Sunday, March 20, 2016

தாம்பரம் டு பீச் - 4

நாலு    -      பல்லாவரம்

08 : 16

அன்வர் ரயில் நிலையத்தினுள்ளே வந்தான். ரயில் வரும் நேரம் நெருங்கி விட்டதை அங்குள்ள மக்களின் பரபரப்பு உணர்த்திற்று. மெதுவாக நகர்ந்து நடைமேடையில் நின்றான்.

அன்று காலை 6 மணிக்கு மேலதிகாரியிடமிருந்து ஃபோன் வந்தது. முக்கியமான விஷயமாகத் தன்னை வந்து பார்க்குமாறு சொல்லியிருந்தார். உடனே கிளம்பி வண்டியை கொண்டு போய் மெக்கானிக்கிடம் விட்டு விட்டு வரவே நேரம் சரியாக இருந்தது.

என்னவாயிருக்கும் என்று மனம் யோசித்தது.

அன்வர் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணி புரிந்தான். சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்தல் அவன் பணிகளில் ஒன்று. அதில் வரும் வருமானம் ஊரில் அம்மாவையும், தம்பி தங்கைகளையும் வாழவைத்தது.

தம்பி காலேஜ் போய்க்கொண்டிருந்தான். கெமிகல் எஞ்ஜினீயரிங் கடைசி வருடம். தனியார் கல்லூரியில் சிபாரிசு மூலம் இடம் கிடைத்தும் நன்கொடை கொடுக்க வீட்டுப் பத்திரத்தை வைக்க வேண்டியாதாயிற்று. படித்து முடித்தவுடன் வளைகுடா நாடொன்றுக்குப் போவதே அவன் குறிக்கோள்.

‘அங்கெல்லாம் நல்ல சம்பளத்தில வேல கெடைக்கும் உம்மா. என்கூட படிக்கிற சலீமோட மாமா அங்கதான் இருக்காரு. போன வாட்டி ஊருக்கு வந்தப்ப என்னையப் பார்த்துப் பேசினாரு. கண்டிப்பா உதவி செய்யறேன்னு சொல்லியிருக்காரு’

தம்பி வாசிம் முன்னொரு நாள் உம்மாவிடம் பேசியது காதில் ஒலித்தது.

அடுத்து தங்கை யாஸ்மின். பத்தவதோட படிப்ப நிறுத்த வேண்டியதாச்சு. பாவம். படிப்பில ரொம்ப ஆர்வமா இருந்தா. ஊர்ல பொண்ணுங்களப் படிக்க வைக்கிற வழக்கம் இல்லன்னு உம்மா சொல்லிட்டாங்க. அன்னைக்கு முழுக்க அவ அழுதா.

‘ஏன்னா, நானும் படிச்சா ஏதாச்சும் வேலைக்குப் போகலாமில்ல. அப்ப அதில வர்ற வருமானத்தில நானும் கொஞ்சம் வீட்டுச் செலவுகள ஏத்துக்கிடலாமேண்ணா? நீ பாவம்னா, தனியாளாக கஷ்டப்படுறியேண்ணா…’

ஃபோனில் அவள் பேசப்பேச இவனுக்கு அழுகையைக் கட்டுப்படுத்தக் கஷ்டமாகியது. அப்புறம் பேசுரேம்மான்னு சொல்லிட்டு பாத்ரூமில போய் தண்ணியத் தொறந்து விட்டுட்டு அழுதான். என்ன ஒரு பாசமான குடும்பம் நமக்கு அமைஞ்சிருக்குன்னு பெருமையா இருந்துச்சு.

இப்ப கல்யாணத்துக்கு ரெடியாகி நிக்கிறா. உம்மாவுக்கு சொந்தத்தில பசங்க இருக்காங்க. ஆனாலும், செலவுக்கு பணம் வேண்டும்.

‘ஏம்பா, தம்பி. நீ இத மனசுல போட்டுக் கொழப்பிக்காதையா. அல்லா வழி காட்டுவாரு. உடம்பப் பாத்துக்கப்பா. வேளா வேளைக்குச் சாப்பிடு ராஜா. உன் முகத்தப் பார்க்க ஆசையா இருக்கப்பா.’

நேற்று இரவு அம்மா பேசியது மனதில் ஓடியது.

வாப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனை வந்தது. இப்ராஹிம் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக இருந்தார். மிகவும் நேர்மையானவர். குடும்பத்துக்காகச் சிரமப்பட்டு உழைத்தார். மனைவியும் இரண்டு குழந்தைகளுமே அவர் உலகம். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். ஒரு நாள் இரவு படுத்தவர் மறுநாள் துயிலெழாமல் மீழாத்துயில் கொண்டு விட்டார்.

அப்பொழுது அன்வருக்குக் கல்லூரியில் கடைசி வருடம். பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. வாப்பாவின் இழப்பு அவனை நிலைகுலைய வைத்து விட்டது. நல்ல வேளையாக படிப்புக்குப் பங்கம் விளையாமல் சில நல்ல உள்ளங்களின் உதவியினால் கல்லூரிப்படிப்பை முடித்தான். ஆனால், தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற மதிப்பெண்கள் போதவில்லை. எம்.ஏ (குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி) படித்திருந்ததினால் தனியார் துப்பறியும் நிறுவனம் அவனைத் தன் வசப்படுத்திக்கொண்டது.

ரயில் வந்தது



(தொடரும்)

2 comments: