும் தன்னை அடையாளப்படுத்தின.

சுற்றுமுற்றும் ஒரு நோட்டம் விட்டார்.

லுங்கியை மடித்துக் கட்டியிருந்த இருவர் அவசரமாக இறக்கி விட்டனர். சைக்கிளில் வந்த ஒருவன் கீழே இறங்கி ஒரு சலூட் வைத்தான். முரண்டு பிடித்த ஒரு வாண்டுப் பையன் சமத்தாக அம்மா கையைப் பிடித்துக் கொண்டு நடக்கலானான்.

      ‘பரவாயில்ல, வெளியுலகத்தில இன்னும் கொஞ்சம் மரியாத இருக்கு….’

காலையிலிருந்து வெளியே சுற்றிக் கொண்டு இருந்ததால் டீ உள்ளே போனதும் இயற்கை அழைத்தது.

மெதுவாக அருகே இருந்த சந்துக்குள் சிறிது தூரம் சென்று ஜனநடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள சுவரை நனைத்தார்.

சுவருக்கு மறுபக்கம் குரல் கேட்டது.

‘டேய், இவன் ஒரு புள்ளப்பூச்சிடா. எவனையோ தூக்க நெனச்சு குறி தவறிடிச்சு. இங்க வெளிய விட்டா திரும்பவும் வந்து நம்மள மாட்டி வுட்டுருவான். தூக்கி வண்டில போட்டு ஊர் எல்லையில கொண்டுபோய்ப் போட்டுருவோம்’

‘இல்லண்ணே, இவன வச்சு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறப்போம். இன்னொருத்தன் என்னைக்கு மாட்டுவான்னு தெரியாதுல்ல’

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

மெதுவாக அவர்கள் பேசிய வீட்டை அடைந்தார்.

இருவர் அந்த வீட்டை பூட்டி விட்டு வெளியேறுவதைக் கண்டார்.

அவர்கள் அறியாதவாறு பின்தொடரலானார்.



(தொடரும்)

2 comments:

  1. படத்தை வைத்துக்கொண்டு ஜுஜிலிபாவைக் கண்டு பிடிக்க முடியுமா. தலையில் அடிவாங்கி மயங்கியவர் யார் ?

    ReplyDelete
  2. கதை தொடரும், பொறுமை காக்கவும்.

    ReplyDelete